If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
தமிழில் மருத்துவ நூல்கள்

தமிழ் இலக்கியம்

தமிழ் இலக்கியம் பலவகைப்படும். அவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியம், தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தம் என விரிவடைந்து இலக்கிய வகையின் எண்ணிக்கை நீண்டு கொண்டே போகும். காலத்துக்கு ஏற்ப கருத்துகள் வளர்ந்து கொண்டே வருவதைப் போல இலக்கிய வளர்ச்சியும் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது.

கலை இலக்கியம்

இலக்கியம் கலை என்னும் கோட்பாட்டினை உள்ளடக்கியது. தமிழ்ப் புலமை மிக்கோர் நெஞ்சில் இடம் புகுந்த கலை, வடிவ நிலையை அடைந்து கைத்தொழில் கைவினைத் திறத்தினால் உருவாகும் கட்டிடக் கலை போன்ற பயன் கலைகளும், புலன்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தைத் தருகின்ற சிற்பம், ஓவியம் போன்ற இன்பக் கலைகளும், மாந்தர் தம் உள்ளங்களில் சுவையுணர்வை எழுப்பி அழகையும் இன்பத்தையும் ஊட்டுகின்ற இசை, நாட்டியம், நாடகம், கூத்து என்னும் (Fine Arts, Performing Arts) நுண்கலைகளும், அறிவுக்கும் வாழ்க்கை நலத்துக்கும் தேவையாயிருக்கின்ற மருத்துவம், வானவியல் போன்ற (Science) அறிவியல் கலைகளும், வாழ்வியல் உண்மைகளை மொழிச் சுவை கலந்து படைக்கும் படைப்புகளாக–இலக்கியக் கலைகளாகப் படைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய கலைகள் அனைத்தும் படைப்பாளர்களால் படைக்கப் படும் போது, அவற்றைச் செய்யுள் வடிவில் கூறுவதைத் தமிழ் மரபாகக் கொண்டிருந்தனர்.

செய்யுள் இலக்கியம்

காகிதமும் அச்சு இயந்திரமும் இல்லாத காலத்தில், ஓலைச் சுவடிகளில் எழுதிப் படிப்பதும், சுவடிகளைப் பேணிக் காப்பதும் கடினமானதாக இருந்தது. செய்யுள் வடிவங்களைப் பெற்ற கலை இலக்கியங்கள் எளிதில் மனனம் செய்வதற்கும் நினைவில் வைத்துக் கொள்வதற்கும் ஏற்றதாக, பயனுடையதாக விளங்கியது. எத்தகைய செய்திகளானாலும் அவற்றைக் கல்லிலோ, செப்புப் பட்டயங்களிலோ ஓலைச் சுவடிகளிலோ எழுதும் போது, செய்யுள் வடிவமே கையாளப்பட்டது. அவ்வாறு, செய்யுளுருவம் பெற்ற மருத்துவம், தனித்த இலக்கிய வகையாக வளர்ச்சியுற்று ஏட்டுருவம் பெறத் தொடங்கிற்று.

மருத்துவ இலக்கிய வடிவம்

இலக்கிய வகையாக வளர்ச்சியுற்று வடிவநிலை பெற்ற மருத்துவம் – அதன் கண்ணமைந்த செய்யுள்கள், வடிவங்களுக்கேற்ற யாப்பின் உறுப்புகளான எதுகை, மோனை, அடி, தொடை, போன்ற செய்யுளுறுப்புகளைக் கொண்டு வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, கலி வெண்பா, விருத்தங்கள், உவமவகை, அணிவகை ஆகியவற்றை வடிவமாகக் கொண்டன.

"இலக்கியம்' என்னும் வழக்கு

ஆங்கிலத்தில், ஒரு பொருளைப் பற்றிக் கூறும் செய்திகளடங்கிய துண்டறிக்கை (Phamplet), சிற்றேடு (Monograpt), அறிக்கை (Report) ஆகியவற்றை இலக்கியம் ( Literature) என்று பொருள்படும் சொல்லால் வழங்குவது மரபு. தமிழிலும் பேச்சு மொழியினை வழக்கு எனவும், எழுத்து மொழியினை இலக்கியம் எனவும் வழங்குதல் மரபு. தமிழில் மருத்துவம் என்னும் அறிவியல் செய்திகளைக் கூறும் நூல்கள் இலக்கியமாகவும் திகழ்கின்றன. எனவே, சித்த மருத்துவ நூல்களும் ‘இலக்கியம்’ என்று வழங்கப்படுகின்றன.

சித்தர் இலக்கியம்

தமிழில் வழங்கி வரும் மருத்துவ நூல் ஆசிரியர் பெயர்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. அகத்தியர்12000; திருமூலர்8000; போகர்7000; மச்சமுனி800; சட்டமுனி3000; கொங்கணர்3000; கோரக்கர் சந்திரரேகை என்றே குறிப்பிடப்படுகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் சித்தர் பெயராகவே இருப்பதனால், மருத்துவ இலக்கியம் அனைத்தும் ‘சித்தர் இலக்கியம்’ என்னும் பொதுப்பெயரால் வழங்கப்படுகின்றன.

சித்தர் இலக்கியம் முழுவதும் மருத்துவம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கு கூறுகளைக் கொண்ட மருத்துவத்தின் அடிப்படைகளை வகுத்துக் கொண்டு, நோய்களைக் கண்டறிதல், மருந்துகளை நோய்களுக்கு ஏற்றவாறு தயாரித்து அளித்தல், நோய் அணுகாதிருக்க கற்ப முறைகளைக் கூறுதல், சாகா நிலையைப் பெற யோக முறைகளை விளக்குதல் போன்ற செய்திகளையும் முறைகளையும் உரைப்பதால், ‘மருத்துவ இலக்கியம்’ என்றும் வழங்கப்படும். அவ்வாறான மருத்துவ இலக்கிய நூல்கள் பழங்காலத்திலிருந்தே தமிழ்மொழியில் வழங்கி வருவதனால், அவை, ‘தமிழ் மருத்துவ நூல்’ என்று பழமையைச் சுட்டும் பெயராகவும் வழங்கப்படுகின்றன.

மருத்துவ நூலாசிரியர்

தமிழ் மருத்துவ நூல்கள் பெரும்பாலும் சித்தர் எனப்படும் திருமூலர், அகத்தியர்,போகர், புலிப்பாணி, மச்சமுனி, சட்டமுனி, போன்ற முனிவர்கள் பெயராலேயே வழங்கப்படுகின்றன. இந்நூல்கள் அனைத்தும் சித்தர்களால் இயற்றப்பெற்றவை அல்ல. சித்தர்களின் மருத்துவ முறைகளையும்–மருத்துவக் கொள்கைகளையும் பரம்பரை பரம்பரையாகக் கைக் கொண்டவர்களும், அவர்கள் பரம்பரையைச் சேர்ந்த மருத்துவப் புலவர்களும் பாடியவை.1

தமிழ் மருத்துவத் துறையில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள் அமுதக் கலைஞானம், வைத்திய காவியம், பாலவாகடம், செந்தூரம், முப்பூ, கற்பம் போன்று மிகுதியாகக் காணப்படுகின்றன. பலவகைப் பெருநூல்களும், சிறு நூல்களும் இவரின் நூல்களாகக் கூறப் பெறுகின்றன. இத்தகைய நூல்களில் பல பிற்காலத்தில் மற்றை யோரால் எழுதப்பட்ட நூல்கள்2 என்று அறிஞர்கள் துணிகின்றனர்.

மருத்துவ நூல்கள் எல்லாம் குறிப்பிடும் ஆசிரியரால் இயற்றப் பெறவில்லை என்றாலும், ஒரு சில நூல்கள் அவரால் இயற்றப் பெற்றவை என்று குறிப்பிட்டுக் காட்டுவதற்கு ஏதுவாக எவ்விதமான சான்றுகளும் அமையவில்லை. எல்லா நூலும் மூல ஆசிரியரால் இயற்றப் பெற்றவை என்போர்க்கும், எந்த நூலும் மூல ஆசிரியரால் இயற்றப் பெற்றவை அல்ல என்று கூறுவோர்க்கும் ஆதரவாகவே மருத்துவ நூல்கள் அமைந்திருக்கின்றன. மருத்துவ நூலின் செய்யுளைக் கொண்டு அதனை இயற்றிய ஆசிரியரின் பெயரைக் கண்டறிய இயலாத நிலை ஏற்படுகிறது.

சித்தர் இலக்கிய நூலின் செய்யுளைக் கொண்டோ–நடையைக் கொண்டோ–வழங்கப்படும் மொழியைக் கொண்டோ எந்தச் சித்தர் என்று கண்டறிய முடியாத நிலை ஏற்படுகிறது. காரணம், எந்தச் சித்தரின் நடையும் இதுவரை அறுதியிட்டுக் கண்டறியப்படாமல் இருப்பதேயாகும்.

மருத்துவர் மரபு

வால்மீகி காலம் முதற்கொண்டு கம்பன் காலம் வரை அகத்தியர் மரபு என ஒன்று இருந்து வந்திருக்கிறது. ஆதி சங்கரர் மரபு, தருமையாதீன மரபு போன்று வளர்ந்து நின்ற சங்கிலித் தொடரில் ஏதோ ஓர் அகத்தியர் மருத்துவம் எழுதி, அக்கருத்து செவி வழிப் பேணப்பட்டு, பிற்காலத்தில் புலமை செறிந்த மரபினரால் எழுதப் பெற்றதால் நூலின் நடை பழமைப் பொலிவைப் பெறவில்லை3 என்னும் கருத்தும் நிலவுகிறது.

மருத்துவச் சுவடிகள்

தமிழ்நாடு அரசு தொகுத்திருந்த சுவடி நூல்களின் சுருக்க விளக்கக் குறிப்பேடுகளாக 1910–இல் ஐந்து தொகுதிகளை வெளியிட்டது. 1911– இல் அதன் திருந்திய பதிப்பை வெளியிட்டது. 1932–இல் தமிழ்ச் சுவடிகளின் அகரவரிசைக் குறிப்பேட்டுத் தொகுதிகளை வெளியிட்டது. 1980–இல் திருத்தி வெளியிட்ட தமிழ்ச் சுவடிகளின் அகர வரிசைக் குறிப்பேட்டின் படி, மருத்துவச் சுவடிகள் 574 ஆகக் காணப்படுகின்றன. இத்தொகுப்பில் அனைத்துச் சுவடிகளும் அடங்கும் என்றும் கூறமுடியாது. இத்தொகுப்பில் காணப்பெறாத வேறு சில சுவடிகள் வேறு இடங்களில் இருப்பதாகத் தெரிகிறது. உதாரணமாக, உஸ்மான் கமிட்டி (1924) வெளியிட்ட தொகுப்பில் எமதூதுவன், ஞானட்டா, உலா போன்ற சுவடிகள் காணப்படுகின்றன. அவை, அரசு வெளியிட்ட அட்டவணையில் காணப்பெறாதவைகள் ஆகும்.

தமிழில் மருத்துவச் சுவடிகளின் அட்டவணையைத் தொகுத்து வெளியிட்டவே. இரா. மாதவன், இதுவரை சுமார் 3000 சித்த மருத்துவச் சுவடிகள் கண்டறியப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் அது முடிவடைந்ததாகக் கூறமுடியாது–அது போல் மேலும் தொடர்ந்து தொகுக்கப்பட வேண்டும்4 என்றும் குறிப்பிடுகின்றார்.

தொகுக்கப்பெற்ற மருத்துவச் சுவடிகள் அனைத்தும் வெவ் வேறானவை அல்ல. ஒரு தலைப்பில் உள்ள சுவடியே பல்வேறிடங் களிலிருந்து பெறப்பட்டிருக்கின்றன. அவை மட்டுமன்றி ஒரு தலைப்பில் உள்ள சுவடியே வெவ்வேறு தலைப்பிலும் காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக, போகர்700 என்னும் மருத்துவ நூல் போகர் என்னும் சித்தர் நூலாக அறியப்படுகிறது. அந்நூல், பிரம்மமுனி எண்ணூறு என்னும் வேறு பெயரால் அச்சிட்டு வெளியிடப்பட்டிருக்கிறது என்பது அறியத்தக்கது.

அக்குறைபாட்டினைப் போக்குதற்குச் சுவடிகள் அனைத்தும் ஒப்பு நோக்கப்பட்டு, திரண்ட ஆய்வினை மேற்கொள்வது ஒன்றே சரியான முறையாகும்.

அகத்தியர்

தமிழில் காணப்பெறும் மருத்துவ நூல்களில் அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்களே அதிகமாக இருக்கின்றன. கீழ்த்திசைச்சுவடி நூலகத் தொகுப்பில் காணப்பெறும் மருத்துவச் சுவடிகளில் அகத்தியர் பெயரால் வழங்கப் பெறும் 166 சுவடிகள் உள்ளன. அத்தனை செய்யுள்களையும் ஒருவரால் இயற்றிட இயலுமா? என்று எண்ணும் போதே ஒரு வித மலைப்புத் தோன்றுகிறது. அந்நூல்களில் காணப் பெறுவது கற்பனைச் செய்யுள்கள் அல்ல; அறிவியல் கருத்துகளைக் கொண்ட மருத்துவச் செய்யுள்கள். மருத்துவ முறைகள் அனைத்தையும் ஒருவரே அறிந்திருந்தாலும், அத்தனைச் செய்யுள்களையும் இயற்றுவதற்குச் செலவாகும் காலம் பல ஆண்டுகள். அப்படியிருக்கும் போது, அகத்தியர், பல மருத்துவ நூல்களை இயற்றினார் என்னும் கருத்து வலுவிழக்கின்றது.

மறைந்த மருத்துவ நூல்கள் பதிப்பில் வெளிவந்த நூல்களின் பாடல்கள், சில நூல்களைப் பற்றிய செய்திகளைக் கூறுவனவாக அமைந்திருக்கின்றன. அவ்வாறு கூறப்பெறுகின்ற நூல்கள் தொகுக்கப்பெற்ற பட்டியல்களில் காணப் பெறாதவை. அவ்வாறான நூல்களில் சிலவற்றின் விபரம் வருமாறு:

அகத்தியர்81000; அகத்தியர்51000; அகத்தியர்30000; அகத்தியர் 21000; அகத்தியர்18000; அகத்தியர்8000; திருமூலர்8000; பரஞ்சோதி 8000; கோரக்கர் வெண்பா; மச்சமுனி கலிப்பா; சங்கர மாமுனி கிரந்தம் போன்றவையாகும்.

மேற்கண்ட நூல்களின் பெயர்கள் மட்டுமே அறியக் கூடியவை களாக இருக்கின்றன. ஆனாலும், தேரையர் யமக வெண்பா என்னும் நூலுக்கு இயற்றிய உரையில் மேற்கோளாகக் காணப்பெறும் பாடல்களில், அகத்தியர்21000 என்னும் நூலின் பாடல்களும் காணப்படுவதனால், அந்நூல் இருந்ததற்கான அடையாளம் புலப்படுகிறது. மேலும், அந்நூல் உரையில் 84 மேற்கோள் நூல்கள் இடம் பெறுகின்றன. அவற்றுள் பல, வழங்கிவரும் நூல்களாகவும் இருக்கின்றன.5 அவற்றின் பெயர்களைக் கொண்டு அவை பழந்தமிழ் நூல்களாகவும் இடைப்பட்ட காலத்து நூல்களாகவும் இருந்தனவெனக் கருதலாம்.

அத்தகைய நூல்களின் பயன் கருதி, அவற்றைத் தொகுத்து வெளியிட்டால் மருத்துவத்துறைக்கு மிகவும் பயனுடையதாக அமையும். அத்தகைய நூல்களின் வழி நூல்கள் எவை என்பதும் கண்டறியப் பட வேண்டும்.

சுவடி நிலையங்கள் தமிழ் மருத்துவச் சுவடிகளைத் தொகுத்தும் பாதுகாத்தும் வருகின்ற நிலையங்களாக, பன்னிரண்டு நிலையங்களைக் குறிப் பிட்டுக் கூறலாம். பல்வேறு காலங்களில், பல்வேறு இடங்களிலிருந்து பெறப்பெற்ற மருத்துவச் சுவடிகள் அவ்விடங்களில் பாதுகாக்கப் படுகின்றன.

மிகவும் நலிந்தும் சிதைந்தும் காணப்படும் சுவடிகளும், நல்ல நிலையிலும் சிதைவுகள் ஏதுமில்லாத நிலையில் உள்ள சுவடிகளும், தொடக்கமும் முடிவும் இல்லாமல் இடைப்பகுதி மட்டுமே உள்ள சுவடிகளும், முழுவதும் இருந்தாலும் படித்தறிய முடியாத நிலையில் உள்ள சுவடிகளுமாக இருக்கின்றன.

சுவடி நிலையங்களாவன:

1. தமிழ்ப் பல்கலைக்கழகம், ஓலைச்சுவடிகளைத் தொகுத்துப் பாதுகாப்பதுடன், அவற்றை ஆய்வு செய்வதற்கென்று ‘ஓலைச் சுவடித்துறை’ என்றொரு தனித்துறையையும் இயக்கி வருகிறது. அத்துறையில் சுமார் 5000 சுவடிகள் இருக்கின்றன. அவற்றுள் மருத்துவச் சுவடிகள் மட்டும் ஏறத்தாழ 60 சதவீதம் எனலாம்.

2. சென்னை, அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலகம், பல்லாயிரக் கணக்கான சுவடிகளின் களமாக விளங்குகிறது. இந்நூலகம்

ஆய்வாளர், சுவடியியல் கற்போர், பதிப்பாளர், மருத்துவர், கல்வியாளர் போன்ற அனைவரும் பயன்படுத்தும் நோக்கில் அமைந்திருக்கிறது. இந்நிலையத்திலுள்ள தமிழ் மருத்துவச் சுவடிகளின் பட்டியல் பின்னிணைப்பில் இணைக்கப் பட்டுள்ளது.

3. தஞ்சைச் சரசுவதி மஹால் நூல் நிலையம், தஞ்சை மன்னர் சரபோஜி (கி.பி. 1798 -1832) அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு துறை சார்ந்த சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் எனத் தொகுக்கப்பெற்று பாதுகாக்கப் படுகின்றன. இந்நிலையத்தில் பல்வேறு தலைப்புகளைக் கொண்ட 396 மருத்துவச் சுவடிகள் உள்ளன.

4. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 270 மருத்துவச் சுவடிகளைத் தொகுத்திருக்கிறது. அவற்றுள் சில பதிப்பிக்கப்பட்டும் வருகின்றன.

5. சித்த மருத்துவ மேம்பாட்டுக் குழு 478 தலைப்புகளைக் கொண்ட சுவடிகளைச் சேகரித்துள்ளது.

6. மத்திய அரசால் 1924–இல் நீதி அரசர் உஸ்மான் தலைமையில் அமைக்கப்பெற்ற சித்த மருத்துவ நூலாய்வுக்குழு, அதனது அறிக்கையில், 594 சுவடிகளைத் தொகுத்திருப்பதாக அறிவித் திருக்கிறது.

7. உ.வே.சாமிநாதையர் நூலகம், 15 மருத்துவச் சுவடிகளைப் பாதுகாக்கிறது.

8. விருத்தாசலம், குமார வீரசைவ மடத்தில் 15 மருத்துவச் சுவடிகள் இருக்கின்றன.

9. பாண்டிச்சேரி, பிரஞ்சுஇந்தியக் கலைக்கூடம் 80 சுவடிகளைப் பாதுகாக்கிறது.

10. மதுரை, தமிழ்ச்சங்கம் 24 தலைப்புகளைக் கொண்ட நூல்களைப் பாதுகாக்கிறது.

11. திருவனந்தபுரம், கீழ்த்திசைச் சுவடி நூலகம் 165 மருத்துவச் சுவடி களைக் கொண்டிருக்கிறது.

12. சென்னை, ஆசியவியல் நிறுவனம் பல சுவடிகளைத் தொகுக்கும் நிறுவனமாக விளங்குகிறது.

13. மேற்கண்ட நிலையங்களில் காணப்படும் சுவடிகள் மட்டுமல்லாது, பல தனியார் நிறுவனங்கள், மருத்துவச் சாலைகள், மருத்துவர்கள், சோதிடர்கள், மாந்திரீகர்கள், துறவிகள், மடாலயங்கள், சித்தர் பீடங்கள், கோயில்கள் எனப் பல்வேறிடங்களில் மேற்குறிப்பிட்ட தொகுப்புள் அடங்காத சுவடிகள் பயன் கருதாது முடங்கிக் கிடக்கின்றன.

மேலை நாடுகளில் தமிழ் மருத்துவச் சுவடிகள்

மேலை, கீழைநாடுகளில் சில, வணிகர்கள், அரசுத் துறை, பயணிகள் மூலமாக இந்தியாவுடனும் குறிப்பாகத் தமிழகத்துடனும் தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கின்றன. அவ்வாறான தொடர்பு களினால், தமிழகத்திலிருந்து பல மருத்துவச் சுவடிகள் அந்நாடு களுக்குக் கொண்டு செல்லப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

பண்டைக் காலத்தில், ‘கலைக் கோட்டு முனிவர்’ என்றொரு முனிவர் இருந்ததாகத் தெரிகிறது. இவர் போகருக்கு முந்தைய காலத்தவர். இம்முனிவர் ககனவித்தை18008, இரசாயன நூல், சிற்பம்100000, என்னும் நூல்களை இயற்றியுள்ளதாகக் கோரக்கர் சந்திர ரேகை என்னும் நூல் குறிப்பிடுகிறது.6

கலைக் கோட்டுத் தண்டு என்ற நிகண்டு நூலைத் தமிழில் இயற்றி யவர் கலைக் கோட்டு முனிவர். திருவள்ளுவர் காலத்தில் ‘சொற் றொகை’ என்னும் சொல்லின் தொகுதி இருந்தது. ‘சொல்லின் தொகை யறிந்த தூய்மையவர்’, என்பது குறள். அவ்வாறான சொற்றொகையைச் செம்மையாகச் செய்தவர் கலைக் கோட்டு முனிவராவார்.7

சென்னையில் நிகழ்ந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் ஆய்வுரை நிகழ்த்திய ஜெர்மன் நாட்டு அறிஞர், கலைக் கோட்டு முனிவரைப் பற்றியும், அவர் பெயரால் வழங்கிவரும் நூல்களைப் பற்றியும், நூலுள் நுவலப் பெற்ற பொருட் சிறப்புப் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.8 அந்த அறிஞர் கூறிய கட்டுரை வரிகளிலிருந்து கலைக் கோட்டு முனிவரின் நூல்கள் ஜெர்மன் நாட்டில் பாதுகாக்கப் படுவதாக அறிய முடிகிறது.

அவ்வாறான பல அரிய மருத்துவ நூல்கள் மேலை, கீழை நாடுகளுக்கும் சென்றிருக்கின்றன. அவ்வாறு இருப்பதாக அறியப் படும் சுவடிகளைப் பற்றிய விரிவான தகவல்களைத் திரட்டி,ஆய்ந்து, புதுப்பித்தல் தமிழ் மருத்துவத் துறைக்கு வளஞ்சேர்க்கும்.

(மேலை கீழை நாடுகளில் சுவடிகள் இருக்கு மிடங்களின் பட்டியல் அடிக்குறிப்பில் இணைக்கப் பட்டுள்ளது.)9

பிற நாடுகளிலிருந்து தங்கள் நாடுகளுக்கு வந்தடைந்த ஓலைச் சுவடிகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்ட ஐரோப்பிய நாட்டு ஆராய்ச்சியாளர்கள், தாங்கள் பணி மேற்கொள்ள வேண்டிய இடங்களென 87 நூலகங்களைத் தேர்ந்தெடுத்தனர். அந்த நூலகங்களில் இருந்த சுவடிகளை ஆராய்ந்தபோது ‘தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகள்’ இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அச்சுவடிகளைப் பற்றிக் குறிப்பிடுகின்ற அவர்களின் குறிப்பேடுகளில், இந்தியாவின் பழமையான மொழிகளின் பெயரால் குறிப்பிட்டிருக்கின்றனர். அவ்வாறு குறிப்பிட்டவற்றுள் ஒரு சில வருமாறு, ‘ஜொண்டு’, ‘இந்து’, ‘கர்நாடிக்/மலபார்’, ‘ஜாப்னா’, ‘கோரமண்டல’, ‘ட்ராமலி’, "ப்ரக்ரித்' போன்ற பெயர்களாகும்.10

மொழி மாற்றம்

பழங்காலத்தில் வழங்கி வந்த பல தமிழ் மருத்துவச் சுவடிகள் சமஸ்கிருதத்தில் மொழிமாற்றம் செய்யப் பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்திலிருந்து திபேத்திய மொழியிலும், திபேத்திய மொழி யிலிருந்து மங்கோலிய மொழியிலும், மங்கோலிய மொழியிலிருந்து ருஷ்ய மொழியிலும் தமிழ் மருத்துவம் மொழி மாற்றம் பெற்று பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றது.

திபேத்திய மொழியில் ‘தஞ்சாவூர்’ என்னும் பெயருடைய மருத்துவச் சுவடி பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. அச்சுவடி, சித்த மருத்துவ முறைகளை விரிவாகக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

கடந்த நூற்றாண்டு வரை மேலைநாடுகள் சிலவற்றில் சித்த மருத்துவ முறைகள் நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றன. அவ்வாறு பயன்பாட்டில் இருந்த மருத்துவம் 11–ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சித்த மருத்துவச் சுவடிகளின் மூலம் அரியப் பெற்று மேலை நாட்டு மொழிகளில் மொழிமாற்றம் பெற்றவைகளுமாகும்.

மேலை–கீழை நாடுகளிலும் இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் பெற்றும், வேறு பெயர்களால் வழங்கப் பெற்றும் வருகின்ற சித்த மருத்துவம் பற்றிய விரிவான தொடராய்வு நிகழ்த்திட, பல்கலைக் கழகங்களும் இந்திய அரசும் தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளல் வேண்டும்.

தமிழ் மருத்துவம் வேற்று மொழியில்

தமிழில் தோன்றி மறைந்து விட்டதாகக் கருதப்படும் மிகச் சிறந்த நூல்கள் பல தமிழல்லாத பிற மொழிகளில் காணப்படுகின்றன. பிறமொழிகளில், மிகவும் குறிப்பாக சமஸ்கிருதம், திபெத்தியன், அரபிக், தெலுங்கு, மராத்தி போன்ற மொழிகளில் வழங்கிவரும் மருத்துவ நூல்கள், தமிழ் மருத்துவ நூல்களாகக் காணப்படுகின்றன என்பர். அம்மொழிகளில், தமிழ் மருத்துவ நூல்கள் எளிதில் கிடைக்கக் கூடியவையாகவும், திரண்ட மருத்துவக் கருத்துகளைத் தரக் கூடியவையாகவும் பல நூற்×ண்டுகளாகவே இருந்து வருகின்றன.

சித்த மருத்துவத்தை மரபு வழியாக அறிந்த தொழில்முறை மருத்துவர்கள், தங்களுக்கு வேண்டிய சித்த மருத்துவ முறைகளை அறிய அம்மொழிகளையே நாடி அறிந்து வருகின்றனர்.

பழந்தமிழ் மருத்துவச் சுவடி நூல்கள் பழுதடைந்து பயன்படுத்த இயலாத நிலையடைந்த போது, புதிதாகச் சுவடிகளை எழுதுவோரும், புதிய முறையில் அச்சுமுறையில் நூலாகப் பதிப்பிக்கும் போதும், தங்களுக்கு வேண்டிய மொழிகளில் மாற்றியும், தங்களுக்கு வேண்டாத பகுதிகளை நீக்கியும், வேறு சில கருத்துகளை இணைத்தும் எழுதியும் பதிப்பித்தும் உள்ளனர். அவ்வாறு, சித்த மருத்துவத்தின் மூலவடிவம் சிதைக்கப்பட்ட நிலையில், சித்த மருத்துவ முறைகளைத் தனியே பிரித்தறிவது மிகவும் கடினமான செயலாகும் என்கிறார் வே. இரா. மாதவன்.

கி.பி. 7ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலங்களில் தமிழ் மருத்துவ முறைகளிலுள்ள மருந்துகளில் பல சமஸ்கிருத மொழியில் பயன் படுத்தப்பட்டு வந்துள்ளது கண்டறியப் பட்டிருக்கிறது.11

தமிழ் மருத்துவத்தின் நிலைமாற்றம்

பன்னெடுங்காலமாகத் தமிழர்களால் வளர்க்கப்பட்டு வந்த தமிழ் மருத்துவத்தை ஆயுர் வேதமாக மாற்றும் முயற்சி நிகழ்ந்துள்ளது. தமிழ் மருத்துவ நூல்கள் பல அவை வடமொழி நூல்களின் வழிநூலாகக் குறிப்பிடுகின்றன. ஆயுர்வேத நூல்களிலிருந்து தமிழில் பெயர்த் தெழுதப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றன. இத்தகைய ‘சூழலில் பழந்தமிழ் மருத்துவ நூல்கள் அழிந்தும் உருமாறியும் இருக்கின்றன.12 (வேதநூல்களில் தாவரங்கள் இணைப்பு 3).

தமிழ் மருத்துவத்தைத் தோற்றுவித்த மருத்துவ அறிஞர்கள், தங்கள் பட்டறிவால் கண்டறிந்த மருத்துவ முறைகளை வெளிப்படையாக யாருக்கும் தெரிவிக்கவோ கற்றுத் தரவோ முன்வரவில்லை. அவர்கள் கண்டறிந்த முறைகளை அவர்களே பயன்படுத்திக் கொண்டனர். அம்முறைகளை அனுபவ வாயிலாகவே ஒரு சிலர் அறிந்திருக் கின்றனர். அளப்பரிய மருத்துவ முறைகள் மறைபொருளாக இருந்து விடக் கூடாது என்றெண்ணிய ஒரு சிலர், எல்லாரும் பயன் கொள்ள வேண்டும் என்னும் நோக்கில் அவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். வாய்மொழி மருத்துவமாக இருந்தவை, கல்வியில் தேர்ந்தவர்களால் நூல் வடிவமாகத் தொடங்கின. அவ்வாறான நிலைமாற்றம் கொண்ட மருத்துவத்தைக் கூறும் நூல்களே தமிழ் மருத்துவ நூல்களாகும்.

சித்தர் இலக்கியமாக வழங்கி வரும் தமிழ் மருத்துவ நூல்கள் சித்தர்களின் மரபு வழியினரால் நூல் வடிமாகி உள்ளன. அவ்வாறு நூல் வடிவம் பெற்ற 3000 மருத்துவச் சுவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. தொகுக்காமல் விடுபட்ட நூல்களும் மறைந்த நூல்களும் பல. தொகுத்த மருத்துவச் சுவடிகளைப் பாதுகாக்கும் நிலையங்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் 12 ஆகும். தமிழ் மருத்துவ ஓலைச் சுவடிகளைப் பல மேலைநாடுகளில் சுமார் 87 நூலகங்களில் கண்டறிந்துள்ளனர். சமஸ்கிருதம், மங்கோலியம், ருஷ்ய மொழிகளில் தமிழ் மருத்துவம் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிகிறது. தமிழ் மருத்துவம், ஆயுர் வேதம் என்னும் வேறு பெயராலும் வழங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

சித்த மருத்துவம்

தமிழ் மருத்துவத்தின் தோற்றம் அறிய முடியாத அளவில் நீண்ட காலமாக வழங்கி வருகின்ற மருத்துவமாக இருந்தாலும், தற்போது கிடைக்கப் பெறும் மருத்துவ நூல்கள் அனைத்தும் சித்தர்கள் பெயராலேயே வழங்கி வருகின்றன. அதனால், தமிழ் மருத்துவத்தை உருவாக்கியவர்கள் சித்தர்கள் என்றும், மரபுவழிக்கருத்தின்படி தமிழ் மருத்துவ முறைகளைச் ‘சித்த மருத்துவம்’ என்றும் வழங்கும் வழக்கு உருவாயிற்று.

சித்த மருத்துவ நூல்வடிவம்

தமிழ் மருத்துவம்,பல்வேறு காலங்களில் மருத்துவ நூல்களாக இயற்றப் பெற்றிருக்கின்றன. அவை, தமிழ் மரபு இலக்கியங்களைப் போலவே, இலக்கிய வடிவங்களாக அமைந்து மருத்துவ இலக்கிய மாகத் திகழ்கின்றன.

மருத்துவ நூல்களின் பெயர்க் காரணம் தமிழ் மருத்துவ நூல்கள், தமிழ் இலக்கியத்தின் தாக்கத்தினைக் கொண்டவையாக உள்ளன. தமிழ்ப்பா வகைகளில் அவற்றின் படைப்புகள் காணப்படுவதுடன், அப்பாக்களின் பெயரையே நூலின் பெயராகக் கொண்டிருக்கின்றன. அதே போல, தமிழிலுள்ள பேரிலக் கியங்கள், சிற்றிலக்கியங்கள் பலவற்றின் பெயர்களைக் கொண்டும் அமைந்திருக்கின்றன. வேறு சில நூலாசிரியர் பெயராலும், நூலுள் அமைந்துள்ள பாக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டும் பெயர்கள் அமைந்துள்ளன. மேலும், நூல் முதலிய பொருளின் அடிப்படையிலும், மருந்தின் பெயராலும், நோயின் பெயராலும் பெயர்கள் அமைந்துள்ளன.

தமிழ் மருத்துவ நூல்களைப் பொதுப்படையாக நோக்கும்போது, பெரும்பாலான நூல்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக அமைந்துள்ளன. சில நூல்கள் சிறப்புப் பெயராலும், இயற்பெயராலும் அமைந்திருக்கக் காணலாம்.

பாவின் வகையால் பெயர் அமைந்த நூல்கள் பாவின் வகைகளில் வெண்பா முதல் இடம் பெறும். பிற பாக்களின் தளைகள் கலவாமல் அமைவதனால் இதனைச் சிறப்பு மிக்கதாகக் கருதுவர். அத்தகைய வெண்பா என்னும் யாப்பினையும் பயன்படுத்தி மருத்துவ முறைகளைக் கூறியிருப்பது சிறப்பிற்குரியது. மேலும், பா வகைகள் அனைத்தும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் பாவின் வகையே நூலின் பெயராக இருப்பதும் கருதத்தக்கது. அவ்வாறான நூல் வகைகள், வெண்பா, குறள், அகவல், விருத்தம், சிந்து, நொண்டி, கும்மி போன்றவையாகும்.

அவை வருமாறு:

வெண்பா வகை:

தேரையர் வெண்பா

தேரையர் சிகாமணி வெண்பா

கோரக்கர் வெண்பா

தேரையர் யமக வெண்பா

அகத்தியர் ஆத்திச்சூடி வெண்பா

அகத்தியர் வாகட வெண்பா

அகத்தியர் வெண்பா மணி4000

பிரம்ம முனி சூத்திர வெண்பா

நத்தீசர் கரசைப்பா வெண்பா

வைத்திய வெண்பா

மதிவெண்பா100

வகார மதிவெண்பா100

குணவாகட வெண்பா

போகர் வெண்பா

அமர வெண்பா அந்தாதி

போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

குறள் வெண்பா

வெண்பாவின் வகையான குறள் வெண்பாவினால், திருக் குறளைப் போல அமைந்திருக்கும் நூல்கள் சில காணப்படுகின்றன. அவற்றுள் ‘ஒளவைக் குறள்’ குறிப்பிடத் தக்கது.

ஆசிரியப்பா

பா வகைகளில் இரண்டாவதாக அமைகின்ற ஆசிரியப்பா, அகவல் ஓசையை உடையதாகும். அகவல் ஓசையின் பெயரால் அமைந்த நூல் ஒன்றும் மருத்துவ நூலாக இருக்கின்றது. அது,

‘அகத்தியர் புதிய அகவல்’ என்பது.

ஆசிரியப்பாவின் இனமான ஆசிரிய விருத்தப் பாக்களால் அமைந்த நூல்.

"" அகத்தியர் விருத்தம்'' என வழங்கப்படுகிறது.

கலிப்பா

பாக்களில் மூன்றாவதாக அமைகின்றது, கலிப்பா. இப்பாவகை யினால் இயற்றப் பெற்ற நூல், இப்பாவின் பெயரினால் வழங்கப் படுகிறது. அது,

‘மச்சமுனி கலிப்பா’ என்பதாகும்.

பாக்களின் வகையான தாழிசைச் செய்யுளினால் இயற்றப் பெற்ற நூல்,

‘சட்டைமுனி தாழிசை’ என்பது.

நொண்டி, சிந்து, கும்மி, பள்ளு

காலத்தால் மிகவும் பிற்பட்ட செய்யுள் வகையாகக் கருதப்பெரும் நொண்டி, சிந்து, கும்மி என்னும் பாக்களைக் கொண்டு இயற்றப் பெற்ற நூலுக்கு அவற்றின் பெயரையே அமைத்திருப்பதுடன், மிகவும் எளிய நடையில், பாமர மக்கள் அறிந்து கொள்ளத் தக்க வகையில் அந்நூல்கள் அமைந்திருப்பதும் கருதத் தக்கது, அவை:

கருவூரார் நொண்டி

கருவூரார் நொண்டிச் சிந்து

கருவூரார் நொண்டி நாடகம்

அகத்தியர் வைத்தியக் கும்மி

யூகி முனிவர் வாகடக் கும்மி

மச்சமுனி கும்மி

அகத்தியர் பள்ளு

என்பவை.

இலக்கியங்களின் பெயர்களால் அமைந்த நூல்கள்

காவியம், காப்பியம்

பெருநூலாக அமையும் காவியம், காப்பியம் ஆகிய இரண்டும் ஒருவகைச் செய்யுளானும், பலவகைச் செய்யுளானும், உரை நடை கலந்தும், சொற்றொடர் நிலைச் செய்யுளாகவும் அமைபவையாகும்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கினுள் ஒன்றும்– பலவும்–குறைந்தும் வருதல்13 காப்பியத்தின் பொது இலக்கணம் எனக் கூறுவர். மருத்துவ நூலாக அமைந்துள்ள காவியம், காப்பியம் ஆகிய வற்றுக்கும் மேற்கண்ட இலக்கணம் பொருந்தி வரக் காணலாம்.

தமிழ்க் காவியங்களும் காப்பியங்களும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருளைக் கொண்டும், அவற்றுள் ஒன்றிரண்டு குறைந்தோ கூட்டியோ அமைந்திருப்பதைப் போல, மருத்துவக் காவியமும், காப்பியமும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப் பொருள்களைத் தன்னகத்தே கொண்டும், அவற்றுள் ஒன்றிரண்டு குறைந்தும் அமைந்திருக்கக் காண்கிறோம். மேற்கண்ட நான்கு உறுதிப் பொருள்களைக் காவியம், காப்பியம் ஆகிய நூல்கள் கொண்டிருந்தாலும், அவற்றைத் தனித்தனியே பொருளாகக் கொண்ட நூல்களும் இருக்கின்றன.

பெரும்பகுதி மருத்துவ நூல்கள் தொடர் நிலைச் செய்யுளாகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. மருத்துவத்தைக் கூறும் தொகுப்பு நூல்போல் அல்லாமல் மருத்துவ இலக்கிய நூலாக அமைக்கப் பட்டுள்ளன எனலாம்.

மருத்துவக் காப்பியமாகவும், காவியமாகவும் காணப்படும் நூல்கள் வருமாறு:

தன்வந்திரி வைத்திய காவியம் 1000

தன்வந்திரி வைத்திய காவியம் 800

சட்டை முனி வாத காவியம் 3000

கொங்கணர் வாத காவியம் 3000

மச்சமுனி பெருநூல் வைத்திய காவியம்

இராம தேவர் வைத்திய காவியம் 1000

திருமூலர் வைத்திய காவியம் 1000

அகத்தியர் வாத காவியம் 1000

அகத்தியர் வைத்திய காவியம் 1500

அகத்தியர் ஞான காவியம்

அகத்தியர் மாந்திரீக காவியம்

அகத்தியர் இலட்சண காவியம்

அகத்தியர் பூரண காவியம்

போகர் வைத்திய காவியம் 1000

கருவூரார் வாத காவியம்

தேரையர் வைத்திய காவியம் 1500

யூகி முனிவர் வைத்திய காவியம் 1000

போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. மேற்கண்ட அகத்தியர் நூல்களில், வாத காவியம், ஞான காவியம், மாந்திரீக காவியம், இலட்சண காவியம், பூரண காவியம் ஆகிய ஐந்து நூல்களும் ‘பஞ்ச காவியங்கள்’ என்று குறிப்பிடப் படுகின்றன. இக்காவியங்களில் அமைந்துள்ள அரும் பொருள்களின் விளக்கத்தை அறிய, ‘பஞ்ச காவிய நிகண்டு’ என்றொரு நூலும் வழங்கி வருகிறது.

அகத்தியர் வைத்திய காவியம்1500

அகத்தியர் வைத்திய காவியம் நாடிகளையும், நாடி முறைகளால் அறியக் கூடிய நோய்களையும் விளக்குகிறது. அதனைத் தொடர்ந்து நோய்களுக்கான மருந்தும், மருந்து செய்முறைகளையும் விளக்குகிறது. இந்நூலில் கூறப்படும் மருந்துகள் செந்தூரம், நெய், மாத்திரை, குடிநீர் போன்ற புற மருந்துகள் முப்பத்திரண்டும், கலிங்கம், களிம்பு, நசியம், புகை, மை போன்ற மருந்து செய்முறைகளும் கூறப்படுகின்றன.

மேலும், மருந்துகளைச் செய்யும்போது மருந்துப் பொருள்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்பது தமிழ் மருத்துவத்தின் சிறந்த முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அம்முறையில் ‘சுத்தி முறைகள்’ விளக்கப் பட்டுள்ளன.

இந்நூல் முழுவதும் அந்தாதித் தொடையமைந்த விருத்த யாப்பினால் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காப்பியம்

‘காப்பியம்’ என்று கூறத்தக்கதாக அமைந்த நூல் ‘தேரையர் காப்பியம்’ ஒன்றே யாகும். இந்நூல், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தியைக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சொற்சுவையும் பொருட்சுவையும் மிகுந்தது. தேரையர், தாம் இயற்றிய நூல்களுக்கெல்லாம் திறவு கோலாக அமைக்கப் பெற்றது இந்நூல் என்கிறார். இந்நூலுடன், தேரையர் இயற்றிய சிறிய அளவிலான சொற்பொருளை விளக்கும் நிகண்டும் இணைந்திருக்கிறது. இந்நூலுள் மருத்துவச் சுவையும் காப்பியச் சுவையும் மலிந்து காணப்படுகின்றன.

சிந்தாமணி, சூடாமணி

மதிப்பிடற்கரிய மணிகளால் கோவையாய்ச் செய்யப் பெற்ற மாலை உயர்ந்ததாகக் கருதப்படுவதைப் போல, சிறந்த பாடல்களால் மாலையாக இயற்றப் பெற்ற இலக்கியம் சிறந்தாகப் போற்றப்படும். அவ்வாறான பாடல்களைக் கொண்ட இலக்கியங்கள் சிந்தாமணி, சூடாமணி ஆகிய இரண்டும் தமிழில் சிறந்து விளங்குகின்றன. அவ்வகை இலக்கியங்களின் அடியொற்றித் தமிழ் மருத்துவ நூல்களும் சிந்தாமணி, சூடாமணி என்னும் பெயர்களில் வழங்குகின்றன. அவற்றுள்,

பதார்த்தகுண சிந்தாமணி

அகத்தியர் வைத்திய சிந்தாமணி

தன்வந்திரி வைத்திய சிந்தாமணி 1500

பிரம்மமுனி சிந்தாமணி குணவாகடம்

பிரம்மமுனி சிந்தாமணி நாடிசாஸ்திரம்

பிரம்மமுனி சிந்தாமணி தாது நிதானம்

யூகி வைத்திய சிந்தாமணி

இராம தேவர் வைத்திய சிந்தாமணி

இரண வைத்திய சிந்தாமணி

திருவள்ளுவர் நவரத்தின சிந்தாமணி

அகத்தியர் வைத்திய சூடாமணி

கொங்கணர் கற்ப சூடாமணி

ஆகியவற்றைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

பதார்த்த குண சிந்தாமணி

‘பதார்த்தம்’ என்பது தாவரங்களின் உறுப்புகளான வேர், பட்டை, பிசின், சாறு, இலை, பூ, காய், விதை ஆகிய எட்டும் ஆகும். இவ்வெட்டும் கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதே பதார்த்த குண சிந்தாமணியாகும்.

பதார்த்தங்களைத் தொகுத்து அவ்வவ்வற்றின் குணாகுணங்களைச் சொல்லாவிட்டால் அவற்றை எவ்வாறு பயன்படுத்த முடியும்? அதனால் உலகத்திலுள்ள கோடானுகோடி பதார்த்தங்களில் ஓர் அணு அளவாவது தெரியும்படிச் சொன்னோம் என்று அவைஅடக்கம் கூறப்பட்டுள்ளது. இந்நூலினுள், பதார்த்தங்களைப் பகுத்தும் தொகுத்தும் விரித்தும் எண்பத்து நான்கு வகைத் தொகை வகையாகக் கொண்டு அதற்குரிய பெயர்களைக் கூறுகிறது. இந்நூல் மருத்துவ வல்லுநர்க்கன்றி அனைவர்க்கும் தேவையான நூலாகக் கருதக் கூடியது.

யூகி வைத்திய சிந்தாமணி

தமிழ் மருத்துவத்திற்குக் கிடைத்த மருத்துவ அறிவியல் நூலாகத் திகழ்வது, யூகி வைத்திய சிந்தாமணி. இது நோய்க் கணிப்புக்கு உரிய அதிகாரபூர்வமான நூலாகவும் திகழ்வது.

திராவிடப் பண்பாட்டின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்குகின்ற ஆகமங்களின் வழிநின்று பயின்று, அதன்படி யூகி தம் சிந்தனையை வெளிப்படுத்துவதாக உரைக்கின்றார்.

தமிழ் மருத்துவ நூல்கள் வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடிகளின் அடிப்படையில் மட்டுமே நோய்களைக் கணித்தறிய வேண்டும் என்கிறது. ஆனால், யூகி நோய்க் கணிப்பில் புதிய முறைகளை உருவாக்கி நோய்க் கணிப்பை விவரிக்கிறார். யூகி முனிவர், நோய் வருவதற்கான காரணம், குறிகுணங்கள், தீரும் தீரா நிலை, மருத்துவம் என்கிற அடிப்படையை வகுத்துள்ளார். நோய்களை உண்டாக்கும் நாடிகளின் பாதிப்பு (Humoral Pathology), உடற்கூறு பாதிப்பு (Regional Pathology), புற்று நோயைக் குறிப்பிடும் துன்மாங்கிசம் (Malignant growth), புற்று நோயின் இரண்டாம் நிலை வளர்ச்சி (Metastasis), இடுப்பு எலும்பு, தோள் எலும்பு, முதுகு எலும்பு முதலியவற்றிலிருந்து சீராக வளரும் சூலை (Osteophytic Secondaries), ஆசன முளை (Haemorrhoid),தீங்கற்ற கொடிய மூலம் (Benign and Malignant) போன்றவற்றைக் கணித்துப் பதிவு செய்திருக்கிறார்.

கல்லாடம்

தமிழில் சிறந்த பக்தி இலக்கியமாகக் கருதப்படுபவற்றுள் கல்லாடம் என்னும் நூலும் ஒன்று. அந்நூல் அரங்கேறும் போது, அந்நூலின் பாடலைக் கேட்டு, கல் வடிவில் இருந்த சிவன் தனது தலையை ஆட்டி, ‘மிக நன்று, மிக நன்று’ என்று பாராட்டியதாகக் கூறி, நூலின் பாடல் சிறப்பை உயர்த்திக் கூறுவர். அந்நூலைப் போன்று, மருத்துவ நூலாக விளங்குவது,

"இராமதேவர் வைத்திய கல்லாடம்''

என்னும் இந்நூல், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் எனும் நான்கு காண்டங்களாகவும், நான்கு வகையான செய்யுள்களையும் கொண்ட தாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது.

திருமந்திரம்

திருமந்திரம், சைவ சமயத்தின் திருமறை எனக் கொள்ளப் படுகிறது. அந்நூல், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பயன்களை அடைதலே மக்கள் பெறத்தக்க பேறாகக் கொண்டு, ‘உணர்வாவதெல்லாம் உடம்பின் பயனே’ என்றும், ‘உடம்பார் அழியில் உயிரார் அழிவர், திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்’ என்று திருமந்திரம் அறுதியிட்டிருக்கிறது.

திருமந்திரம் உயிர்ப்பிணி, உடற்பிணி ஆகிய இரண்டையும் நீக்குதற்குரிய வழி முறைகளை எடுத்துரைக்கிறது. மக்களின் ஒழுகலாறுகளையும் உலகியலையும் வற்புறுத்துகிறது.

உடல் தத்துவங்கள் 96உம், ஈசன் இருப்பிடமும், அவனை அடையும் வழிகளையும், மரணத்தை வென்று எந்நாளும் இருக்கச் செய்ய வேண்டிய யோக நெறிகளையும் விளக்குவதாக அமைகிறது. அதன் உட்பொருளைக் கொண்டு மந்திரம் (மறை) என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. அந்நூலைப் போன்று மருத்துவத்திற்குரிய திருமந்திர நூல்கள் சிலவும் காணப்படுகின்றன.
திருமந்திரப் பெயரால் அமையும் நூல்கள் வருமாறு:
திருமூலர் திருமந்திரம் 3000
திருமூலர் கருத்திருமந்திரம்
திருமூலர் திருமந்திரச் சூத்திரம்
நந்தீசர் திருமந்திரம்
மச்சமுனி திருமந்திரம்
மூலிகாவலி திருமந்திரம்

என்பனவாகும்.

"" பொங்கிப் பிறந்தநாள் புகழ்வார் வெறுவீணர்
தங்கிச் செனிக்கையிற் றானோயு முற்றதே''

தான் பிறந்த நாளைப் புகழ்ந்து பேசுகின்றவர்கள் வீணர்கள். ஆண், பெண் சேர்க்கையால் கருவான அன்றே நோயும் சேர்ந்தே உருவாயிற்று என்று விவரிக்கிறது.

சதகம்

சதம், நூறு என்பதைக் குறிக்கும் சொல்லாகும். சதகம் என்பது நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்பது புலப்படும். சதக்குப்பை என்றொரு மருந்துப் பொருள் உண்டு. இம்மருந்தின் நுண்மையைக் குறிக்க இப்பெயர் பெற்றதெனலாம். ஒரு சிட்டிகை அளவு சதக்குப்பையை எடுத்து எண்ணினால் நூற்றுக்கும் அதிகமான எண்ணிக் கையில் சதக்குப்பை இருக்கக் காணலாம். அதனைக் குறிப்பால் உணர்த்த இப்பெயர் வழங்கப்படுவதைப் போல, பாடல்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடும் பெயராகச் சதகம் என வழங்குவதாகக் கருதலாம். மருத்துவ நூல்களில் சதகம் எனும் பெயரில் வழங்கும் நூல்கள் பல. அவை,
அகத்தியர் வைத்திய சதகம்
தட்சிணாமூர்த்தி வைத்திய சதகம்
புலத்தியர் வைராக்கிய சதகம்
பிரம்மமுனி வைத்திய சதகம்
வைத்திய சதக நாடி

என்பவை குறிப்பிடத்தக்கவை.

வைத்திய சதக நாடி

வைத்திய சதகம், உடல் தத்துவம் 96 ஐயும் விளக்குகிறது. நாடியையும் அவை இயங்கும் முறையும், நாடிக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பையும் கூறி, நாடியால் நோயை அறியும் முறையை விவரிக்கிறது. நோயுற்ற நிலையை அறிந்து, நோயின் தன்மையைக் கொண்டு, மரணம் எவ்வாறு உண்டாகும் என்னும் பல மருத்துவச் செய்திகளை 102 பாடல்களால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. மற்ற நூல்கள் சுவடி வடிவில் உள்ளன. நூல்வடிவில் கிடைக்கவில்லை.

கரிசல்

கரிசல் என்பது கருமை என்று பொருள்படும். கருமை என்பது தமிழ் மருத்துவத்தில் உயர்ந்தது என்று வழங்கப்படுகிறது. ‘கசடற்ற கரிசலென்று நாமந் தந்து’ என்பது யூகி முனிவர் (யூகி கரிசல். பா.5) கருத்து. குற்றமற்றது என்னும் பொருளிலும் கரிசல் என்பது வழங்கப் பட்டிருக்கிறது.

வைணவப் பேரிலக்கியமாகிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெறுகின்ற பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகிய இரண்டு மடல் இலக்கியங்களின் வடிவம், தமிழ் மருத்துவ நூல்களில் காணப்படுகிறது. அந்நூலின் தாக்கமே கரிசல் எனலாம்.

மடல் இலக்கியங்கள் எதுகை ஆசிரியத் தாழிசையாலும், கரிசல் இலக்கியங்கள் மோனை யாசிரியக் குறுந்தாழிசையாலும் அமைந் திருக்கின்றன.

“உயுமுறை வைத்திய வுரைத் தமிழ்க் கரிசல்
தகுங்குறு மகவற் றாழிசை மோனை
வகை பெறு சந்த வருக்கத் துறைக்கே''14

என்று மகா கரிசல் உரைப்பதனால், கரிசலின் பா வகையை அறியலாம்.

யூகி கரிசல், வெண்பா, ஆசிரியத் துறை, விருத்தம் போன்ற வடிவங்களைக் கொண்டதாகக் காணப்படுகிறது. இதனால் இந்நூல் மிகவும் பிற்பட்ட காலத்ததாகக் கருத இடமுண்டு.

கரிசல் என்னும் பெயரினைக் கொண்டிருக்கும் மருத்துவ நூல்கள்

“அகத்தியர் கரிசல்’’

“தன் வந்திரி கரிசல்’’

“தேரையர் மகா கரிசல்’’

“யூகி கரிசல்’’

என்னும் நூல்கள் காணப்படுகின்றன.

யூகி கரிசல் இலேகியம், செந்தூரங்கள், சுண்ணம், களங்கு, பற்பம், மாத்திரை, தைலம், எண்ணெய், கர்ப்பக் கோள், தம்பனம், குளிகை, ஆண், பெண் ஆகிய இரு பாலர்க்கும் இடுமருந்து போன்ற மருந்துகள் கூறப்படுகின்றன.

கரிசல் நூல்கள் மருத்துவத்தை மட்டும் உரைக்கும் நூலாக அமைந்திருக்கின்றன எனலாம்.

பிள்ளைத் தமிழ் சிற்றிலக்கிய வகையில் சிறப்பிற்குரிய இலக்கியங்களில் பிள்ளைத் தமிழும் அடங்கும்.

சான்றோர்களையும் மன்னர்களையும் குழந்தையாகப் பாவித்து, குழந்தைகளுக்குரிய பருவங்கள் பத்து, ஆண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களாகக் கொண்டு பாடல் இயற்றப்படும். ஒவ்வொரு பருவத்திலும் பத்து பாடல்கள் இடம் பெறும். இவ்வாறு இயற்றப் பெற்ற நூல்களில் ‘குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்,’ ‘சேக்கிழார் பிள்ளைத் தமிழ்’ ஆகியன சிறப்பிற் குரியவை. இவ்வாறான பிள்ளைத் தமிழ் நூல் ‘வைத்தியப் பிள்ளைத் தமிழ்’ என வழங்கப்படுகிறது.

“ சாற்றரிய காப்புச்செங் கீரைதால் சப்பாணி
மாற்றரிய முத்தமே வாரானை போற்றறிய
வம்புலியே சிற்றிலே யாய்ந்த சிறுபறையே
பம்பு சிறு தேரோடும் பத்து''

என்னும் பத்து பருவங்களில் பத்து பத்து = நூறு பாடல்கள் இடம் பெற் றுள்ளன. தொண்ணூ<ற்று ஒன்பது வகை மருந்துகள் கூறப்பட்டுள்ளன.

""கரிய மிளகு திப்பிலி கீழக்
காய்வேர் சுக்கு சிறு தேக்கு

கண்டங் காரி சங்கு நெல்லி

...............

அருளே சொரியும் பொதிகை வரை

ஐயா வருக வருகவே

அடியா ரகத்தி லீசுரனா

மரசே வருக வருகவே''

என்று வருகைப் பருவப் பாடல் அடைந்துள்ளது. இது போன்ற நூலால் தமிழ் இலக்கியம் செழிப்பதுடன் தமிழ் மருத்துவமும் வளம் பெறும்.

உலா

சிற்றிலக்கிய வகையில் சிறந்த இடத்தைப் பெறும் இலக்கியமாக உலா இலக்கியங்கள் கருதப்பெறும். அவ்வகை இலக்கியமாகிய “திருக்கைலாய ஞான உலா,” முதலில் தோன்றிய ‘ஆதியுலா’ எனக் கூறப்படுகிறது. அதன்பின் ஒட்டக் கூத்தரால் இயற்றப்பட்ட ‘மூவருலா’ என்னும் ‘விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா’ வாகும். இவை தவிர வேறு உலா நூல்கள் தமிழில் சிறப்பிடம் பெறவில்லை. மேற்கண்ட உலா நூல்களைப் போல, தமிழ் மருத்துவ நூலாக, யூகி முனிவரால் இயற்றப்பெற்ற ‘வாத வைத்திய உலா1000’ என்னும் நூல் காணப்படுகிறது.

உலா நூல் இலக்கணம்

பாட்டுடைத் தலைவன் தன்நாட்டு மக்களைக் காண உலா வரும் போது, அவனைக் கண்ட எழுவகைப் பருவ மங்கையரும் காதல் கொண்டு மயங்கி நின்றனர் எனப் பொருளமைத்துக் கலிவெண்பாவில் பாடுவது உலாவாகும்.

மேற்கண்ட இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டு, வாத வைத்திய உலா நூல் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்நூல் கலிவெண்பாவில் 4248 அடிகளைக் கொண்டிருக்கிறது. பாட்டுடைத் தலைவனாக, துருசுக் குரு மருந்து கூறப்படுகிறது. இம்மருந்து, பாதரசத்துக்கு உரிய ஏழு சட்டையையும் கட்டும். கட்டப்படுகின்ற ரசமணியைக் கொண்டு முறைப்படி செந்தூரம் செய்து, தாழ்ந்த உலோகங்களுடன் சேர்த்து உருக்கினால் பொன்னாகும் என்கிறது. உலாத் தலைவனைக் கண்டு மயங்குகின்ற பருவ மங்கையர் களாக, இரசமணிக் குரிய ஏழு சட்டையும், தாழ்ந்த உலோகங்களும் குறிப்பால் உணர்த்தி உரைக்கப்படுகின்றன. இலக்கிய உலாவைப் போலவே மருத்துவ உலா நூலும் அமைப்பால் ஒத்து இருக்கக் காணலாம்.

பாரதம்

தமிழ் இலக்கியங்களில் மகாபாரதம் இதிகாச வகையைச் சேர்ந்த பேரிலக்கியமாகக் கருதப்படும். இந்த இதிகாச வகை இலக்கியத்தின் தாக்கம் தமிழ் மருத்துவத்திலும் இடம் பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளமாக, ‘மருத்துப் பாரதம்’ என்னும் நூல் விளங்குகிறது. மகாபாரதத்தில் அமைந்துள்ள இடம், சந்ததி முறை, நிகழ்வுகள், கதை மாந்தர்கள், போர்க்களம் அமைத்தல், போரின் முடிவு போன்றவை அனைத்தும் மருத்துவ நூலில் அமைந்திருக்கக் காணலாம்.

மகாபாரத நிகழ்வுகள் நிகந்ந்த இடமான அத்தினாபுரம், வாரணாசி ஆகிய இரண்டனையும் பருவுடம்பு, நுண்ணுடம்பு ஆகிய இரண்டாகக் கொள்கிறது மருத்துப் பாரதம்.

மகாபாரத மரபினராகியோரை மருத்துவ மரபினராகக் கொள்கிறது.

பாண்டவர் மரபில் தோன்றிய சந்தனுவை முதுகெலும்பாகவும், அவன் மணந்த கங்கையை மாயையாகவும், கங்கை மகன் வீடுமனைத் துணிவென்றும், சத்தியவதிக்கும் சந்தனுவுக்கும் பிறந்த இருவரை இருவினைகள் என்றும், விசித்திர வீரியன் மறைவுக்குப் பின் கைம்பெண்களான அம்பிகை, அம்பாலிகை ஆகிய இருவரும், பணிப்பெண் ஒருத்தியும் வியாசமுனிவருடன் கூடியதால் பிறந்த திருதராட்டிரன், பாண்டு, விதுரன் ஆகிய மூவரும் முறையே தாமத, இராசத, சத்துவ குணமாகவும் கொண்டு மருத்துவ நெறிகளைக் கூறுகிறது.

மகாபாரதக் கதை மாந்தர்களான கிருட்டிணன் மருத்துவனாகவும், பாண்டவர்கள் மருந்தாகவும், கௌரவர்கள் நோய்களாகவும் உருவகப் படுத்தப் பட்டிருக்கிறன்றனர்.

மகாபாரதத்தில் நிகழும் மூன்று தூதுகளும் மூன்று நாடிகளாகக் கொள்ளப்பட்டுள்ளன.

தூதுவர்களான கிருட்டிணன், சஞ்சயன், உலூகன் ஆகிய மூவரும் வாதம், பித்தம், ஐயம் என்னும் நாடிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களில் கிருட்டிணனும், உலூகனும் பாண்டவர்களைச் சேர்ந் தவர்கள். சஞ்சயன் கௌரவர்களைச் சேர்ந்தவன். இவர்களை மருத் துவத்துடன் இயைபு படுத்திக் காணும் போது, வாதமும், ஐயமும் (கிருட்டிணன், உலூகன்) மருந்துப் பகுதி, உடல் வளத்தை மேம்படுத்துவதாகும். பித்தம் (சஞ்சயன்) நோய்ப் பகுதி, உடல் நலத்தைக் கெடுத்து நலிவடையச் செய்வதாகும் என்பதனால், மகா பாரதத்துடன் மருத்துப் பாரதம் பொருந்தி வரக் காணலாம்.

மகாபாரதத்தில் நூலின் பகுப்புகளான ஆதிபருவம், சபா பருவம், ஆரணிய பருவம், விராட பருவம், உத்தியோக பருவம், வீட்டும பருவம், துரோண பருவம், கன்ன பருவம், சல்லிய பருவம், கதா பருவம் ஆகிய பத்து பருவங்களும் மருந்துப் பாரதத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பதினெட்டு நாள் போரை லங்கணம் என்று குறிப்பிடப்படுகிறது.

மருத்துப் பாரதத்தைக் கற்றிட வேண்டுமானால், மகாபாரதத்தில் தேர்ச்சியும் மிகுந்த மருத்துவப் புலமையும் கொண்டிருத்தல் வேண்டுமெனத் தெளியலாம்.

மருத்துவ இலக்கியத்தை உருவாக்கிய மருத்துவப் புலவர்கள், தமிழ் மொழிப் பயிற்சியும், மருத்துவப் புலமையும் ஒருங்கே அமையப் பெற்றவர்களாக இருந்திருந்தனர் எனப் பெறப்படுகிறது. அவர்களால் உருவாக்கப் பெற்ற மருத்துவ இலக்கியங்கள் மொழித்திறனும் பன்னூற் புலமையும், நுண்ணறிவும், உயர்ந்த நடையும் கொண்டிருக்கக் காணலாம்.

சூத்திரம்

சூத்திரம் என்பது இரகசியம், எந்திரம், பொருள்களின் செறிவு ஆகிய பொருள்களில் வழங்கும். இலக்கண நூல்களின் விதிகளைச் சூத்திரம் என்று உரைப்பதும் உண்டு. மேற்கண்ட பொருள்கள் அனைத்திலும் வழங்கும் முறையில் மருத்துவ நூல்களில் சூத்திரம் என்னும் பெயரில் அமைந்துள்ள நூல்கள் காணப்படுகின்றன.

சூத்திரமாகக் கூறப்படும் நூல்கள், ஒரு பாடல் முதல் அதிகப் படியாக 800 பாடல்கள் வரை சூத்திரம் என்னும் பெயரில் வழங்கப் படுகின்றன. உதாரணமாக, அகத்தியர் காவியச் சுருக்கம் ஒரு பாடலாலும், மச்சமுனி சூத்திரம் எண்ணூ<று பாடல்களாலும் இயற்றப் பெற்றிருக்கின்றன.

சூத்திர நூலின் பொருள்கள்

சூத்திர நூல்கள் இன்ன பொருளில் தான் இயற்றப்பெறல் வேண்டும் என்றில்லாமல், வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப் பொருள்களின் உட்பிரிவுகளைப் பெயர்களாகக் கொண்டு அமைந்திருக்கின்றன. பல நூல்களின் பொருள் விளங்காமல் சூத்திரம் என்னும் பெயரால் மட்டும் வழங்கக் காணலாம்.

வைத்திய சூத்திரம், வகாரச் சூத்திரம், வாத சூத்திரம், வழலைச் சூத்திரம், சோதிமணி சூத்திரம், நாடி சூத்திரம், திருமந்திரச் சூத்திரம், கற்ப சூத்திரம், பூரண சூத்திரம் என்னும் நூல்களின் பெயரைக் கொண்டு ஓரளவிற்கு நூல் கூறும் பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

அகத்தியர் சூத்திரம் 1200, அகத்தியர் சூத்திரம்1500, உரோமரிஷி சூத்திரம்500, சட்டைமுனி சூத்திரம்800, திருமூலர் சூத்திரம்800, பிரம்மமுனி சூத்திரம்380 போன்ற நூல்கள், கற்றாலன்றி நூலின் பொருளை அறிய முடியாதவாறு அமைந்திருக்கின்றன.

நிகண்டு

‘நிகண்டு’ என்ற சொல்லுக்குத் ‘தொகுதி’, ‘உண்மை’, ‘கூட்டம்’ என்னும் பொருள்கள் உள்ளன. நிகழ்ந்தவை என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே நிகண்டு எனலாம். உலகில் உண்மையாகத் திகழ்ந் தவைகளைத் தொகுத்து, அதற்கு நிகழ்ந்தவை எனப்பெயரிட்டு, அது நாளடைவில் நிகண்டு என மருவிற்றென்பர்.

தமிழில் வழங்கிய தொன்மையான நிகண்டின் பெயர் உரிச்சொல் என்றும், உரிச்சொல் பனுவல் என்றும் வழங்கியிருக்க வேண்டும்.

பின்னாளில் எழுந்த நிகண்டு நூல்களுக்கு முன்னரே உரிச்சொல் என்ற பெயரால் நிகண்டு இருந்துள்ளது என்பதற்கு,

“ இன்ன தின்னுழி யின்னண மியலும்
என்றிசை நூலுட் குணிகுணப் பெயர்கள்
சொல்லாம் பரத்தலிற் பிங்கல முதலா
நல்லோ ருரிச்சொலி னயந்தனர் கொளலே''

(நன்னூல், உரிச்சொல்லியல் செய். 460)

என்று பவணந்தி முனிவர், பிங்கல முனிவர் இயற்றிய பிங்கல நிகண்டினை ‘உரிச்சொல்’ என்றே குறிப்பிடுவது கருதத் தக்கது.

கயாதர நிகண்டு பாயிரத்தில், ‘உரிச்சொல் பனுவல் மேம்படுமே’ என்று குறிப்பிடுவதும் குறிப்பிடத்தக்கது.

மருத்துவ நிகண்டு

தமிழ் மருத்துவத்தில் நிகழ்ந்த உரிச்சொற்களை விவரித்துக் கூறும் நிகண்டுகளாக அமைந்தவை பல. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர் பெயரால் வழங்கி வருபவை. ஒவ்வொருவரும் தாங்கள் படைத்த மருத்துவ நூலின் பொருளை விளக்கிக் கூறுமாறு அமைத் துள்ளதால், தமிழ் இலக்கிய உரிச்சொல் நிகண்டை விடவும் அளவில் பெரியதாகவும், சொற்களின் எண்ணிக்கை மிகுந்ததாகவும் இருக்கக் காணலாம். இவ்வாறான நிகண்டுகளின் பெருக்கத்தினால், மருத்துவ இலக்கியக் கலைச்சொற்கள் வளர்ச்சியடைந்துள்ளதெனலாம்.

நிகண்டுகளின் பெயர்கள் வருமாறு:
அகத்தியர் பஞ்சகாவிய நிகண்டு
அகத்தியர் அறுசுவை நிகண்டு
அகத்தியர் நிகண்டு 800
இராமதேவர் நிகண்டு
கைலாச சட்டைமுனி அய்யா சோடச நிகண்டு
சட்டைமுனி நிகண்டு 1200
சட்டைமுனி மூலிகை நிகண்டு
தட்சிணாமூர்த்தி நிகண்டு200
பிரம்மமுனி கருக்கிடை நிகண்டு
மச்சமுனி நிகண்டு
போகர் நிகண்டு1700
தன்வந்திரி நிகண்டு800

போன்றவைகளாகும்.

"" சொன்னதொரு மூலிகையின் தொகுப்புக் கேளு
சுளுக்கான நானூற்று யெழுபத்து மூன்று
பென்னதொரு பேரையெல்லாம் பிரித்துச் சொன்னேன்
பேரான சாத்திரத்தில் இல்லை இல்லை'' (போகர் நிகண்டு. பா. 61)

என்று, போகர் நிகண்டு நானூற்று எழுபத்து மூன்று மூலிகைப் பெயர் களின் தொகுப்பை எடுத்துரைக்கிறது. மேலும் பல நிகண்டுகள் சுவடி வடிவில் இருப்பதனால் அவற்றின் தன்மையை அறிய முடியவில்லை.

திருப்புகழ்

அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் சிறப்பிடத்தைப் பெறும். இது, சந்தப் பாடல்களால் முருகனைப் போற்றிப் பாடுவதாகும். முருகனைப் புகழ்ந்து பாடுவதனால் திருப்புகழ் எனப்பட்டது. இது, இசைவளமும், தாளக்கட்டும் கொண்ட பக்தி, இலக்கியச்சுவை, இனிய தமிழோசை, நயம் ஆகியவை இணைந்து புகழ்ப் பாடல்களாக அமைந்தது.

இத்திருப்புகழ் அமைந்திருக்கும் அமைப்பைப் போலச் சந்தங்களும், தாளக்கட்டும், இசைவளமும் கொண்ட மருத்துவ இலக்கியச் சுவையைக் கொண்ட இனிய தமிழ்ப் பாடல்களாக அமைந்துள்ளது வைத்தியத் திருப்புகழ் ஆகும்.
"" தனதன தானதந்த தனதன தானதந்த தன தான
தனதன தானதந்த
இடருறு மேகவெட்டை படர்தரு மூரல்சட்டை

கொடியிடர் நோய் விரட்ட முறைகாணும்
இகமுற சோம்புகொத்த மலிநில வாரைசுக்கு

வினியநன் னாரி யொக்க வெடையோரைஞ்
சுடரழன் மீது கட்டி படிசல மாறுவிட்டு

விட ரெரி வாகவெட்டி லொருகூறா''ஏ

என்று சந்தம் அமைந்த பாக்களால் நல்வாழ்வு மணப்பாகு என்னும் மருந்து திருப்புகழாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதில் மனிதர்களுக்கு, ஆண்–பெண் சேர்க்கை மிகுதியால் நேரிடும் பல வகைக் கடும் பிணிகளான மேக நோய், கிரந்தி, குட்டம், குறை நோய், குன்மம், கண்டமாலை ஆகிய கொடிய நோய்களைப் போக்கும் அரிய மருந்து முறைகளும், தாதுப்பெருக்கம், உடலுரம், மெய்நலம் முதலியவற்றை உண்டாக்கும் மருந்து முறைகளும் கூறப்பட்டுள்ளன.

கோவை

சிற்றிலக்கியங்களுள் ஒன்று கோவை என்னும் இலக்கிய வடிவம். இதற்கு பல செய்யுள்களைத் தொடர்பு உடையவனவாகக் கோத்தல் என்பது பொருள்.

கோவை இலக்கியம் நானூறு பாடல்களைக் கொண்டு அரசர், வள்ளல், தெய்வம் ஆகியவற்றுள் எதையேனும் புகழ்ந்து பாடப்படுவ தாகும்.

இவை ஆசிரியம், வெண்பா, கலித்துறை போன்ற பாடல் களால் பாடப்படுவதுண்டு. அகத்துறை சார்ந்த பாடல்களால் பாடப் படுவதையே பன்னிரு பாட்டியல் சிறப்பிக்கிறது. ஆனால், பிற்காலத்தில் எழுந்த கோவை இலக்கியங்கள் புறத்துறையையும் பாடத் தொடங்கின.

கோவை இலக்கியமாகத் தமிழில் காணப்படுபவற்றுள் ஆசாரக் கோவை, பாண்டிக் கோவை, தஞ்சைவாணன் கோவை ஆகியவற்றைக் கூறலாம்.

பாடல் முறையாலும், பாடப்படும் பொருள் முறையாலும் மாறுபட்டு, கோவை என்னும் இலக்கிய வடிவத்தில் மருத்துவம் கூறப்பட்டு இருப்பது, கோவை இலக்கியத்தின் வளர்ச்சியையே காட்டுவதாகும்.

பெரிய ஞானக் கோவை
வாதக் கோவை
வைத்திய சில்லரைக் கோவை

எனும் நூல்கள் மருந்துவம் கூறும் கோவை நூல்ககளாகக் காணப்படுகின்றன. இம்மூன்று நூல்களும் பதினெண் சித்தர்களால் பாடப் பெற்ற பாடல்களின்/ நூல்களின் தொகுப்பு எனலே சரியாம். பெரிய ஞானக் கோவை யோகம், ஞானம் ஆகிய இரண்டனையும், வாதக் கோவை வாதம் பற்றியும், வைத்திய சில்லரைக் கோவை மருத்துவம் பற்றியும் விவரிக்கக் கூடியதாக அமைந்திருக்கின்ற தெனலாம். தமிழ் மருத்துவ நூலார்கள் மேற்கொள்ளுகின்ற வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கு உறுதிப் பொருள்களையும் இம்மூன்று நூல்களின் வழி அறியலாம்.

வைத்திய சில்லரைக் கோவை நூலில் இடம் பெறும் நூலின் எண்ணிக்கை 118 ஆகும். இது மொத்தம் 3322 பல்வேறு வகைப் பாடல்களைக் கொண்ட கோவையாகும்.

தண்டகம்

தண்டகம் என்பது முதுகெலும்பு எனப் பொருள்படும். தண்டகம் என்னும் நூலினுள் அமைகின்ற பொருள் முதுகெலும்பைப் போன்ற வலிமையுடைய ஆதாரமானவை எனக் கருதலாம். அகத்தியர், தன்வந்தரி, நந்தீசர், கடைப்பிள்ளை, இராமதேவர் ஆகிய ஐவர் பெயரால் தண்டக நூல்கள் காணப்படுகின்றன. மேற்கண்ட இவர்களின் பிற நூலின் பொருள்களுக்கு இத்தண்டக நூல் ஆதார நூலாகக் கருதலாம்.

"" திரிவார்கள் தேசத்தில் அனேகம் பேர்கள்

செயலான பலபிணியின் கருவைக் காணார்
அறிவார்கள் அறிவாலே குருவின் பீடம்

ஆனந்த சற்குருவின் கருவின் பீடம்
தெரியாமல் அலைவார்கள் என்றே சொல்லிச்

சிறப்பான நபிமார்கள் வெகுபேர் கூடி
குறிப்பாக தண்டகமாய்ச் சொல்லென் றார்கள்

குருவாக அன்னாளில் சொன்னேன் நானே''15

என்றதனால், நோய்க்கான காரணத்தையும் குருவின் பீடத்தையும் கருவின் பீடத்தையும் மக்கள் அறிந்திட வேண்டுமென்ற நோக்கில், தண்டக நூலார் ஆசிரியர் நிலையிலிருந்து கூறுவதாகக் தெரிகிறது.

"" இன்னாளில் தண்டகந்தான் சொல்ல வென்றால்
இயல்பாய் ஆயிரத்தைவிட வேறொன் றில்லை
சொன்னாலும் அதைக் குறுக்கிச் சொல்ல வேண்டும்''16

முன்னமே ஆயிரம் எனும் நூலில் மூலப் பொருள் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. தண்டகமாய்ச் சொல்ல வேண்டுமானால் அதையும் சுருக்கிச் சூத்திரம் போலச் சொல்வதைக் குறிப்பதாகத் தெரிகிறது. இதன் வழியே பிற தண்டக நூல்களும் அமைந் திருக்கலாம் எனத் தோன்றுகிறது.

கற்ப நூல்கள்

கற்பம் என்பது 432 கோடி ஆண்டைக் குறிக்க வழங்கும் சொல்லாகும். மருத்துவ நூலில் வழங்கப்பட்டுவரும் கற்பம், உடலை உறுதியாக்கும்; நோயற்ற வாழ்வைப் பெறலாம்; நீண்டநாள் வாழலாம்; முத்தி நிலையை அடையத் துணையாகும் கருவி என்று கூறப்படுகிறது.

கற்பம் என்னும் மருந்து, தமிழ் மருத்துவம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையைக் காட்டுவதாக அமைகிறது. அதனால் தான் மருத்துவ நூல்களில் பெரும்பகுதி கற்ப மருந்தைக் கூறக் கூடியனவாக அமைந்துள்ளன. அவை மட்டுமல்லாமல், கற்பம் என்னும் பெயரில் தனிநூலாக அமைந்திருப்பவையும் அதிகமாகும். குறிப்பாக கொங்கணர், சட்டைமுனி, திருமூலர், நந்தீசர், போகர், மச்சமுனி, புலத்தியர், கோரக்கர் போன்றோரின் பெயர்களில் அமைந்த கற்ப நூல்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. சுவடி நூலகங்களில் காணப்படும் கற்ப நூல்களின் எண்ணிக்கை61 ஆகும். மருத்துவத்திற்கே மகுடம் சூட்டியதுபோலக் கற்ப மருந்துகள் சிறந்த மருந்தாகப் போற்றப் படுவதனைக் கொண்டு, கற்ப மருத்துவம் மேலும் வளர்ச்சியடைய ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.

மூலிகை நூல்கள்

மருத்துவத்தின் மூலமாக அமைவது மூலிகை. அம்மூலிகையின் குணம், வகை, இனம் எனத் தொகுத்துக் கூறும் நூல்கள் நிகண்டு எனலாம். மருத்துவ நிகண்டுகள் மருத்துவம் சார்ந்த பொருள்களைத் தொகுத்து அவற்றுக்கு வழங்கி வருகின்ற பெயர்களை எடுத்துரைப் பவை. ஆனால், மூலிகை நூல்கள் மூலிகைகளை மட்டும் உரைக்கக் கூடியவையாக இருக்கின்றன. மூலிகைகளின் பெயரைத் தெரிந்து கொள்வதால் மட்டுமே மூலிகையைக் காணவோ, திரட்டவோ முடிவதில்லை. மூலிகையின் பிறப்பிடம், அதன் தன்மை, தோற்றம், வடிவம் போன்ற பல செய்திகளைக் கூறி, எந்தெந்தத் திசையில் என்னென்ன மூலிகைகள் இருக்கின்றன என்பன போன்ற செய்திகளைக் கூறும் வழிகாட்டிக் கையேட்டினைப் போல, கோரக்கர் மலைவாகடம் என்னும் நூல் அமைந்திருக்கிறது. மலை நெடுகிலும் அமைந்திருக்கும் முனிவர்களின் குடில்களைக் குறிப்பிட்டு, அவற்றிலிருந்து இவ்வளவு தூரத்தில் இந்த மூலிகை இருக்கிறது என்றெல்லாம் குறிப்பிடக் காணலாம்.

மூலிகை பற்றிய விரிவான தகவல்களை உள்ளடக்கி, தொகை, வண்ணம், குணம், மருத்துவ மூலிகை, விஷத்துக்கான மூலிகை போன்ற நூல்கள் காணப்படுகின்றன. அவை,

1. மூலிகைப் பிரயோக வண்ணம் 2. மூலிகை வண்ணம்

3. மூலிகைக் குணம் 4. வைத்திய மூலிகை

5. மூலிகை வைத்தியம் 6. விஷத்துக்கு மூலிகை

7. போகர் பச்சிலை மூலிகை வைத்தியம் 8. மூலிகை விபரம்

9. வைத்திய மூலிகை அகராதி 10. மூலிகாவலி திருமந்திரம்

என்பனவாம். கற்ப மூலிகைகள் 1008 என்றும், மூலிகைகள் 4444 என்றும் கூறுவர். மேற்கண்ட நூல்களைத் திரட்டி ஆராய்ந்தால் அதன் விபரங்கள் கிடைக்கக் கூடும்.

குழந்தை மருத்துவ நூல்

குழந்தை என்பது பாலரையும் குறிக்கும் என்பதனால், குழந்தை மருத்துவம் பால வாகடம் என்னும் பெயரால் வழங்கி வரக் காண் கிறோம். வளர்ந்த மேலை நாட்டு மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் தனிப்பிரிவாக வளர்ச்சியடைந்ததைப் போல, தமிழ் மருத்துவத்தில் குழந்தை மருத்துவம் தனிப் பிரிவாகவே தோன்றி, வளர்ந்து வந்திருக் கிறது. பெரும்பாலும், ‘குடும்ப மருத்துவம்’ என்பதும், ‘பாட்டி வைத்தியம்’ என்பதும், தமிழ் மருத்துவத்தின் மரபு மருத்துவமாகும். அவை, பெரும் பகுதி குழந்தை மருத்துவத்தையே செய்து கொண் டிருக்கின்றன. இவ்வாறான குழந்தை மருத்துவத்தின் தனிநூலாக அமைந்தவைகளாவன,
அகத்தியர் பால வாகடம் 200
பாலவாகடத்திரட்டு 1200
தன்வந்திரி குழந்தை (மருத்துவம்) வாகடம்
பிள்ளைப் பிணி வாகடம்
வைத்திய பால வாகடம்
பாலகிரிகை வைத்தியம்

போன்றவை.

பாலவாகடத் திரட்டு 1200

தமிழ் மருத்துவத்தில் குழந்தை மருத்துவமாக வளர்ச்சியடைந் திருக்கும் மருந்துவ முறைகள் அனைத்தும் இந்நூலுள் இடம் பெறுவதாகக் கூறலாம். குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற, மாந்தம், தோஷம், சவலை, வாந்தி, பேதி, கணம், சூலை, கரப்பான், சுரம், சன்னி, கழிச்சல், அட்சரம், சோகை, பாலுண்ணாமை, உண்ணாக்கு வளர்ச்சி, கக்குவான், தாகம், வீக்கம், பொருமல், மயக்கம், விக்கல், மார்புச் சளி, கண்ணோய், காதுநோய், விரைவாதம், மசரை நோய், கீரி நோய், வயிற்றில் பூச்சி, மலக்கட்டு போன்ற குறைகளுக்கு இதில் மருத்துவம் கூறப்பட்டிருக்கின்றது.

குழந்தை நோய்களில் பிரிவுகளையும் குறிகுணங்களையும் கூறித் தக்க மருந்து இதுவென எடுத்துரைக்கும் சிறப்பினை இந்நூலில் காணமுடிகிறது.

நோயின் பெயரால் அமைந்த நூல்கள்

மருத்துவ நூல்கள் பலவகை யாப்பின் பெயராலும், பேரிலக்கியம், சிற்றிலக்கியங்களின் பெயராலும் அமைந் திருப்பதைப் போல, நோயின் பெயரால் அமைந்துள்ள நூல்களும் காணப்படுகின்றன. நோய்களின் எண்ணிக்கை 4448 எனக் கூறப்படுகிறது. குறிப்பாகச் சில நோய்களின் சிறப்பினைக் கருதி, அந்த நோய்க்குரிய மருத்துவம் வளர்ச்சி பெற வேண்டும் என்னும் நோக்கில் அமைந்ததாகக் கொள்ளலாம்.

வைசூரி நூல் 80

வைசூரி என்பது அம்மை நோயைக் குறிப்ப தாகும். அம்மை நோய் கோடைக் காலத்தின் வெப்பத்தினால் உண்டாகும். அம்மை நோய் வகைகளுள் ஒன்றான பெரியம்மை மிகவும் கொடுமையானது. அது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

வைசூரி நோய் உண்டாகக் காரணம், அதன் வகை, உரிய மருந்து முதலியவை சித்தர்களால் அறியப்பட்டவை என்பதற்குச் சான்றாக வைசூரி நூல் 80 விளங்குகிறது.

இந்நூல், வைசூரி நோய் பதினெட்டு வகையானது என்கிறது. அவற்றின் குணம், மருந்து, நோயினால் உண்டாகும் புண்ணுக்கும், ஆறாத புண்ணை ஆற்றுவிக்கும் மருந்தும் இதனுள் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக, வைசூரி நோயினால் கண்பார்வை பாதிக்கப்படும். அவ்வாறு கண்பார்வை பாதிக்கப்பட்டால் அதற்குரிய மருந்தும் கூறப்படுகிறது.

அம்மை நோய் மீண்டும் வருகின்ற குணமுடையதாகையால், ஆறுமாதத்திற்குள் மீண்டும் வந்தால், அதிலிருந்து நோயாளியைக் காக்கும் முறையும் கூறப்படுகிறது.

இந்நூல், வைசூரி மருத்துவம் பற்றிய முழுமையான நூலாகக் கருதத்தக்கது.

மனநோய் நூல்

கிறுக்குகள்18

கிறுக்கு என்பது பைத்தியம் அல்லது மனநோய் என்றும் கொள்ளலாம். மனநோய்க்குரிய மருத்துவ நூலாக அமைவது கிரிகை60 என்றும் நூலாகும். நோயின் செயல்களை அடிப்படையாகக் கொண்டு 18 வகைப்படுமென்று கணித்துள்ளனர்.

மனநோய் தோன்றக் காரணம் பூத கணங்கள் என்றும், எச்சினி என்றும், தேவதை என்றும் கூறுவர். அவ்வாறு கூறுபவர்களெல்லாம், மன நோயின் சாத்திரங்களை அறியாத மட்டைகள். மனநோயின் வகைகளைக் கூறுகிறேன். அவற்றை அறிந்து, அவற்றுக்குரிய மருந்தைக் கொடுத்து குணம் பெறச் செய்வீர் என்று கேட்டுக் கொள்ளும் முறையில் இந்நூல் அமைந்திருக்கிறது.

உறுப்பின் பெயரால் அமைந்த நூல்கள்

நூல்களின் பெயரமைப்பில் மனித உடல் உறுப்பும் இடம் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது. மனித உடல் முழுவதற்கும் மருந்தைக் கூறுகின்ற மருத்துவம், குறிப்பாக, ஓர் உறுப்பில் தோன்றுகின்ற நோய் அறிந்து–அந்நோயின் வன்மை, மென்மை, குணம் அறிந்து–அவற்றிற்கு மருத்துவம் தோற்றுவிப்பது, மருத்துவத்தின் வளர்ச்சியடைந்த நிலையைக் காட்டும். அவ்வாறு வளர்ந்த மருத்துவ நூலாக உறுப்பின் பெயரால் அமைந்த நூல்களைக் கூறலாம்.

நயனவிதி

நயனம் என்பது கண்ணைக் குறிக்கும். 96 வகையான சிற்றிலக் கியங்களுள் ஒரு நூலாக அமைவது ‘பனை முலை நயனம்’ என்பதாம். எனவே, நயனம் என்னுஞ் சொல் இலக்கியத்துக்குப் பழமையான சொல். கண்ணில் தோன்றும் நோய்கள் 96 எனக் கணக்கிட்டு, அந்நோய்கள் நீங்க மருந்துகளை உரைக்கும் நூல் ‘நயன விதி’ ஆகும்.

கண்ணின் உறுப்புகள் ஒவ்வொன்றிலும் எத்தனை நோய்கள் தோன்றும் என்பதையும், அந்நோயைக் கண்டறியும் முறைகள் என்னென்ன என்பதையும் விவரிக்கும் நூலாக இது அமைந்திருக்கிறது. நயன நூல்களாக இரண்டும், மருந்து மட்டும் கூறும் நூலாக ஒன்றும் காணப்படுகின்றன. அவை,
அகத்தியர் நயன விதி; நாகமுனிவர் நயன விதி;
போகர் நேத்திர ரோகத் தைலம் என்பவையாகும்.

தலை நோய் மருத்துவம்

கண் மருத்துவத்தையும் உள்ளடக்கி, காது, மூக்கு, தொண்டை, வாய், பிடரி, தலை என்னும் அனைத்துப் பகுதி உறுப்பிற்கும் மருத்துவம் கூறுகின்ற நூலாக அமைந்துள்ளது, நாகமுனிவர் தலைநோய் மருத்துவம் என்னும் நூலாகும்.

இந்நூல் தலையில் தோன்றும் கரப்பான், குட்டம், பிளவை, திமிர்ப்பு, கனப்பு, வலி, வரட்சி, சூலை, சன்னி, இரத்த சூலை, செவிச் சூலை, செவிச் சன்னி, கண்நோய் ஆகியவற்றை வகைப்படுத்தி,

"" சிகையுறு சிரசில் நோய்தான் செப்பிலா யிரத்தெட் டாகும்''17

என்று நோயின் தொகையைக் கூறுகிறது.

மருந்தின் பெயரால் அமைந்த நூல்கள்

தமிழ் மருத்துவத்தின் சிறப்புக்குக் காரணம், அம்மருத்துவத்தின் மருந்தாகும். அம்மருந்தின் செய்முறைகள் பலநோக்கில் ஆராய்ந்து கண்டறியப்படுகின்றன. அதன் விளைவுகள் நல்லமுறையில் அமைவதால், அம்முறைகளைப் பிறரும் கையாள வேண்டுமென்று செய்முறைகளைக் கூறுகின்றனர். அவ்வகை மருந்துகளைக் கூறும் நூலாகக் காணப்படுபவை வருமாறு:
அகத்தியர் மகா திராவகம்800
அகத்தியர் குழம்பு
அகத்தியர் சித்தாதி எண்ணெய்
அகத்தியர் செந்தூரம்300
அகத்தியர் இரச குளிகை 14
அகத்தியர் வல்லாதி 600
தன்வந்திரி செயநீர் 50
திருமூலர் குளிகை 50
தேரையர் தைல வருக்கம்
மேகத்தெண்ணெய் 14
மச்சமுனி சன்னி கியாழம் 8
திருமூலர் கிரந்தி எண்ணெய் 8
கொங்கணர் கருக்குளிகை 8
பாம்பாட்டிச் சித்தர் பூபதி மாத்திரை 9
ஐனக மகாமுனிபிரமதண்டி எண்ணெய்
கல்லுளிச் சித்தர் ஜெயரச கற்பூர மாத்திரை 10
வேதாந்த சித்தர் பற்பம் 15

என்பனவாகும்.

அகத்தியர் வைத்திய வல்லாதி

மருந்தின் பெயரால் அமைந்துள்ள நூல்களில் அளவில் பெரியதாக அமைந்த நூல், அகத்தியர் வைத்திய வில்லாதி யாகும். இந்நூல் 622 விருத்தப் பாக்களைக் கொண்ட அந்தாதித் தொடையமைந்த நூலாகும். வல்லாதி என்பது, சேங்கொட்டையைக் குறிக்கும். அதனை ஆதியாகக் கொண்டு செய்யப்படும் மருந்து எனப் பொருள்படும்.

நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட தாதுப் பொருள்களில் இரசம் முதன்மை பெற்று விளங்குவதைப் போல, சரக்கு வகைகளில் சேங்கொட்டை முதன்மை பெறுகிறது என்பதற்கு, வைத்திய வல்லாதி சான்றாக அமையும்.

சேங்கொட்டை பல பொருள்களோடு சேர்ந்து பல்வேறு மருந்து களாகி தீராத பல நோய்களைத் தீர்க்கும் மருந்தாக உருவாகிறது. சேங்கொட்டை இயல்பில் கொடிய நச்சுத் தன்மை கொண்டது. அதனால்தான், மருந்து செய்யத் தொடங்குமுன் சுத்தி முறையைக் கட்டாயமாக மேற்கொள்ளச் செய்கின்றனர்.

சேங்கொட்டையை மருந்தாக மாற்றிய பின்னர், அது, சுமார் 450 நோய்களுக்குப் பயன் படுத்தப்படுகிறது என்பதைக் கொண்டு வல்லாதியின் வல்லமையைப் புரிந்து கொள்ளலாம்

அகத்தியர் குழம்பு

அகத்தியர் குழம்பு என்பது ஒரு மருந்தின் பெயர். இம்மருந்து, சித்த மருத்துவத்தின் சிறந்த மருந்துகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இம்மருந்தின் சிறப்பைச் சித்தர் நூல்கள் பலவற்றில் காண முடிகிறது. இம்மருந்தின் சிறப்பைத் தமிழ் மருத்துவம் என்னும் இயலில் விளக்கப்படும்.

எண்ணிக்கையால் பெயர் அமைந்த நூல்கள்

தமிழில் அமைந்துள்ள மருத்துவ நூல்கள் பலவற்றில், அந்தந்த நூல்களில் அமைந்திருக்கும் பாடல்களின் எண்ணிக்கையைக் குறிப் பிடுவது வழக்கமாகி இருக்கிறது.

நூலில் அமைந்துள்ள பொருளின் சிறப்பைக் கருதிப் பொருளின் பெயரையும், இடம் பெற்ற பாடல்களின் சிறப்பைக் கருதிப் பொருளின் பெயரோடு பாடல்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகின்றனர். பாடல்கள் சுவடிகளில் எழுதப் படுவதனால், பாடல்களின் வரிசை முன்னுக்குப் பின்னாக மாறக்கூடும். அவ்வாறு மாறினால், சொல்லப் படும் பொருள் விளங்காமலும் தொடர்ச்சி இல்லாமல் பொருள் மாற்றமும் அடையக் கூடுமாதலின் பாடல்கள் அந்தாதித் தொடை யால் அமைக்கப் பட்டிருக்கின்றன.

தமிழ் மருத்துவ நூலுக்கே உரிய சிறப்பு, நூல்கள் பெரும்பாலும் அந்தாதித் தொடையால் அமைக்கப் படுவதேயாகும்.

எண்ணின் பெயரால் அமைந்த நூல்கள் யாவும் நூலாசிரியர் பெயருடன், நூலுள் அமைந்த பாடல்களின் எண்ணிக்கையையும் குறிப்பிடுகின்றன. அவ்வாறான நூல்கள் வருமாறு :
அகத்தியர் – 12000
போகர் – 7000
போகர் – 700
சிவ வாக்கியம் – 1000
சட்டை முனி – 200

போன்றவையாகும். அகத்தியர் 12000 முழுவதும் கிடைக்காமல் 5000 பாடல்கள் மட்டுமே வெளிவந்திருக்கின்றன.

போகர்7000–இல் பொதுவான சித்தர் மரபுச் செய்திகள், பரம்பரைச் செய்திகள், சமூகச் செய்திகள் போன்றவற்றுடன் மருத்துவம் சார்ந்த செய்திகள் கூறப்படுகின்றன.

போகர்700 என்னும் நூலைப் போகர்7000 இன் சுருக்கமாகக் கருதுவர். சிவவாக்கியம் 1000 என்பது சிவாக்கியர் பாடல்களின் தொகுப்பாகும். வழக்கில் இருந்துவரும் சிவவாக்கியர் ஞானப் பாடல்500–ம் இதனுடன் இணைந்துள்ளது.

வாத நூல்கள்

வாதம் என்பது இரசவாதம் என்றும், இரசவாதம் என்பது உலோகங்களைப் பொன்னாக மாற்றுகின்ற கலை என்றும் பொருள்படும்.

இரசவாதம், இரசத்தை மூலப்பொருளாகக் கொண்டு செய்யப் படுகின்ற குருமருந்தை, நூற்றுக்கு ஒன்று என்ற அளவுக்குத் தாழ்ந்த உலோகங்களுடன் சேர்ந்து உருக்கினால், அந்த உலோகங்கள் பத்தரை மாற்றுத் தங்கம் போலாகும் என்பர்.

வாதக் கலையால் உலோகங்களைத் தங்கமாக மாற்றிக் கொண்டிருப்பது சித்தர்களின் நோக்கம் அன்று. செய்யப்படுகின்ற குருமருந்தானது சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா? என்று சோதித்து அறியவே உலோகங்களுடன் சேர்த்து உருக்கிச் சோதிக் கின்றனர். குருமருந்தைச் சேர்த்தால், தாழ்ந்த உலோகம் பொன்னாக மாறுவதைப் போல, குற்றமுடைய உடலினர்க்குக் கொடுத்தால் அக்குருமருந்து, அவர்களைக் குற்றமற்ற உடலினராக மாற்றும். அதன் பின்னர் யோக நெறிநின்று நீண்ட காலம் உயிர் வாழலாம் என்பதே வாதத்தின் நோக்கமாகும்.

அவ்வாறான வாதக் கலையைக் கூறுகின்ற நூல்கள் பல காணப்படுகின்றன. அவை,
அகத்தியர் வாத சௌமியம் – 1200
அகத்தியர் இலக்க சௌமிய சாகரம்
கொங்கணர் வாத காவியம் – 3000
கருவூரார் வாத காவியம் –
சட்டைமுனி வாத காவியம் –
யாகோபு வாத காவியம் – 400
திருவள்ளுவர் வாத சூத்திரம் – 80
யூகி வாதாங்க தீட்சை – 300
யூகி வாத வைத்தியம் – 200
யூகி பிடிவாதம் – 1000
யூகி வாத உலா – 1000
யூகி வாத கும்மி – 1000
யூகி வாத காவியம் – 2000

என்பனவாகும்.

பரிபூரணம் என்னும் பெயரால் அமைந்த நூல்கள்

பூரணம் என்பது நிறைவு, முழுமை என்னும் பொருளைத் தருவது. பரிபூரணம் என்பதும் அவ்வாறே அமையும்.

பரிபூரணம் என்னும் பெயரமைந்த நூல்கள் மருத்துவத்தை நிறைவாகவும் முழுமையாகவும் கூறுவனவாகக் கொள்ளலாம். அப்பெயரமைந்த நூல்கள்,
அகத்தியர் பரிபூரணம் – 1200
அகத்தியர் பரிபூரணம் – 69
அகத்தியர் பூரண காவியம் – 1000

அகத்தியர் பூரண சூத்திரம் – 216
சட்டைமுனி பூரண சூத்திரம்
தட்சிணாமூர்த்தி பூரணம் – 48
அகத்தியர் பூரணம் – 400
வைத்திய பூரணம் – 205
யூகி பரிபூரணம் – 200

என்பனவாகும்.

இந்நூல்கள், சித்தர்கள் மேற்கொண்ட வைத்தியம், வாதம், யோகம், ஞானம் ஆகிய நான்கின் அடிப்படைகளை இலக்கண நூல் களைப் போல உரைத்திடுவனவாகும்.

அகத்தியர் பூரணம் 400

அகத்தியர் பரிபூரணம், 400 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இதனுள், மருத்துவத்திற்குரிய செந்தூரம், பற்பம், தைலம், குளிகை, மாத்திரை, கியாழம், மருந்து, எண்ணெய், சூரணம், லேகியம், நசியம், நாடியைக் கொண்டு நோயறியும் முறை, நோய்வரும் வழிகள் போன்றவை கூறப்படுகின்றன.

வாதத்துக்குரிய கட்டு முறைகள், வைப்பு முறைகள், உலோக மாற்று முறைகள் போன்றவையும், யோகத்துக்குரிய அகர உகர மகரத்தைக் கையாளும் முறைகளும் கூறப்பட்டுள்ளன.

பின்னர் ஞானத்தைப் பற்றி விளக்குகின்றது. எனவே இந்நூல் ஒரு முழுமையுடைய பூரண நூலெனப் பெயர் பெற்றதெனலாம்.

திறவு கோல் நூல்கள்

திறவுகோல் என்பது பூட்டைத் திறக்க உதவும் கோல் என்றும், சாவி என்றும் கூறுவர்.

மருத்துவ நூலாக அமையும் திறவுகோல் நூல்கள் மருந்தையும் பிறவற்றையும் தயாரிக்கும் போது ஏற்படுகின்ற இடர்ப்பாடுகளையும், குற்றங்களையும், ஐயங்களையும் களைவதற்காக அமைந்த நூல் களாகும்.

மருத்துவ நூலாசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையைப் பின்பற்றி மருந்துகளை உரைப்பதனால், கற்போர் நெஞ்சில் கலக்கம் தோன்றக் கூடும் என்பதனால், அவற்றைப் போக்க இவ் வாறான திறவுகோல் நூல்கள் தேவையெனக் கருதப்பட்டன. அந்நோக்கில் இவ்வகை நூல்கள் தோன்றியிருக்கலாம். அவை,
அகத்தியர் திறவுகோல் சூத்திரம்
உரோமரிஷி வகாரத் திறவு கோல்
திருவள்ளுவர் நாதாந்த திறவு கோல்
பதினெண் சித்தர்கள் வைத்தியத் திறவு கோல் என்பனவாகும்.

பரிபாஷை நூல்கள்

பரிபாஷை என்பது பாதுகாக்குஞ் சொல் எனவும், மறைமொழி எனவும் பொருள்படும்.

தமிழ் மருத்துவ நூல்கள் எல்லாராலும் கற்கக் கூடியன என்றாலும் பொருளை அறிந்து கொள்ளல் எளிதன்று. காரணம், அந்நூல்களில் மறைமொழியாக அமைந்திருக்கும் சொற்களாகும். வெளிப்படை யாகக் காணும் போதில் ஒரு பொருளும், மறைமொழியை அறிந்தபின் வேறு ஒரு பொருளும் தோன்றுவதனால், தமிழ் மருத்துவம் எல்லாரையும் சென்றடையாமல் இருக்கிறதெனலாம்.

அத்தகைய மறைமொழிச் சிக்கலைத் தீர்ப்பனவாக அமை பவையே பரிபாஷை நூல்களாகும். அவை,
அகத்தியர் பரிபாஷை – 500
கௌமதி நூல் பரிபாஷை
இராம தேவர் பரிபாஷை
ரோம ரிஷி பரிபாஷை – 300
பரிபாஷைத் திரட்டு – 500

என்பன.

பரிபாஷைத் திரட்டு 500

இந்நூல் 500 பாடல்களைக் கொண்டு அமைந்துள்ளது. ஒவ்வொரு 100 பாடலுக்கும் ஒவ்வொரு காண்டமாகக் கொண்டிருக்கிறது. இதனுள், வழலை பிறப்பு, குரு முடிக்கும் முறை, கற்பமூலம், ஞான சாரமணி விபரம், மறைமொழிக்குத் தெளிவு என ஒவ்வொரு காண்டத்திலும் உரைக்கப்பட்டுள்ளது.

"" இந்த நூல் ஐந்து காண்டத் தியம்பிய கருவேதென்றால்
சந்தேகந் தீர்க்க வேண்டித் தமிழ் கவியை நூற்றுக்குள்
மந்திர வாத யோக மணி பஞ்சீகரண மார்க்கம்
சிந்தை செய் வகார பாட்டை தீட்சையுஞ் செப்பு மாதோ''18

என்றதனால் அறியலாம்.

சரக்கு வைப்பு நூல்கள் [Chemical and atomic processes]

சரக்கு என்பது மருத்துவத்துக்குப் பயன்படும் மருத்துவ மூலப் பொருள்களைக் குறிக்கும். சரக்கு வைப்பு என்பது ஒரு மூலப் பொருளைக் கொண்டு வேறொரு மூலப் பொருள்களையோ, பல மூலப் பொருள்களைக் கொண்டு வேறொரு மூலப்பொருளையோ தயாரிப்பது. குறிப்பாக, செயற்கைப்பாடான அணுப் பொருள்களைத் தயாரித்தல் எனலாம்.

தமிழ் மருத்துவத்துக்குப் பயன்படக் கூடிய மூலப் பொருள்கள்– மூலிகைகள், உபரசங்கள், பாடாணங்கள், உலோகங்கள் என்பர். இம்மூலப் பொருள்களில் பாடாணங்கள்64 ஆகும். இவை, இயற்கைப் பாடாணங்கள்32, செயற்கைப் பாடாணங்கள்32 என்பர்.

செயற்கைப் பாடாணங்கள்32 –ம் தயாரிக்க மேற்கொள்ளப்படும் முறையே சரக்கு வைப்பு என்பர். செயற்கைப் பாடாணங்களைத் தொட்டிப் பாடாணங்கள் என்றும் கூறுவர். இச்செயற்கைப் பாடாணங்களைத் தயாரிக்க, இயற்கையாகத் தோன்றுகின்ற மூலிகை கள், தாதுப்பொருள்களான உபசரங்கள், இயற்கைப் பாடாணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவர்.

இவ்வாறான செயற்கைப் பாடாணத் தயாரிப்பை, மச்சமுனி நாயனார் கடைக் காண்டம்800 (பா. 82275) மச்சமுனி நாயனார் கலை ஞானம்800 (பா. 1134) கொங்கணர் பல திரட்டு500 (பா. 253, 273) உரோம ரிஷி500 (பா. 259292) அகத்தியர் அமுத கலைஞானம் 1200 (பா. 647717) கூறுகின்றன.

இவையல்லாமல், தனிநூலாக அமைந்தவை வருமாறு:

அகத்தியர் முப்பூ வைப்பு

அகத்தியர் சரக்கு வைப்பு – 100

சட்டைமுனி சரக்கு வைப்பு

போகர் சரக்கு வைப்பு – 700

மச்சமுனி சரக்கு வைப்பு – 800

கொங்கணர் சரக்கு வைப்பு – 100

என்னும் நூல்கள் காணப்படுகின்றன.

கலைஞான நூல்கள்

கலை ஞானம் என்பது அறிவு நூல் என்றும் கலை நூல் என்றும் தமிழ்ப் பேரகராதி பொருள் கூறுகிறது.

தமிழில் காணப்படுகின்ற கலைஞான நூல்கள்,

அகத்தியர் கலைஞானச் சூத்திரம் – 120

அகத்தியர் அமுத கலைஞானம் – 1200

சுப்பிரமணியர் கலை ஞானம் – 500

தன்வந்திரி கலை ஞானம் – 500

கொங்கணர் கலை ஞானம் – 200

தட்சிணாமூர்த்தி கலை ஞானம் – 1200

நந்தீசர் கலை ஞானம்

போன்றவையாகும்.

அகத்தியர் அமுத கலை ஞானம்1200

அமுத கலை ஞானம் என்னும் இந்நூல் 1200 பாடல்களால் ஆன அந்தாதித் தொடையமைந்த நூல். இந்நூலைப் பல்வேறு கலைகளைக் கூறும் நூலாகக் கருதலாம். இது, மந்திரங்கள், சக்கரங்கள், தீட்சைமுறை, சரக்கு வைப்பு, செந்தூரம், பற்பவகைகள், மெழுகு, ஜெயநீர்வகை, தாம்பரம், சிமிட்டு, மயேந்திர சாலம், அஞ்சனம், வசியம், மறைப்பு, திலதம், மோடி வித்தை, கருவின் முறைகள், பில்லி, சூனியம், சரியை, கிரியை, யோகம், ஞானம், கற்பக் கூறுகள், தியான முறை, முப்புவின் கரு, கற்ப சமாதி, அஷ்ட பந்தனம் (பா. 24) ஆகியவற்றைக் கூறுகிறது. மேலும், வைத்தியன், வாதி, யோகி, ஞானி ஆகியோரின் இயல்புகளையும் நெறிமுறைகளையும் கூறுகிறது. இதனுள், அறுபத்தி நான்கு சித்து விளையாட்டுகளும் விளக்கப் படுகின்றன. அச்சித்து விளையாட்டுகளில் புராணங்களில் கூறப்படுகின்ற தெய்வச் செயல்கள் பல காணப்படுகின்றன.

இந்நூல் கூறுகின்ற பொருள்களை நோக்குமிடத்து, இது ஒரு கலை நூல் போலவே அறியத் தோன்றுகிறது. இவ்வளவு முறைகளையும் ஒருவனே அறிந்தவனாக இருந்தால் அவனே, ‘சகல கலா வல்லவன்’ எனல் பொருந்தும்.

வர்ம நூல்கள்

வர்மம் என்பது மர்மம் என்பதின் மரூஉச் சொல்லாக இருக்கலாம். வர்ம முறைகள் ‘மறைவு’ என்னும் பொருளில் வழங்கப்பட்டு வருவதனால் அவ்வாறு கருதலாம்.

வர்மம் என்பது பழந்தமிழ்க் கலைகளுள் ஒன்று. இது, தென்தமிழ் நாட்டில் ஒரு சிலரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. வர்மக்கலை, தமிழ் மருத்துவத்தின் ஒரு பிரிவான நரம்பு மருத்துவமாகும். இக்கலை, தற்காப்புக்காகவும் பயன்படுத்தப் படுகிறது.

விபத்து, விளையாட்டு போன்ற தொழில்களால் ஏற்படுகின்ற அடி, குத்து போன்றவை வர்ம பாதிப்புகளை ஏற்படுத்தி, தீராத நோயாக மாறுகின்றன. அவ்வாறான நோய்களுக்குரிய மருத்துவமே வர்ம மருத்துவம் என்பர். அம்மருத்துவத்தையும், செய்முறைகளையும், வர்ம நிலைகளையும் உரைப்பவை வர்ம நூல்களாகும்.

வர்ம நூல்கள் மொத்தம் 116 இருப்பதாகத் தெரிகிறது. அவற்றுள் ஒரு சிலவற்றை மட்டுமே காணமுடிகிறது. மற்றவை பெயரளவில் கூறப்படுபவை. வர்ம கண்டி, வர்ம சூடாமணி, வர்ம சூத்திரம், வர்ம பீரங்கி, திறவு கோல், வர்மக் கண்ணாடி, வர்ம அடங்கல், வர்ம வைத்தியம் போன்றவை குறிப்பிடத் தக்கவை.

பலவகைப் பெயர்களால் அமைந்த நூல்கள்

தமிழ் மருத்துவ நூல்களின் பெருக்கத்தையும், எண்ணிக் கையையும், அளவையும், இலக்கிய வகையையும் கருத்திற் கொண்டு வகைப்படுத்தி விளக்கப்பட்டவை அல்லாமல், வேறு பல பெயர்களில் அமைந்த நூல்களும் காணப்படுகின்றன.

அவை, மேலே குறித்த வகைப்பாட்டிற்குள் அடங்காமல் தனித்த சிறப்பினைக் கொண்டவையாக இருக்கக் காணலாம்.

அவற்றுள் சிலவற்றின் சிறப்பினைக் கருதி ஈண்டு குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.

ஞான வெட்டியான் 1500

இந்நூல் 1500 பாடல்களைக் கொண்டிருக்கிறது. இதனுள், இசைப்பாடல், விருத்தம், வெண்பா, கலித்துறை, கொச்சகம், சிந்து வகைப் பாடல்கள் அமைந்திருக்கின்றன.

"" எட்டுத்தூணாட்டி யொரு விட்டம் போட்டு
எழுந்ததின்மேல் அருகுவளை ஒன்றாய்க் கூட்டி
மட்டற்ற மோட்டின்வளை ஒன்று நாட்டி
வளமான துண்டுவளை ரெண்டும் போட்டு
கட்டாகக் கையகத்தில் வளைத்துக் கொண்டு
கறமான வரிச்சல் விலாக் கொடியு மாக்கி
முட்டமுட்ட நின்ற கம்பத்து மேலாய்
முகப்புடனே சிங்கார வீடு மாச்சே'' (பா. 90)

என்பது, தனது உடலைக் கட்டப்பட்ட குச்சிவீடாக உவமித்துக் கூறும் நயமிக்க பாடல். இவ்வாறு பல பாடல்கள் குறிப்பிடக் கூடியதாகச் சிறந்து காணப்படுகின்றன.

ஊர் வெட்டியான்கள், குடியானவர்களை ஆண்டை என்றழைக்கும் வழக்கு இந்நூலின் பாடல்கள் பலவற்றில் காணப்படுவதனால், அறிவுப் பொருளைக் கூறும் வெட்டியான் எனக் கொண்டு ‘ஞான வெட்டியான்’ எனும் பெயரால் வழங்கப் படுகிறதெனலாம்.

பஞ்ச ரத்தினம் – 500 [Five Elements]

பஞ்சம் என்பது ஐந்தையும் ரத்தினம் என்பது மணியையும் குறிக்கும். பஞ்ச ரத்தினம் என்பது ஐந்து பூதங்களைக் குறிக்கும்.

பஞ்ச பூதங்களின் தன்மையை அறிந்து அதன்படிப் பொருள்களைக் கூட்டுவித்தால் பளிங்கு போல அதீதமாகும் என்றார். அம்முறையால் செய்த பொருளை உட்கொண்டு மரணத்தை வெல்லும் யோகத்தைச் செய்தால் சித்தியுண்டாகும் என்பதை உரைப்பது, இந்நூல்.

“ நாட்டில் விளைந்த நாலுவித சரக்குகளை நாய்போல் விலைக்கு வாங்கி
மூட்டையிட்டு எரு முட்டையில் வன்னியிட்டு மூண்ட அழலில் மாய்வார்
சாட்டை யின்றிப் பம்பரம் சுழற்றுவார்கள் தமக்கான குண மிதுவே
ஏட்டைப் படித்து இஷ்டம் போல் பிதற்றும் இழிவான வர்க ளாண்டே''

பா. 174)

என்னும் பாடல்களால், பஞ்ச பூதங்களை அறியாமல் செய்யும் செயலைக் கண்டிக்கும் முறை தெரியவரும்.

பஞ்சமித்திரம் 300

பஞ்சமித்திரம் என்பது ஐந்து பொருள்களின் நட்பு என்று பொருள்படும். பொருள்களின் நட்பு, பகை அறிதல் மருத்துவத்தில் சிறந்த பணியாகையால், அவை பற்றி விளக்கிக் கூறுமாறு அமைந்த நூலெனலாம்.

பஞ்ச பூதப் பொருள்களாவன படிகாரம், வெங்காரம், சாரம், இந்துப்பு, வளையலுப்பு (பா. 24) எனக் கூறும். அவை, மருந்தாகச் சத்துவகை, உருக்கு பாகம், உலை செய் முறை, சத்துப் பொருளில் செம்பைப் பிரித்தெடுத்தல், உலைபோடும் வண்மை ஆகிய ஐந்து முறைகள் சிறப்பித்துப் பாடப்படுகின்றன.

பெருநூல் 800

பெருநூல் எண்ணூ<று என்னும் பெயருக்கு ஏற்பப் பல அறிய மருந்து முறைகள் இந்நூலில் கூறப்படுகின்றன. இதனுள், வைப்பு, செந்தூரம், சுத்திமுறை, பற்பம், கட்டு, மை வகைகள், மந்திர ஜாலங்கள் என்பன குறிப்பிடத்தக்கன. பல பாடல்கள் பொருள் விளங்காத நிலையில் காணப்படுகின்றன.

சித்தர் இலக்கியங்களில் பெரும் புதிராக அமைபவை மூன்று பொருள்கள். அவை, சாகாக் கால், போகாப் புனல், வேகாத் தலை என்பன. இவற்றுக்கான விளக்கம் இந்நூலில் காணப்படுகிறது. மேலும் விபரங்கள் ‘சித்தர் நெறி’ என்னும் இயலில் விளக்கப்படுகிறது.

சேகரப்பா

‘சேகரப்பா’ என்னும் இந்நூலைத் தேரையர் இயற்றிய நூல்களின் சிகரமாகக் கருதலாம். ஏனைய மருத்துவ நூல்களைப் போலல்லாமல் பிரித்தறியக் கூடியதாக அமைந்த நடை, தமிழ்ப்புலமை, மருந்துவச் செறிவு, உவமை நயம் ஆகியன இந்நூலின் தனிச் சிறப்பாகக் கூறலாம்.

இலக்கியப் புலமை மிக்கோர்களால் மட்டுமே அறியக் கூடிய சொற்களின் கடுமை, பரிபாஷைச் சொற்கள், பரியாயப் பெயர்கள் ஆகியவை கொண்ட பாடல்களால் இது இயற்றப் பெற்றுள்ளது. தமிழ் மருத்துவத்தின் தத்துவங்கள், மருந்துப் பொருளின் தன்மைகள், பயன்கள், மருந்துகளில் பற்பம், செந்தூரம், கட்டு, களங்கு, இளகம், குடிநீர், எண்ணெய் போன்ற செய்முறைகள், நோய்நாடல், நோய் அணுகா நெறிகள் போன்றவை பொதிந்துள்ளன.

தரு

‘தரு’ என்பது மரத்தைக் குறிக்கும். மரத்தின் உறுப்புகள் போல, உடல் நலத்தின் உறுப்புகள் கூறப்படுகின்றன. எல்லா நூலும் கூறுவது போல் மருந்தை மட்டுமே கூறாமல், உணவையும், உணவின் பண்பையும், உணவினால் உண்டாகும் நோயையும் கூறுகிறது. தீக்காய்தல், உடம்பைப் பிடித்துவிடல், தட்டல், இறுக்கல், முறுக்கல், அழுத்துதல், இழுத்தல், மல்லாத்துதல், அசைத்தல் என்னும் முறைகளால் (ட்ச்ண்ண்ச்ஞ்ஞுண்) உடல் வலி, வாயுக் குற்றம் ஆகியன போக்கும் வழி கூறப்படுகிறது.

குடிநீர் Syrup)

மருத்துவர் உதவி இல்லாமல் நமக்கு நாமே எளிய முறை மருந்துகளினால் நோய்களைத் தீர்க்கும் முறை கூறப்படுகிறது. இந்நூல் முழுவதும் குடிநீர் முறைகளே கூறப்படுவதனால் குடிநீர் (Syrup) எனப் பெயர்பெறும். இதில் 93 வகையான குடிநீர் உரைக்கப் பட்டுள்ளது.

இலக்க சௌமிய சாகரம்

இலக்கம் எண்ணையும், சௌமியம் அழகையும், சாகரம் கடலையும் குறித்து அமையும். எண்ணின் அழகுக் கடல் என்று இந்நூலின் பெயரைத் தமிழ்ப் படுத்திக் கூறலாம். இந்நூல் முழுவதும் எழுத்துகளை எண்ணி எண்ணிப் பொருள் காண வேண்டியிருப்பதனால், இப்பெயர் அமைந்ததாகக் கொள்ளலாம்.

“ வெற்றியென் றோன் பெயர் முதல் ளகர்கடை

வெள்ளை யெனும் பெயர் கடையுடன்
தந்தியுடன் சகர்கடையுந் தமியுந்

தாட்டிடு வாய்ரக ரொன்றை யே
நற்றவனாம் ணாவை விட்ட மடையனாம்
நாட்டுவை யேழதைக் கோட்டி யுடன்
உத்தம தாகவே பெயர் விளங்கிடு
முயர்வுட னிலைச் சாற்றினின்''19

என்னும் பாடல் வெள்ளைச் சாரணை என்னும் சரக்கின் பெயரைக் குறிப்பதற்காக இயற்றப்பட்டது. ஒரு பெயரைக் குறிக்க ஒரு பாடல் என்று பல பாடல்கள் இவ்வாறே இயற்றப்பட்டுள்ளன. இப்பாடல்கள் நுட்பமாக மருத்துவம் அறிந்த அறிஞர்களின் குறிப்புகளால் அறியக் கூடியதாக அமைந்துள்ளன.

இப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள நூல்கள் அல்லாமல் மேலும் பல அறிய நூல் வகைகள் காணப்படுகின்றன. அவ்வாறான நூல்களில் குறிப்பிடத் தக்கவையாக, கன்ம காண்டம்300, குறு நூல் வைத்தியம்600, துடி நூல் பின்80–முன்80, முப்பூ தீட்சை, இரண வைத்தியம்100, சல்லிய கிரிகை, கேசரி நூல், வசிய சூத்திரம் 500, கர்ப்பக் கோள், மலைவாகடம், உப்புக் கட்டு100, சித்தர் ஆரூடம், நாடி சாஸ்திரம், நெய்க்குறி, நீர்க்குறி, வைத்திய மாநிதி வல்லியார் ஊஞ்சல், ஒட்டியம், சல்லியம், கோரக்கர் சந்திரரேகை, சிமிட்டு ரத்தினச் சுருக்கம், வாலை சாத்திரம், சனன சேகரம், பிண்டோற்பத்தி, ரத்னாகரம்1001, கடிசூத்திரம், செனன சாகரம்557 என்பவை குறிப்பிடத் தக்கவை.

கால்நடை மருத்துவ நூல்கள்

தமிழ் மருத்துவம் மனிதர்களுக்கு மட்டும் மருத்துவம் என்னும் நோக்கில் வளர்ந்ததாக இல்லாமல், விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் மருத்துவம் கூறுகின்ற அளவிற்குப் பரந்து விரிந்த நிலையை அடைந்திருப்பது தெரிய வருகிறது. அகத்தியர் நூல்களில் பறவை, தாவரங்கள் ஆகியவற்றிற்கான மருத்துவம் கூறப்பட் டுள்ளதாகக் கூறுவர். அத்தகைய நூல்கள் சுவடியாகவே இருக்கின்றமை யாலும், அம்மருத்துவ முறைகளைத் தனியே பிரித்துத் தனி நூலாகக் கொள்ளாமல், பிற நூல்களுடன் இணைத்துக் கூறப்பட்டிருப்ப தனாலும், அவை பற்றின விவரங்களை இங்கே விரித்துரைக்க இயலவில்லை. ஆனால், கால்நடைகளுக்கான மருத்துவ நூல்கள் தனித்தனியே இயற்றப்பட்டுள்ளன. விலங்குகளின் மருத்துவ நூலாகக் காணப் படுபவை வருமாறு:

“ அசுவ வாகடம்
ஆனை வாகடம்
கஜவிதி நூல்
குதிரை வாகடம்
மாட்டு வாகடமும் வைத்திய வாகடமும்
மாட்டு வாகடம்
மாடுகள், குதிரைகள், பறவைகள் லக்ஷ்ணமும்
வைத்தியமும்.''

என்பனவாகும்.

இவற்றுள், ‘ஆனை வாகடம்’ (சுவடி எண். 7353) என்னும் சுவடியில் யானையின் இலட்சணம், சுழியின் வகைகள், சாதி வகைகள், ஆயுள் வகைகள் உரைக்கப்படுகின்றன.

யானைகளுக்கு உண்டாகும் நோய்களுக்கு மருந்துக் கவளங்கள் (வாயின் கொள்ளளவுக்கு ஏற்ப உருண்டையாகத் தரும் மருந்து). எண்ணெய்கள், தீனிகள் உரைக்கப்படுகின்றன. மதங்கொண்ட யானைக்கு மதத்தை அடக்கக் கவளங்கள் உரைக்கப்படுகின்றன.

(தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் உள்ள விலங்குகள், பறவைகள் மருத்துவ நூல்களில் அடங்கியுள்ள செய்திகளைத் திரட்டி மாடுகள், குதிரைகள், பறவைகள் லக்ஷணங்களும். வைத்தியமும் என்னும் நூலாக வெளியிடப்பட்டுள்ளது).

சரசுவதி மகால் நூல் நிலையத்தில் பல்வேறு மொழி அறிஞர்களால் இயற்றப் பெற்ற குதிரை மருத்துவ நூல்கள் மட்டும் இரண்டாயிரத் துக்கும் அதிகமாக உள்ளன என்பர். ஆனால், தமிழக மெங்கும் மாட்டு வாகடத்தில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் பலர் இருந்தும், அவர்களிடமிருந்து விலங்கியல் சார்ந்த நூல்களைப் பெற முடிவ தில்லை. காரணம், அந்நூல்களைப் பிறரிடம் காண்பிக்கவோ, படி யெடுக்கவோ அனுமதிப்பது குற்றமாகக் கருதி மறைத்தே வைத்துள்ளனர்20என்பது வருத்தத்திற்குரியது. உழுவதற்கும் கறவைக்கும் உறுதுணையாக விளங்கும் மாட்டின் வளத்தைப் பெருக்கிட, மாட்டுவாகட நூல்கள் எல்லார்க்கும் கிடைக்குமாறு திரட்டுதலும், பதிப்பித்திலும் நடைபெற்றாக வேண்டும்.

மந்திரமும் மருத்துவமும் சேர்ந்த நூல்கள்

மந்திரத்தால் மருத்துவம் செய்த முறைகள் ஒன்றிரண்டு நூல்களில் காணப்படுகின்றன. மச்சமுனி300 என்னும் நூலில் மருந்துப் பொருள்களைச் சேகரிக்கவும், செய்த மருந்துகள் சக்திபெறவும் மந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டிருக்கிறது. அவை போலல்லாமல், மருத்துவத்துடன் இணைத்துக் கூறப்படும் மந்திரங்களைத் தொகுத்துக் கூறும் தனி நூல்களும் இருக்கக் காணலாம், அவற்றுள் சில,

"" கருவூரார் மாந்திரீக காவியம்''

"" மந்திரமும் வைத்தியமும்''

"" விஷ வைத்தியமும் மந்திரமும்''

"" வாத முறையும் மாந்திரீக முறையும்''

ஆகும். இந்நூல்கள் சித்தர்களால் இயற்றப் பெற்றதாகத் தோன்ற வில்லை. ஆயினும் சித்தர்கள் மந்திரம், மாந்திரீகம் போன்றவைகளிலும் தேர்ச்சியுடையவர்களாக இருந்திருக்கின்றனர் என்பதற்குச் சான்றுகள் பல உள.

மருத்துவமும் சோதிடமும் சேர்ந்த நூல்கள் மருத்துவத்துடன் சோதிடம் என்னும் கோளியல் முறை நெருங்கிய தொடர்புடையதாகக் காணப்படுகிறது. சோதிடர்கள், கோள்களின் ஆதிக்கத்தால் உடம்பில் விளைவுகள் ஏற்படுமென்றும் அதனால் நோய்கள் உண்டாகக் கூடும் என்றும் குறிப்பிடுகின்றனர்.

புலிப்பாணி வைத்தியம்500, நாடி நூல்கள், மருத்துவத் தனிப் பாடல்கள் ஆகிய நூல்கள் கூறும் மருத்துவக் காலங்கள் வருமாறு:

நோயாளிக்கு நோய் வந்துற்ற காலம், நோயாளி மருந்து உண்ண ஏற்ற நாள், மருந்து செய்வதற்குரிய பருவம், மருந்துப் பொருள்களைச் சேமிக்க வேண்டிய பெரும்பொழுது ஆகியவற்றுடன், நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை செய்யக் கூடாத திதியுடன் உடற்பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அகத்தியர் கன்ம காண்டம்300 என்னும் நூல், மனிதர்கள் செய்கின்ற கன்மத்தின் காரணத்தினால் தான் நோய்கள் வருகின்றன என்றும், செய்த கன்மத்திற்கு நிவர்த்தி செய்யாவிட்டால் கன்ம நோய் தீராது என்றும் குறிப்பிடுகிறது.

நட்சத்திரங்கள் 27–ம் மனித உடலை 27 பாகங்களாகக் கொண்டு ஆட்சி செய்கின்றன. மனிதன் பிறக்கும் நேரத்து நட்சத்திரத்தில், சந்திரனின் நடமாட்டம் எந்த நட்சத்திரத்தில் உள்ளதோ அதையே அவனின் பிறந்த நட்சத்திரமாகவும், அந்த நட்சத்திரம் அவனின் உடலில் எந்த அங்கத்தின் ஆதிக்கத்தில் உள்ளதோ அந்த அங்கமே அவனின் உயிர் நிலைக்கும் இடமாகும். அந்த இடத்தில் பழுது ஏதும் ஏற்பட்டால் அது அவனின் உயிரைப் பாதிக்கக் கூடியதாக இருக்குமென்று சோதிட நூல் குறிப்பிடுகிறதாகக் கூறுவர்.

இவ்வாறான சோதிடமும் மருத்துவமும் கலந்த செய்திகளை மருத்துவ நூல்கள் மருத்துவமாகவும், சோதிட நூல்கள் சோதிடமாகவும் கூறுகின்றன. இவ்விரண்டும் இணைந்த, சோதிடமும் மருத்துவமும் என்று ஒரு நூல் காணப்படுகிறது. இதனால், சோதிடத்துக்கும் மருத்து வத்துக்கும் உள்ள தொடர்பு அறிய முடிகிறது.

மதிப்பீடு

தமிழ் மருத்துவ நூல்களாகக் காணப்படுவனவற்றை எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை நோக்கும் பொழுது, அவை தமிழ் மொழி இலக்கியத்தின் எண்ணிக்கை, அளவு ஆகியவற்றை விட மிகுந்திருப்ப தாக அறிய முடிகிறது.

இலக்கிய வளத்திலும் மொழி வளத்திலும் குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்குச் சிறந்தவையாகக் காணப்படுகின்றன.

மருத்துவ நூல்களின் பெருக்கத்தால் தமிழ் மொழியின் சிறப்பு மிகுந்து காணப்படுவதுடன், தமிழ் இலக்கியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், உரை நடை இலக்கியம் என இருந்த நிலை மேலும் வளர்ந்து, மருத்துவக் கலை இலக்கியம் என்னும் புதிய வகை இலக்கியமும் இருப்பது போற்றுதலுக்குரியது.

குறைபாடுகள்

சுவடிகளிலிருந்து நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள பல மருத்துவ நூல்களில் சொற்பிழை, எழுத்துப் பிழை, யாப்புப் பிழை, ஆகியவை காணப்படுகின்றன. அதற்குக் காரணமாக அமைவது, தேர்ந்த மொழிப் பயிற்சியுடையவர்களால் சரிபார்க்கப்படாமல் பதிப்பித்தலேயாகும்.

பல நூல்கள், தலைப்பு அட்டவணை, பாடற்குறிப்பு போன்ற பதிப்பிற்குரிய முறைகள் பின்பற்றப் படாமல், பாடல்களை மட்டும் பதிப்பித்து வெளியிட்டுள்ளன.

உரைகள் கொண்ட நூல்கள் பத்துக்கும் குறைவானவை எனலாம்.

ஒரே நூல் பல பெயரிலும், பல நூல்கள் ஒரே பெயரிலும் பதிப் பாளர்களால் மாற்றி வெளியிடப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. மேற்கண்டவை தவிர்க்கக் கூடியவையே.

தொகுப்புரை

இலக்கிய வளத்தைக் கருதி, மருத்துவ நூல்கள் அனைத்தையும் சுவடிகளிலிருந்து பெயர்த்தெழுதி வெளியிட வேண்டும்.

நோய்க்குரிய நூல், மருந்திற்குரிய நூல், வாதத்திற்குரிய நூல், யோகத்திற்குரிய நூல், ஞானத்திற்குரிய நூல் எனத் தொகுத்து, தொகுதி தொகுதியாக வகைப் படுத்தி வெளியிட வேண்டும்.

மருத்துவ நூல்கள் அனைத்தும் பயனுடைய நூல் எனக் கொள்ள முடியாது. பயனுடைய நூல்களைப் பாதுகாக்கும் நோக்கில் அவை உரையுடன் கூடிய நூல்களாக வகுத்து வெளியிட வேண்டும்.

நலிந்து கொண்டிருக்கும் மருத்துவ இலக்கியம் வளர்ச்சியடைய, தேர்ந்த பதிப்பாசிரியர் குழுவின் மேற்பார்வையுடன் மருத்துவ இலக்கியக் களஞ்சியம் என்னும் பெருந்தொகுதியாகத் தேர்ந்தெடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் இலக்கியப் பட்டயக் கல்வி போல், மருத்துவ இலக்கியப் பட்டயக் கல்வியை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மருத்துவ இலக்கியத்தின் வளத்தையும் சிறப்பையும் அறியச் செய்ய வேண்டும்.

மருத்துவ இலக்கியம் பாடநூலில் இடம் பெற்றால் தான் தமிழ் மருத்துவம் வளரும் சூழல் உருவாகும்.

 

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions