If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
முடிவுரை

‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்' என்னும் இந்த ஆய்வு, “தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவம், சித்தர் நெறி, தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்” ஆகிய ஐந்து இயல்களாகக் கொண்டு ஆராயப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த ஆய்வின் மூலம் கண்டறிந்த முடிவுகள், உண்மைகள், தமிழ் மருத்துவம் தொடர்பாக மேற்கொள்ளப் பெற வேண்டிய செயல் திட்டங்கள், ஆய்வுத் தலைப்புகள், பரிந்துரைகள் ஆகியன இந்த இயலில் இடம் பெறுகின்றன.

இயல்2

பண்டைக்காலந் தொட்டே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருளையும் பயன்படுத்தியுள்ளனர். சிந்து சமவெளி அகழாய்வில் கண்டெடுக்கப்பெற்ற சிலாசித்து, மான் கொம்பு, பவழம், தாளகம் ஆகியன தமிழ் மருத்துவத்தில் மருந்துப் பொருளாகப் பயன்படுவன.

சிந்து வெளியில் மருந்து

சிந்து சமவெளி மக்கள் உயிர்க்கொல்லி மருந்தாக வேம்பு, வேம்பினால் தயாரிக்கப்பட்ட பொருள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள், அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பயன்படுத்தியுள்ளனர். செம்பு, அறுவை மருத்துவத்துக்கு ஏற்ற உலோகம் எனவும், அதனால் பக்க விளைவுகள் ஏற்படாது எனவும் அறிவியலார் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இதனால், நாகரிகத்தின் தொடக்கக் காலமாகிய கி.மு. 3500–க்கும் முன்பே மருந்து, மருந்துப் பொருள், அறுவை மருத்துவம் ஆகியவை தமிழ் மக்களால் அறியப்பட்டவை என்னும் வரலாற்று உண்மை அறியப்பட்டுள்ளது.

சங்க இலக்கியத்தில்மருத்துவக் குறிப்புகள்

தொல்காப்பியத்தில் வேம்பு, கடுக்காய் என்னும் இரண்டு மருந்துப் பொருள்களின் குறிப்புகள் காணப்படுகின்றன. வேந்தர்கள் சூடிய அடையாளப் பூக்கள் மருத்துவப் பூக்களாக இருந்திருக்கின்றன.

இரவம், வேம்பு ஆகிய இரண்டும் மனைகளின் தூய்மைக்கும், நோய்க்கிருமிகளைக் கட்டுப் படுத்துவதற்கும் பயன்பட்டிருக்கின்றன.

அறுவை மருத்துவம்

போர் வீரர்களின் மார்பில் ஏற்பட்ட புண்கள் அறுவை மருத்துவ முறையால் தைக்கப்பட்டிருக்கின்றன. புண்களுக்கு மருந்துடன் கூடிய பஞ்சு வைத்துக் கட்டும் பழக்கம் இருந்திருக்கிறது.

மருத்துவத்துக்கு மருந்தாகப் பயன்பட்ட மருத்துவத் தாவரங்கள் பாதுகாக்கப் பட்டிருக்கின்றன.

மருத்துவத்துக்குரிய செயல்களான மருந்து தயாரித்தல்; மருந்து ஊட்டல்; அறுவை மருத்துவம் செய்தல்; புண்ணுக்கு மருந்து தோய்த்த துணியால் கட்டுதல்; கணப்பு ஆடையால் போர்த்துதல்;நோயாளியின் நிலைமையை அருகிலிருந்து கண்காணித்தல் போன்றவை நிகழ்ந்திருக்கின்றன.

உடலில் தோன்றும் கட்டிக்கும், புண்களுக்கும் சூட்டுக் கோலால் சுட்டு காயத்தை ஆற்றுகின்ற முறையும் இருந்திருக்கிறது.

இசை மருத்துவம்

நோயின் கடுமையைத் தணிக்கவும், நோயினால் துன்பப்படும் நோயாளியை ஆற்றுப் படுத்தவும், இசையும், இசைப்பாடலும் பயன்பட்டிருக்கின்றன.

இவை போல, குழந்தை மருத்துவம், நெஞ்சக நோய் (கூ.ஆ) மருத்துவம், ஒட்டு மருத்துவம் ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன.

மருத்துவன்

மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்ட மருத்துவன் தாமோதரனார், மருத்துவன் நல்லச்சுதனார் ஆகிய இரு புலவர்கள் அறியப்பட்டுள்ளனர். மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற புலவராகக் குறிஞ்சிக் கபிலர் காணப்படுகின்றார். ஆய், எயினர் மருத்துவக்குடியினர் எனக் கண்டறியப் பட்டனர்.

பெண் மருத்துவர், ‘மருத்துவி’ என்றும், ஆண் மருத்துவர், ‘மருத்துவன்’ என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டனர்.

மருத்துவ நூல்கள்

மருந்தின் சிறப்பினைக் கருதி, மருந்தின் பெயரால் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி என்னும் நூல்கள் இயற்றப் பெற்றன.

சங்கப் புலவர் நற்றத்தனர் இயற்றிய மருத்துவப் பாடலும், இரண்டு மருத்துவ ஆற்றுப்படைப் பாடல்களும் கிடைத்துள்ளன.

திருக்குறளின் மருந்து அதிகாரத்தில் குறிப்பிடப்படும் ‘நூலோர்’ என்னும் சொல் மருத்துவ நூல் வல்லோரைக் குறிப்பிடுவதாகும். சங்க இலக்கியங்கள் போல மருத்துவ நூல்களும் இருந்திருக்கின்றன. அவை, நமக்குக் கிடைக்காமல் போனதற்குக் காரணம், சங்க நூல்கள் தொகுக்கப்பட்டது போல, மருத்துவ நூல்கள் தொகுக்காமல் விடுபட்டதேயாகும்.

திருக்குறளில் மருத்துவம்

திருக்குறளின் மருந்து அதிகாரம், சங்க கால மருத்துவத்தைத் தொகுத்துக் கூறுகிறது. அவை, மருந்து, மருத்துவம், மருத்துவன், மருத்துவனின் துணைவன், மருத்துவ நூலோர், நோய், நோயாளி, நோய்க்கான காரணம், நோயில்லா நெறி ஆகியன.

நோயாளி, மருத்துவன், மருந்து, மருத்துவத் துணைவன் ஆகிய நான்கு உறுப்புகள் கொண்டதே மருத்துவம் என, வகுக்கப்பட்டுள்ளது.

வாதம், பித்தம், ஐயம் என்னும் மூன்று இயக்கங்கள் மிகுந்தாலும், குறைந்தாலும் நோய் தோன்றும் என்று கணித்துள்ளனர். நோயாளி, நோயின் அளவு, நோயின் காலம், மருந்தின் வகை, மருந்தின் தேவை ஆகியவற்றை அறிந்து செய்பவனை, மருத்துவனாகக் கருதினர்.

நோயில்லா நெறி

திருக்குறள் தொகுத்த மருத்துவச் செய்திகளில், நோயற்று வாழும் வழியாகக் கூறப்படும் உண்ணும் உணவு, மாறுபாடில்லாமல் உண்பது; உண்ட உணவு செரித்தபின் உண்பது; உடலின் தீயளவுக்கு ஏற்ப உண்பது ஆகியவை சிறப்பானவையாகும்.

உணவே மருந்து, மருந்தே உணவு

உண்ணும் பொருளே நோயாகவும். உணவாகவும் ஆகிறது. அந்த உணவுப் பொருளே மருந்தாகவும் ஆகிறது. உணவாகப் பயன்படும் பால், பழம், காய்கறி, கீரை, சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பூண்டு, பட்டை, ஏலம், கிராம்பு, வெந்தயம், வெங்காயம், இஞ்சி, எலுமிச்சை ஆகியவை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுபவை. சங்க காலத்துக்குப் பின், தமிழ் மருத்துவத்தை முழுவதும் கூறும் மருத்துவ நூல்களில் முதன்மையான நூல் திருமந்திரம் என்று அறியப்பட்டுள்ளது.

திருமந்திரம்

மரணத்தை வெல்வதற்குரிய அடிப்படைகளைக் கொண்டு சித்தமருத்துவம் உருவானது. மரணம், மறுபிறப்பு என்பவை சித்தர் கொள்கைக்கு மாறானவை. உயிர்; உயிரின் மூலம்; உடல் தத்துவம்; பஞ்சபூதக் கொள்கை; மருத்துவக் கொள்கை; மருந்தியல்; கற்பம்; நோயில்லா நெறி; யோகம்; ஞானம்; முத்தி; மரணமில்லாப் பெருவாழ்வு; வாழ்வியல் நெறி போன்றவை திருமந்திரம் கூறும் கருத்தால் அறியப்பட்டன.

திருமந்திரமும் அதனைத் தொடர்ந்து தோன்றிய சித்தர் இலக்கியங்களும் பல கோட்பாட்டு முறைகளை உருவாக்கி உள்ளன. அவை,

உயிரியல் கோட்பாடு; உடலியல் கோட்பாடு; பஞ்சபூதக் கோட்பாடு; மருத்துவக் கோட்பாடு; மருந்தியல் கோட்பாடு; வாழ்வியல் கோட்பாடு என்பவையாகும்.

சோழர்காலத்தில் மருத்துவம் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தது. அரசர்களால் மருத்துவம் பேணப்பட்டுள்ளது. மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, மாணவர் விடுதி, மருத்துவ உதவி, மருத்துவத் தொழிலாளர், மருந்து மூலிகைப் பயிர், மருத்துவக் குற்றத்துக்கு வழக்கு போன்றவை நடைமுறையில் இருந்துள்ளன.

சரபோஜி என்னும் மராட்டிய மன்னரின் ஆட்சிக் காலத்தில் மருத்துவச் சுவடிகள் பெரும்பகுதி திரட்டப்பட்டன. தன்வந்திரியின் பெயரில் அமைந்த மருத்துவமனையில், மருத்துவ ஆய்வு போன்றவை நிகழ்ந்துள்ளன. சரபோஜி மன்னரால் தொகுக்கப் பெற்ற மருத்துவச் சுவடிகள், சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சித்த மருத்துவ வளர்ச்சிக்காக நீதி அரசர் உஸ்மான் தலைமையில் குழு அமைத்து ஆராயப்பட்டது.

பனகல் அரசர் தன் ஆட்சிக் காலத்தில், சித்த மருத்துவப் பள்ளியை உருவாக்கிச் சித்த மருத்துவ வளர்ச்சிக்கு வித்திட்டார்.

சுதந்திரத்துக்குப் பின், மருத்துவச் சுவடிகள் திரட்டப்பட்டன. சித்த மருத்துவக் கல்லூரி, மருத்துவ மனை, மருந்து தயாரிப்புக் கூடம், மூலிகைப் பண்ணை, மருத்துவ நூல் வெளியீடு போன்றவை நிகழ்ந்தன. இவை போன்ற வரலாற்றுச் செய்திகள் இயல் இரண்டின் வாயிலாக ஆராயப்பட்டு விளக்கப்பட்டுள்ளன.

இயல்3

சித்த மருத்துவ நூலாசிரியர்கள்

திருமூலர் தொடங்கி யூகி முனிவர் வரையிலுள்ள சித்தர்களில் பலர் மருத்துவ நூலாசிரியர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் இயற்றிய 594 நூல்களும், 3000க்கும் மேற்பட்ட சுவடி நூல்களின் படிகளும் கண்டறியப்பட்டுள்ளன.

நூல்வகை

மருத்துவ நூல்களில் பெரும்பகுதி இலக்கிய வடிவில் அமைந்தவை. அவை, சிந்து, கும்மி, பள்ளு, காவியம், காப்பியம், சிந்தாமணி, சூடாமணி, கல்லாடம், திருமந்திரம், திருப்புகழ், சதகம், கரிசல், பிள்ளைத்தமிழ், உலா, கோவை, நிகண்டு போன்ற வடிவங்களில் அமைந்துள்ளன.

நூல் அமைப்பு

அனைத்து வகை யாப்பு முறைகளாலும் மருத்துவச் செய்யுள் வடிவங்கள் அமைந்திருக்கின்றன.

இயல்4

சித்த முறை மருத்துவர்கள் நோயை அறிந்து நோயின் மூலங்களைக் கண்டறிந்து அதன் பின்னரே மருந்தளித்திருக்கின்றனர்.

நோய்கள் எண்வகைத் தேர்வு முறைகளால் கண்டறியப் பட்டுள்ளன. அவ்வாறு கண்டறிந்த நோய்களின் எண்ணிக்கை 4448 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்கள் பத்தொன்பது வகையாகப் பிரித்தறியப் பட்டுள்ளன. அவை, வாதம், பித்தம், ஐயம், தலை, கண், பிள்ளை, பெண், மேகம், சருமம், புற்று, இரத்தம், இதயம் போன்றவை.

கற்பம், பற்பம், செந்தூரம், களங்கு, சூரணம், லேகியம் என அக மருந்துகள் முப்பத்திரண்டும், புற மருந்துகள் முப்பத்திரண்டும் தயாரிக்கப்படுகின்றன.

உலோகம், இரத்தினம், பாடாணம், உபரசம், சரக்கு என ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள் மருந்துப் பொருள்களாகப் பயன்பட்டன.

பன்முக மருந்து

நோய்கள் பல; மருந்து ஒன்று என்னும் பன்முக மருந்து முறை கூறப்பட்டுள்ளது. ‘பஞ்சபூதச் செந்தூரம்’ என்னும் அம்மருந்து, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது. ‘அகத்தியர் குழம்பு’ என்னும் மருந்து துணை மருந்துகளின் மாற்றங்களினால் நூற்றுப் பதினோறு நோய்களைக் குணமாக்குமென்று கூறப்பட்டுள்ளது. இவை, சித்த மருத்துவத்துக்கே உரிய சிறப்பாகக் காணப்படுகின்றன.

இயல்5

தமிழ் மருத்துவ நூல்கள் எளிமையான நடையும், நயமான சொற்களும் கொண்டவை. பயன் கலைகளின் முதன்மையான மருத்துவம், இலக்கியத்தரம் வாய்ந்தது. இலக்கியக் கூறுகளைக் கருவிகளாகக் கொண்டு நூல்களாக வடிக்கப்பட்டிருக்கின்றன.

மருத்துவ நூல்கள், உவமை, உருவகம், பழமொழி, குறிப்பு மொழிகள் ஆகியவற்றைக் கொண்டு பொருள் சிதைவு ஏற்படாதவாறு இயற்றப் பட்டிருக்கின்றன.

மருத்துவப் புலமை மிக்கவர்களால் இயற்றப்பெற்ற தமிழ் மருத்துவ நூல்கள், ‘முழுமையான கலை அறிவியல் இலக்கியங்களாக அமைந்துள்ளன’.

இயல்6

சித்தர்நெறி என்னும் இயல் ஆறில் சித்த மருத்துவத்தைத் தோற்றுவித்த சித்தர்களைப் பற்றிய கருத்துகள் ஆராயப்பட்டுள்ளன.

சிவன், சித்தர் குழுவின் முதல்வனாகவும், முதல் சித்தனாகவும் கண்டறியப்பட்டு முடிவு உரைக்கப்பட்டது. சிவனின் வழிவந்த சித்தர்கள் மரணத்தை வெல்லும் ஆற்றலைப் பெறுவதற்குரிய வழிகளைத் தெரிந்தெடுத்து, அதன் வழி ஒழுகலாயினர். அவர்கள் மேற்கொண்ட ஒழுக்கம் சித்தர் நெறியென அறியப்பட்டுள்ளது. மருந்து, வாதம், யோகம், ஞானம் என்னும் முறைகளைப் பின்பற்றி உடலைப் பாதுகாக்க முற்பட்டனர். அதன் பயனால் எண்வகைச் சித்துகளுக்கும் அறுபத்தி நான்கு கலைகளுக்கும் உரியவர்களானார்கள்.

சித்தர்கள் கண்டறிந்த உடல் தத்துவமும், பஞ்சபூதக் கொள்கையும், மருத்துவக் கோட்பாடுகளும், சைவ சமயக் கோட்பாடுகளில் கலந்திருப்பதாகக் கருத்து உரைக்கப் பட்டது. சித்தர்கள் அடக்கமான இடங்களில் சைவக் கோயில்கள் உருவாகி வழிபாட்டிடங்களாக உருமாற்றம் பெற்றிருக்கின்றன.

எனவே, மருத்துவத்தை உருவாக்கிய சித்தர்களின் நோக்கமும், சித்த மருத்துவக் கொள்கையும் நோயிலிருந்து விடுபட வேண்டும் என்னும் கருத்தையே கொண்டிருக்கின்றன.

சித்தர் மருத்துவம், தமிழர் மரபு முறை மருத்துவமாகத் தொன்றுதொட்டு தொடர்ந்துவரும் மருத்துவமாகக் காணப்படுகிறது.

சித்த மருத்துவ ஆய்வின் தேவை

சித்த மருத்துவத்தில் பல அரிய முறைகள் காணப்படுகின்றன. மருத்துவத்தால் எளிதில் குணப்படுத்த இயலாதது எனக் கூறப்படுகின்ற மரபு நோய்களுக்கும், முதிர்வு நோய்களுக்கும் மருத்துவம் கூறப் படுகின்றது.

அம்மருந்து முறைகளைக் கண்டறிந்து, மருத்துவத்துக்குப் பயன்படச் செய்யும் முறையில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினால், தமிழ் மருத்துவம் மேம்பாடு அடையும்.

சித்த மருத்துவ நூல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு, அவற்றி லுள்ள மருத்துவப் பகுதிகளைத் தனியாகப் பிரித்தெடுத்து சித்த மருத்துவக் களஞ்சியமாகப் பதிப்பிக்க வேண்டும்.

மருத்துவ நூல்கள் கூறும் மருந்துகள் அனைத்தும் அறிவியல் ஆய்வு முறையில் ஆய்வு செய்திட வேண்டும்.

ஆய்வின் முடிவில் தெரிவு செய்யப்படுகின்ற மருந்துகள், இந்திய மருத்துவர்கள் அனைவரும் பயன்படுத்தும் முறையில் மருந்துகள் தயாரித்து அளித்திட வேண்டும்.

பயன்கள்

சித்த மருத்துவ நூல்களும் மருந்தும் மருத்துவ முறைகளும் ஆய்வு செய்யப்பட்டால்,

1) அறுவை மருத்துவம் (Surgery)

2) இசை மருத்துவம் (Musio therapy)

3) உணவு மருத்துவம் (Diet therapy)

4) காயகல்ப மருத்துவம் (Kalpa Medicine)

5) நம்பக மருத்துவம் (Faith Healing)

6) மூலிகை மருத்துவம் (Herbal Medicine)

7) வர்ம மருத்துவம் (Varma therapy)

ஆகிய ஏழு துறைகளில் மருத்துவக் கல்வி முறை வளர்ச்சியடையும்.

மருத்துவ மூலிகையியல் துறையில்,

1) கற்ப மூலிகை (Rejuvenating Herbs)

2) ஞான மூலிகைகள் (Spiritual Herbs)

3) இரசவாத மூலிகைகள் (Alchemical Herbs)

4) வசிய மூலிகைகள் (Hypnopising Herbs)

5) மாந்திரீக மூலிகைகள் (Magic Herbs)

6) வழிபாட்டு மூலிகைகள் (Religious Herbs)

7) பிணிதீர்க்கும் மூலிகைகள் (Therapeutic Herbs)

8) உடல் தேற்றி மூலிகைகள் (Tonic Herbs)

9) உலோக மூலிகைகள் (Metallogenic Herbs)

10) வர்ம மூலிகைகள் (Chiropratic Herbs)

11) விஷ மூலிகைகள் (Toxic Herbs)

12) நஞ்சை முறிக்கும் மூலிகைகள் (Antidotes)

13) எலும்பொட்டும் மூலிகைகள் (Bone Joiners or headers)

14) சதை ஒட்டும் மூலிகைகள் (Muscle headers or Joiners)

15) பச்சை குத்தும் மூலிகைகள் (Tattooing Herbs)

16) காதணி ஓம்பி மூலிகைகள் (Ear Boring Herbs)

17) பல்பிடுங்கும் மூலிகைகள் (Herbs for Dental Extraction)

18) கருச்சிதைவு மூலிகைகள் (Abortifacient Herbs)

என்னும் வகைகளில் மூலிகைகள் பற்றிய கல்வி நிலை வளரும். மூலிகைத் துறை கல்வி முறையில் தமிழகம் முன்னிலை வகிக்கும்.

தமிழ் மருத்துவக் கலைச் சொற்கள் தொகுக்கப்பட்டு வகைப்படுத்தி ஆராயப்பட வேண்டும். அறிவியல் முறைகளுடன் ஆராயப்பட்டால் தமிழ் மருத்துவம் வளர்ச்சி பெறும்.

தமிழ் மருத்துவம், எல்லாருக்கும் சென்றடைய வேண்டுமானால், தமிழ் இலக்கியப் பட்டயக் கல்வியைப் போல், தமிழ் மருத்துவ இலக்கியத்திலும் பட்டயக் கல்வியை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் இளைய தலைமுறையினருக்கு மருத்துவக் கல்வியில் நாட்டமும் ஊக்கமும் உருவாகும்.

முற்றும்

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions