If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
அணிந்துரை
1) டாக்டர் கோ. கிருட்டிணமூர்த்தி
2) பேராசிரியர் புது. ஜெயப்பிரகாஷ் நாராயணன் B.I.M., M.D. (Siddha)
டாக்டர் கோ. கிருட்டிணமூர்த்தி
டாக்டர் கோ. கிருட்டிணமூர்த்தி
இணைப் பேராசிரியர்,
அண்ணா பொதுவாழ்வியல் மையம்,
சென்னைப் பல்கலைக் கழகம்,
சென்னை 600 005.
 

மனித இனம் பெற்ற அறிவுத்திறன்கள் யாவற்றிலும் தலையாயது மருத்துவ அறிவு. பிற அறிவுத்திறன்கள் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள மற்றவற்றைப் பற்றி ஆராய்ந்து பெற்றவை. மருத்துவ அறிவு மனிதன் தன்னைப்பற்றி ஆராய்ந்து கண்டது. தன் உடலுக்கும் உள்ளத்துக்கும் உபாதைகள் நேரும்போது அதன் தன்மைகளையும் அதற்கான காரணங்களையும் அதனைத் தீர்க்கும் வழிமுறைகளையும் தன் அனுபவத்தினையும் பிறரது அனுபவங்களையும் கொண்டு ஆராய்ந்து கண்டறிந்த உண்மைகளும் பெற்ற படிப்பினைகளும் மருத்துவம் என்னும் துறையாக வளர்ந்து வந்துள்ளன.

உலகின் மிகப்பழைய நாகரிகங்கள் யாவும் பிற துறைகளைப் போன்றே மருத்துவம் பற்றிய அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளன. பண்டைய கிரேக்க மருத்துவமும் சீன மருத்துவமும் உலகப் புகழ் பெற்றவை. அவற்றின் பெருமையை உணர்ந்து அவை இன்றும் போற்றப்படுகின்றன; நவீன அறிவியல் முறையில் ஆராயப் படுகின்றன; புத்தாக்கம் செய்யப்படுகின்றன. பண்டைய நாகரிகங் களுள் சிறப்பிடம் பெற்ற தமிழினமும் தனக்கெனச் சிறப்புமிக்க மருத்துவ முறைமையைப் பெற்றிருக்கிறது. பண்டைய இலக்கியங் களில் இலைமறைகாயாக பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சொல்லப் பட்டுள்ளன. சித்தர்கள் காலத்தில் மருத்துவம் பற்றிய ஆய்வுகளும் அவற்றை ஆவணப்படுத்துதலும் (Documentation) மிகுதியாயிற்று. அவர்களால் இயற்றப்பட்ட மருத்துவ நூல்கள் பல–தொடர்ந்து அந்தப் பாரம்பரியம் பயில்வார் அருகியமையாலும், மறை பொருளாகப் பாதுகாக்கப்பட்டமையாலும் வளராமல் போயிற்று. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் அலோபதி மருத்துவம் அறிமுகப்படுத்தப்பட்டதால் தமிழ் மருத்துவம் புறக்கணிப்புக்கு உள்ளானது. அண்மைக்காலத்தில் அதன் சிறப்பு சிலரால் உணரப்பட்டு கவனிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் சீனாவில் அவர்களின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமை உணரப்பட்டு பின்பற்றிப் போற்றப்படுவது போல், தமிழ் மருத்துவத்தின் உன்னதமான தன்மைகள் உணரப்பட வில்லை என்பது வருந்தத்தக்கது. தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்துக்கு இணையானதாகிய ஆயுர்வேதம் அதனைப் பின்பற்றுவோரால் பெரிதும் வளர்க்கப்படுகிறது. ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன; ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வெளிநாடு களில் அதன் பெருமையை உணர்த்தும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தமிழ் மருத்துவம் பற்றிய அத்தகைய முயற்சி இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கே உள்ளது. தமிழ் மருத்துவத்தைப் பலரும் அறிந்து ஏற்றுப் போற்று தற்கும், உலக அளவில் அதன் பெருமையை உணர்த்துவதற்கும் பலவகையான முயற்சிகள் தேவைப்படுகின்றன.

முதலாவதாகத் தமிழ் மருத்துவம் பற்றிய தகவல்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுதல் (Documentation) வேண்டும். ஓலைச்சுவடிகள், ஏட்டுச்சுவடிகள், அச்சிடப்பட்ட நூல்கள் ஆகிய வற்றைத் தொகுப்பது இதன் முதல் பணி. இந்த மருத்துவ முறையைப் பின்பற்றி மருத்துவம் செய்து வரும் பாரம்பரிய மருத்துவர்களின் அனுபவங்கள், அவற்றின் மூலம் அவர்கள் கண்டறிந்த உண்மைகள் ஆகியனவும் சேகரிக்கப்படுதல் வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களிடமும் இத்தகைய தகவல்கள் சேகரிக்கப்படுதல் மிகவும் இன்றியமையாத பணியாகும்.

மருத்துவ உலகம் அறியாத பல மூலிகைகள் பற்றிய அறிவு மலைவாழ் மக்களிடம் உள்ளது. அந்த அறிவினைப் பயன்படுத்தி அந்த மூலிகைகள், மருந்துப் பொருள்கள், அவர்கள் மேற்கொள்ளும் மருத்துவமுறைகள் போன்றவை பற்றிய தகவல்கள் யாவும் திரட்டப் பட வேண்டும்.

அறிவியல் முறைப்படி மருந்துகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். மருந்து செய்முறை, பக்குவம், அளவு, பக்கவிளைவுகள், மருந்தை உட்கொள்ளுவதற்கு ஏற்ற எளிய முறைகளில் அதனைத் தயாரித்தல் போன்றவை இவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நகர்மயமாதலின் காரணமாக பல மூலிகைகள் அழிந்து இல்லாமல் போய்விடும் நிலை உருவாகி அது தீவிரமாகி வருகிறது. எனவே மூலிகை வளம் அழிந்து போகாமல் காக்க மூலிகைப்பண்ணைகள் அமைக்கப்படுதல் வேண்டும். அவற்றை ஏற்றுமதி செய்யவும் வழிவகை செய்ய வேண்டும். நமது மூலிகைகளுக்கு அயல் நாட்டார் காப்புரிமை பெறும் நிலை நீடிக்காது காக்கும் முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் மருத்துவம் பற்றிப் பல்வேறு நிலைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும். அவற்றுள் முதன்மையானது தமிழ் மருத்துவத்தின் வரலாற்றைப் பற்றிய ஆராய்ச்சியாகும். மேலை நாடுகளில் வரலாற்றுத்துறையில் மருத்துவ வரலாற்றினை ஆராய் வதற்கெனத் தனியாகத் துறைகளே உள்ளன.

டாக்டர் பட்டம் பெறுவதற்கென மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில், எளிமையான பொருளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள விரும்பு வோரே பெரும்பான்மையினர். ஆனால் முனைவர் இர.வாசுதேவன் அரியதொரு தலைப்பினை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார். இத்தலைப்பினை அவருக்கு நான் பரிந்துரைத்தபோது மலைக்காது ஏற்றுக்கொண்டார். தமிழ் மருத்துவத்தின் வரலாற்றினை ஆராயும் முயற்சிக்கு அடிப்படையாக விளங்கக் கூடிய வகையில் ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் இப்பொருளில் ஆய்வு மேற் கொண்டு அதனைத் திறம்படவும் செய்துள்ளார். அந்த ஆய்வேட்டின் நூல்வடிவமே இது.

முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களில் தன்னுடைய ஆய்வுக்கருத்துகளை நிரல்பட அமைத்து, சிறந்ததொரு ஆய்வு நூலாக இதனை உருவாக்கியுள்ளார்.
தமிழ் மருத்துவத்தின் வரலாறு, தமிழில் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவம், சித்தர் நெறி, தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள் ஆகிய ஐந்து இயல் தலைப்புகளும் தமிழ் மருத்துவம் பற்றிய செய்திகளைப் பாகுபடுத்தி எடுத்தியம்புவதற்குப் பொருத்தமான பொருள்பொதிந்த தலைப்புகள்.

மருந்தின் தேவை, மருத்துவத்தின் இலக்கணம், தமிழில் உள்ள மருத்துவ இலக்கியங்கள், தமிழில் இன்றுவரை நிகழ்ந்துள்ள மருத்துவம் பற்றிய ஆய்வுகள், ‘தமிழில் மருத்துவ இலக்கியங்கள்’ என்னும் தலைப்பில் நிகழ்த்தப்பட்ட ஆய்வின் நோக்கம் ஆகியன வற்றை முன்னுரை தெளிவாக எடுத்துரைக்கிறது.

‘தமிழ் மருத்துவத்தின் வரலாறு’ என்னும் இயல், தலைப்புக்குப் பொருந்த வரலாற்று நோக்கில் தமிழ் மருத்துவத்தினை ஆராய்ந்து வெளிப்படுத்துகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் மருத்துவக் குறிப்புகள் தேடிக்கண்டு தொகுத்து விளக்கப்பட்டுள்ளன. இசை மருத்துவம், போர் மருத்துவம், அறுவை மருத்துவம், ஒட்டு மருத்துவம் எனப் பண்டைய மருத்துவமுறைகள் பாகுபடுத்தி உரைக்கப்பட்டுள்ளன. பெண்களும் மருத்துவராக இருந்தமையும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. மருந்து, மருத்துவம், மருத்துவன் ஆகியவற்றின் தன்மைகளை விளக்குவதன் மூலம் ‘தமிழ் மருத்துவ நெறி’ நெறிப்பட விளக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவமும் ஆயுர் வேதமும் ஒப்பிட்டு ஆராயப்பட்டுள்ள முறை சிறப்பாகப் பாராட்டப்பட வேண்டியது ஆகும்.

‘தமிழில் மருத்துவ நூல்கள்’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள இயல், தமிழில் உள்ள மருத்துவ நூல்கள் பற்றிய அரிய தகவல் களஞ்சியம். நூல்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மட்டுமன்றி அவற்றைப் பாகுபடுத்தி, ஆராய்ந்துள்ள முறையும் உரிய முறையில் அமைந்துள்ளன. மானிட மருத்துவம் மட்டுமன்றி கால்நடை மருத்துவம் சார்ந்த நூல்கள், மந்திரமும் மருத்துவமும் சார்ந்த நூல்கள், மருத்துவமும் சோதிடமும் சார்ந்த நூல்கள் எனத் தொடர்புடைய நூல்கள் பற்றிய செய்திகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மருத்துவ நூல்கள் பாடப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டும் என்னும் ஆலோ சனையும் தரப்பட்டுள்ளது.

"தமிழ் மருத்துவம்' என்னும் தலைப்பிலமைந்த இயல் வரைவிலக்கணம் ஒன்றைத் தமிழ் மருத்துவத்துக்கு வரைய முயலும் சிறப்பான முயற்சி. வள்ளுவரின் "மருந்து' அதிகாரத்தின் கண் விளக்கப் படும் தமிழ் மருத்துவக் கோட்பாடு பற்றிய அடிப்படைக் கருத்துகள், சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே என்று தெளிவுறுத்தும் போக்கு, சித்த மருத்துவத்தின் அறிவியல் அடிப்படைகளை வியந்து கூறல், நோய்த் தேர்வு முறைகள், நோய்களின் வகைகள், நோயணுகா நெறி, மருந்து, மருந்தின் வகைகள், மருந்து செய்முறைகள், மருந்துண்ணும் காலம், பத்தியம், வர்ம மருத்துவம், மருத்துவமும் காலமும் போன்ற குறுந்தலைப்புகளில் தமிழ் மருத்துவம் ஆராயப்பட்டு விளக்கப் பட்டுள்ளது. உணவே மருந்தாகும் நிலையும் உரிய அளவில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது. தமிழ் மருத்துவம் ஒரு முழுமையான மருத்துவ முறைமை (holistic medical system) என்று நிறுவ முனைகிறார் முனைவர் இர. வாசுதேவன்.

சித்தர் நெறி என்னும் இயல்–சித்தர்கள், சித்த மருத்துவம், சித்தர் நெறி ஆகியனவற்றை விரிந்துரைக்கிறது. சிவனே முதல் சித்தன் என்னும் கூற்று, மருத்துவ நூல்களில் சிவன் மரபு, திருமூலர் மரபு, என சித்தர் மரபின் தொடக்கம் ஆராயப்படுகிறது. சித்தர்களின் எண்ணிக்கையும், பதினெண் சித்தர்கள் என்னும் கருத்தும் ஆராய்ந்து தெளிவாக்கப்படுகின்றன. சித்தர் வாழிடங்கள், உணவுப்பொருட்கள், சித்தர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் அருகியமைக்கான காரணம், சித்தர்கள் இயற்றிய சித்துகள், சித்துகளின் எண்ணிக்கை, சித்தர் நெறி, சித்தர் நெறியும் சமயநெறியும், சித்தர்களின் குறிக்கோள், சித்தர்களும் சமுதாயமும், சித்தர் ஒழுக்கம், சித்தர்களின் கடவுட்கொள்கை போன்ற கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் சித்தர் நெறி என்னும் தலைப்பில் சித்தர் பற்றிய பல்வேறு நுணுக்கமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. ஒரு பொருள் பற்றிய பல்வேறு கருத்துகளும் தரப்பட்டு அவை விவாதிக்கப்படுகின்றன.

தமிழில் உள்ள மருத்துவ நூல்கள் பெரும்பாலும் செய்யுள் நடையில் இயற்றப்பட்டவை. எந்த அறிவுத்துறையையும் செய்யுள் நடையில் நூலாக்குதல் தமிழ் மரபு. வாய்மொழி மரபு மிக்கிருந்த அக்காலத்தில் மருத்துவம் பற்றிய செய்திகளும் காலத்துக்கேற்ற முறையில் செய்யுள் நடையில் நூலாக்கப்பட்டன. இலக்கியத்தினைப் படைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாவடிவங்கள் மருத்துவ நூலைப் படைப்பதற்கும் பயன்பட்டன. இலக்கியப் படைப்பில் கையாளப்பட்ட உவமை, உருவகங்கள், அணிநலன்கள், இலக்கிய வடிவங்கள் மருத்துவ நூல்களிலும் கையாளப்பட்டன. எனவே இந்த மருத்துவ நூல்களை மருத்துவ இலக்கியங்கள் என்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதி, "தமிழில் மருத்துவ இலக்கியங்கள்' என்பதையே ஆய்வின் தலைப்பாகக் கொண்ட ஆய்வாளர், "தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக்கூறுகள்' என்னும் தலைப்பில் ஓர் இயலில் பல்வகை இலக்கியக்கூறுகளை ஆராய்ந்து எடுத்துக்காட்டியுள்ளார். வாதம், வைத்தியம், யோகம், ஞானம், சோதிடம், போன்ற அறிவியல் துறைகளில் துறைபோகிய சித்தர்கள் புலவர்களாகவும் விளங்கினர். மருத்துவத்தினைப் பற்றி நூலெழுதுங்காலும் தமது இலக்கியப் புலமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பதும் அவர்களது தமிழ்ப் பற்றும் இந்த இயலில் தெளிவுறுத்தப்படுகின்றன.

இணைப்புகளாகத் தரப்பட்டுள்ளவை அனைத்தும் அரிய தகவல் களஞ்சியங்களாகும். தமிழ் மருத்துவம் பற்றிய ஆய்வுகள் பலவற்றுக்கும் இத்தகவல்கள் குறிப்பு நோக்கீட்டுக்குப் பயன்படும்.

இந்த ஆய்வுக்கு நெறியாளராக இருந்து ஆய்வேட்டினை உருவாக்குவதற்கான வழிகாட்டுதலின்போது–ஆய்வேட்டினைப் படித்தபோது–இருந்ததை விட ஈராண்டுக்குப் பின்னர் அதனை அணிந் துரைக்கென மேற்பார்வையிட்ட போது நிறைவே உண்டாகிறது.

இந்த ஆய்வுநூல் இத்துறையில் ஆய்வு செய்வோருக்குப் பெரிதும் பயன்பாடுடையதாகவும், வழிகாட்டியாகவும், ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என நம்புகிறேன்.

முனைவர் இந்த ஆய்வினை மேலும் தொடர்ந்து சிறந்த நூல்கள் பல உருவாக்க வேண்டும் என விழைகிறேன். அந்த முயற்சியில் அவர் மேலும் வெற்றிகள் பல பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.

முனைவர் கோ. கிருட்டிணமூர்த்தி

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions