If you are not able to read tamil, Click here
தமிழில் மருத்துவ இலக்கியங்கள்
அணிந்துரை
கருத்துரை
என்னுரை
பதிப்புரை
இயல்
 
தமிழ் மருத்துவ இலக்கியங்கள்
தமிழ் மருத்துவத்தின் வரலாறு
தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் மருத்துவம்
சித்தர் நெறி
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்
முடிவுரை
பின்னிணைப்புகள்
 
மருத்துவப் பூக்கள்
சித்த மருத்துவம் – ஆயுர் வேதம் ஒப்பீடு
வேத நூல்களில் தாவரங்கள்
தமிழ் மருத்துவம்
வர்ம நூல்கள்
பஞ்சபூதத்தின் பரிமாணங்கள்
சித்தர் சமாதி
கோயில் தாவரங்கள்
அகத்தியர் குழம்பு
கற்பங்கள்
நரம்பு முறிவினால் உண்டாகும் பக்க விளைவுகள்
படுவர்மங்களும் இளக்கும் காலமும்
நோயுற்ற நாள் பலன்
நோயுற்ற நாள் – நோயின் தன்மை
அமுத நிலை
சித்தர் சாதி, மரபு
சித்தர் குடும்பம்
அறுபத்து நான்கு சித்துகள்
ஐந்தெழுத்தும் உடல் சக்கரமும்
தமிழ் மருத்துவச் சுவடிகள்
பதிப்பு நூல்கள்
துணை நூற்பட்டியல்
தமிழ் மருத்துவ நூல்களின் இலக்கியக் கூறுகள்

இலக்கியம்

இலக்கியம், வாழ்க்கையில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவங் களையும், உண்மைகளையும் கலைநயத்துடன் வெளியிடுகிறது. இலக்கியத்தால், பிறருடைய வாழ்க்கை, செயல், அறிவு, நினைவு, உணர்ச்சி, உள்ளக்கிடக்கை, குறிக்கோள் என்பவற்றை அறிந்து கொள்ளவும், கற்றுக் கொள்ளவும் முடியும்.

வாழ்வும் இலக்கியமும்

இலக்கியம் எனப் படைக்கப்படுவன அனைத்தும் இலக்கியமாகி விடுவதில்லை. இலக்கியம் என்பது, மனித வாழ்வோடு இணைந்து, ஆழ்ந்து–அகன்று, என்றும் நிலைபெறுவதுமான மனிதப்பண்புடன் தொடர்புடையது; மனிதனால் விரும்பக் கூடியது; மனித வாழ்க்கையோடு தொடர்புடையது; என்றும் நிலைத்திருக்கக் கூடியது; கற்போர் மனத்தில் இன்பத்தை ஊட்டுகின்றனவாக அமைவது.

இலக்கிய வகை

தனிமனிதன் வாழ்வு, அனுபவம் என்பவற்றைக் கூறும் இலக்கியம் ஒருவகை. மற்றொன்று, புறவுலக வாழ்வின் ஈடுபாட்டினால் ஏற்பட்ட அனுபவத்தின் வாழ்வு, தாழ்வு, நன்மை, தீமை, குற்றம், நீதி ஆகியவற்றுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பை அனுபவத்தால் கூறுவது. அனுபவம் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு மட்டும் உரிமையானதாகா தாகையால் மனித சமுதாயம் முழுமைக்கும் பொதுமையாகி விடுகிறது. அத்தகைய வகைக்குரியவை இலக்கிய வகைகளாகின்றன.

இலக்கியக் கலை

கலை என்பது ஒருவகை ஆற்றல்; குறிப்பிட்ட ஒருவழியை மேற்கொண்டு, முன்னரே கலைஞன் மனத்தில் தோன்றிய ஒரு பயனைப் பிறர் அறியச் செய்யும் ஆற்றலே ஆகும் அது என்கிறார், ஆபர் கிராம்பி என்ற திறனாய்வாளர். மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள், தங்கள் கருத்துகளில் தோன்றிய சிறந்த உண்மைப் பொருள்களைக் கலைகளின் மூலமே வெளியிட்டனர். அவர்கள் வாழ்க்கையில் பெற்றிருந்த அனுபவத்தை அற ிவிக்கும் கருவியாகத் திகழ்வன அவர்கள் ஆக்கிய கலைகள்1 என்று, இலக்கியக் கலைக்குரிய அடிப்படைகள் கண்டறியப் படுகின்றன. அத்தகைய அடிப்படைகளைக் கொண்டு திகழும் கலைகளில் மருத்துவமும் ஒன்று. ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என்று கூறப்படுபவற்றுள் மருத்துவமும் அடங்கும்.

இலக்கியப் பொருள்

தமிழர்தம் வாழ்வியல் இலக்கியமாகக் கொள்ளப் பட்டவை, இரண்டு; ஒன்று அகம், மற்றொன்று புறம். அகப்பாட்டு இலக்கியங்கள் அறிவை ஆதாரமாகக் கொண்டு தோன்றுவதில்லை. புறப்பாட்டு இலக்கியங்கள் உலகியலையும், அறிவையும் ஆதாரமாகக் கொண்டு தோன்றுகின்றன. அறிவின் பயனாகத் தோன்றுகின்ற புறப்பாட்டு இலக்கியங்கள் யாவரும் ஒப்புக் கொள்ளக் கூடியனவாக இருக்கும். ‘‘மண்திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும், விசும்புதைவரு வளியும், வளித்தலைஇய தீயும், தீ முரணிய நீரும் என்றாங்கும் ஐம்பெரும் பூதத்து இயற்கை போல”2 என்னும் புறப்பாடல், அறிவின் பயனாகவும் அதன் அடிப்படையிலும் தோன்றியது. இது அறிவுடை யோர் அனைவருக்கும் ஏற்புடையதே. இவை அறிவின் பயனாகக் காணப்படும் பொருளைப் பற்றிக் கூறப்பட்டவை. இவ்வாறான பாடல்கள் மெய்ம்மைப் பொருள்கள் பற்றியன. இத்தகைய மெய்ம்மைப் பொருள்களைப் பற்றிய இலக்கியங்களாகத் திகழ்பவை மருத்துவ இலக்கியங்களாகும்.

இலக்கிய நயங்கள்

இலக்கியம் சிறந்து விளங்குவதற்குக் காரணமாக அமைபவை புலவரின் கற்பனைத் திறன், கருத்துச் செறிவு, கவிதை நயம், சொல்லுகின்ற உத்தி, சொல்வளம் ஆகியவை எனலாம். இவை யெல்லாம் படைப்பு இலக்கியங்களில் பொருந்தி வரக் காணலாம். கற்பனைக்கு அதிகம் இடந் தராமல் கூறவந்த பொருளை உணர்த்துவதே நோக்கமாகக் கொண்ட இலக்கியங்களில் உணர்வுச் சொற்கள் (sensuous words) குறைவாகவும், அறிவுச் சொற்கள் (conceptual words) அதிகமாகவும் காணப்படும். அறிவுச் சொற்கள் எனப்படும் சொல்வகைகள் நிரம்பக் கொண்ட இலக்கியவகை அமைப்பில் காணப்படுவது தமிழ் மருத்துவ இலக்கியங்களாகும்.

அந்த மருத்துவ இலக்கியங்களில், சொற்களைப் போலவே சொல்லப்படக்கூடிய கருத்தின் பொருள் சிதைந்து விடாதவாறு, பொருளை உணர்த்துவது ஒன்றே நோக்கமாகக் கொண்டு, பொருட் செறிவுகளைக் கொண்ட பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. பொருளைச் சொல்வதற்காகப் பயன்படுத்தப்படும் உத்திகள் மாறி மாறி அமைந்தால், கற்போர் நெஞ்சில் கருத்துச் சிதைவு தோன்றக்கூடுமாகை யால், பெரும்பாலும் தொடக்க முதல் இறுதி வரை ஒரே வகையான உத்தி முறைகள் கையாளப்பட்டிருக்கின்றன.

தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்ற அளவுக்குக் கவிதை அழகு, மருத்துவ இலக்கியங்களில் காணப்படுவதில்லை. இருப்பினும் மருத்துவத்துக்குரிய பண்புகளை விளக்கிக் கூறும் போக்கில் ஆங்காங்கே கவிதை அழகு, படைப்பிலக்கியங்களில் காணப் படுவதைப் போலப் பரந்து காணப்படுகின்றன.

இலக்கியங்களின் இயல்புகள் எனக் கண்டறியப்பட்ட சில தன்மைகளை இலக்கியக் கூறுகள் எனலாம். இலக்கியத்தின் இயல்புக்குத் தேவை உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகியன. இவை, மருத்துவ இலக்கியங்களில் இடம் பெற்றிருக்கும் பாங்கு இங்கு ஆராயப்படுகிகின்றன.

மருத்துவ நூல்களின் அமைப்பு முறை, நூல்களின் வகைகள், செய்யுள் வடிவங்களின் வகை, செய்யுள் உறுப்புகள், செய்யுள்களில் காணப்பெறும் குறிப்புப் பொருள்கள், சொல்லாட்சி, அணிகளான உவமை, உருவகம் போன்றவற்றின் நிலை ஆகியன ஆராயப் படுகின்றன.

செய்யுள் கூறும் முறை

சித்த மருத்துவ முறைகளைக் கூறும் மருத்துவ நூல் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகையான கூறும் முறைகளை அமைத்திருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, அகத்தியர் தன் மாணாக்கர் புலத்தியருக்குக் கூறுவது போலவும், போகர் தன் மாணாக்கர் புலிப்பாணிக்கு உரைப்பது போலவும் கூறுகின்றனர். மற்ற நூலாசிரியர்களில் திருவள்ளுவர் ஆண்டே என்று நிலக்கிழாரை விளிப்பது போலக் கூறுகிறார்.

அகத்தியர் நூலுள்,

கேளப்பா புலத்தியனே ஐயா ஐயா
கெடியான தயிலமதில் வகையைக் கேளு!''3
என்றும்,

எட்டடா, வெட்டடா, தட்டடா, மெட்டடா''4
என்றும்,

தயவாய்ச் சொல்லும் பள்ளீரே''5

அதிக மேகசுர மோடு மாண்டே''6
என்றும் கூறப்படுகிறது. காவியம், கலைஞானம் போன்ற பெருநூல்கள் கூறு முறையில் புலத்தியனே என்றும், வல்லாதி போன்ற நடுத்தர அளவுடைய நூல்கள் எட்டடா, வெட்டடா என்றும், பள்ளு நூல் போன்ற சிறுநூல்கள் பள்ளீரே, ஆண்டே என்னும் முன்னிலைகளைக் கொண்டு உரைக்கக் காணலாம்.

போகர் நூலுள்,

சேரவே இன்னுமொரு மார்க்கம் சொல்வேன்
செம்மலுடன் புலிப்பாணி மைந்தா கேளு''7
என்றும்,

ஆச்சப்பா இன்னமொரு மர்மம் சொல்வேன்
அப்பனே புலிப்பாணி மைந்தா கேளு''8
என்றும், புலிப்பாணியை விளித்துக் கூறும் முறை போகர் நூல்களில் காணப்படுகிறது.

இராம தேவர் நூலுள்,

பாடுகிறேன், நாடுகிறேன்''

பாரப்பா, நேரப்பா, வீரப்பா, ஆரப்பா''9
என்றும், யாரையும் குறிப்பிட்டு உரைக்காமல் கூறுவதாக அமைந் துள்ளது.

திருவள்ளுவர் நூலுள்,

பரிசை கோடா கோடி வித்தைகாண்
பாடினார் பதினெண் மகுத்தோர்களும்
வரிசையான திருவள்ளுவ னானதால்
வைப்புமே யருள் வாத மிதாண்டையே''10

உங்களுக்கும் எங்களுக்கும் பேதமாமோஆண்டே
உள்ளுணர்ந்து பார்க்க பேதம் எள்ளளவில்லை''11
என்றும், ஆண்டே–ஆண்டே என்றும் முன்னிலை கொண்டு பாடுவதாக அமைந்திருக்கிறது.

தமிழ் மருத்துவ நூல் அமைப்பு முறை

நூல்கள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்று தொல்காப்பியம் கூறும் இலக்கணமாவது,
“நூல் என்பது, சொல்லப்படும் பொருள், தொடக்கம் முதல் முடிவுவரை மாறுபாடின்றி அமைக்கக் கருதிய பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் காட்டித் தன்கண் அடங்கிய பொருள்களை விரித் துரைத்தற்கு ஏற்ற சொல்லமைப்போடு பொருந்தி நுண்ணறிவு பொருந்த விளக்குதலாகியது நூல்”12 என்னும் இலக்கண எல்லைக்குள் அமைந்தனவாக மருத்துவ நூல்கள் விளங்குகின்றன.

நூலுள் சொல்லக் கருதிய பொருள், தொடக்கம் முதல் முடிவு வரை வேற்றுப் பொருள் கலவாமல், பொருளின் பொருளைத் தொகுத்தும், விரித்தும், வகுத்தும் உரைக்கப் பட்டுள்ள நூல்களாக, அகத்தியர் வைத்திய காவியம், அகத்தியர் பரிபூரணம்400, அகத்தியர் கருக்குரு, அகத்தியர் வைத்திய வல்லாதி, அகத்தியர் நயனவிதி, கருவூரார் வாத காவியம், சட்டமுனி வாத காவியம், போகர்700, புலிப்பாணி வைத்தியம்500, மச்சமுனி திருமந்திரம்800, திருவள்ளுவர் வைத்திய சிந்தாமணி, திருவள்ளுவர் பஞ்சரத்தினம், தேரையர் சேகரப்பா, மருத்துப் பாரதம், யமக வெண்பா, யூகிமுனிவர் பரிபூரணம்200, யூகி முனிவர் பிடிவாதம்1000, யூகிமுனிவர் வாத வைத்திய உலா போன்ற நூல்கள் கூறத் தக்கவை.

நூலின் தலைப்புக்கு ஏற்றவாறு பொருளமைந்து இருக்கக் காணலாம். நூலின் பெயர்கள், நூலில் அமைந்த பொருளின் உறுப்பின் பெயராலும், யாப்பின் பெயராலும், அளவின் பெயராலும், வகையின் பெயராலும் அமைந்துள்ளன.

நூலின் வகை

நூலின் வகைகளைக் குறிப்பிடும் போது, அவை இரண்டு வகைப்படும் என்பர். ஒன்று, முதனூல் என்றும், மற்றொன்று வழி நூல் என்றும் உரைப்பர்.

உரைபடு நூல்தாம் இருவகை நிலைய
முதலும் வழியுமென நூதலிய நெறியின்''13

என்னும் சூத்திரத்தின் நெறியின் வழி அமைந்த நூலான முதனூல் எனப்படுவது, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்றவை. வழிநூல் எனப்படுவது, மகாபாரதம், கம்பராமாயணம் போன்றவை.
தமிழ் மருத்துவ நூல்களில் முதனூல் என்பதும், வழிநூல் என்பதும் இருவகைப் பட்ட நூல்கள் அல்லாமல் சார்புகளும் இருக்கக் காணலாம்.

முதனூல்/வழிநூல்

நூலாசிரியனின் மெய்யுணர்வினாலும் அறிவின் முயற்சியினாலும் இயற்றப்படுவது முதனூல் என்றும், வேற்று நூல் ஒன்றன் துணை கொண்டு அதன் பொருளை அடியொற்றி இயற்றுவது வழிநூல் என்றும் அறியப்படுவதனைப் போல,

செப்பினான் தென்மலையிருந்து
தீந்தமிழா ராய்ந்து இலக்கணம் வகுத்த
செய்தவத் துயர்முனி தானே''
என்று, நாக முனிவர் தலை நோய் மருத்துவ நூலில் உரைத்திருப்ப தனால், அந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.

தேரன் நான் மொழி செந்தமிழ் வாகடம்
ஊம நாரியி யம்பிடு வாசகமெனுமேனும்
ஆதி யானதன் வந்திரி மாதவர்
போகர் மூலர்தி கம்பரர் கோரகர்
ஆயர் வாசுகர் கம்பள் மூழையர்சடைநாதர்
போதர் மேதையர் கொங்கணர் மாசிதர்
ஆதி நூனெறி பண்டித தானவர்
போலி வாகட னின்சொலி தாமெனவருள் வாரே''14
என, தேரையர் சேகரப்பா அவையடக்கம் கூறுவதனால், குறுமுனி, தன்வந்திரி, திருமூலர்,போகர் , திகம்பரர், கோரக்கர், இடைக்காடர், வாசுகர், கம்பளிச் சித்தர், சடை நாதர், கொங்கணர் ஆகியோர் இயற்றிய முதல் நூலுக்கு இந்நூல் வழிநூல் எனக் கருதலாம்.

மேலும், தேரையர் நூல்களான சிகாமணி வெண்பா, நிகண்டு, காப்பியம், தரு, அந்தாதி, மருத்துப் பாரதம், வண்ணம், நாள்மாலை, யமக வெண்பா, எதுகை வெண்பா, கரிசல் என்னும் பதினொரு நூலையும் வழிநூலாகவே கொள்ள வேண்டும்.

விதியினால் விதித் தருட்பரம குருமுனி யருளால்
மதியினால் திருவள்ளுவன் எனும் புகழ்பெருநூல்
ஆதித ஞானவெட்டி யாயிரத் தைஞ்ஞூரதின் சுருக்கம்
துதியரத்ன சிந்தாமணி எனும் எண்ணூ<று தொழுவாம்''15
என்று, நவரத்தின சிந்தாமணியில் நூல் வணக்கம் கூறப்படுகிறது. திருவள்ளுவர் இயற்றிய இந்நூலும், ஞானவெட்டியான்1500–ம் திருவள்ளுவரின் முதனூலாகும். அதேபோல, இவரின் கெவுனமணி வயது100, பஞ்ச ரத்தினம்500, குறள் நெடி ரஹிதம் 300, 200, 50, 30, 16, 10 என்னும் நூல்களும் முதனூல் என்றுரைக்கலாம்.

தராதரமா யெனையாண்ட போகர் பாதம்
சதாநித்தம் பணிந்துணர்ந்து தாசனாகி
துறா துரச்சி சிவன் பாதமும் போற்றி போற்றி
சொல்லுகிறேன் ஏழுலட்சம் சுருக்கம் தானே.''16

பருவத்தில் வந்து என்னை ஆட்கொண்ட போக முனிவர் பாதங்களைப் போற்றிப் பணிந்து, அவரின் மாணவனாகி சிவன் பாதம் போற்றி, போற்றிச் சொல்லுகிறேன், ஏழுலட்சம் பாக்களைக் கொண்ட வாத நூலின் சுருக்கந் தன்னை என்றுரைக்கின்றமையால் கொங்கண முனிவரின் முக்காண்டம் 3000மும், வழிநூல் என்றுரைக்கலாம்.

இந்நூலாசிரியரின் காலத்தில் வாதநூல்ஏழுலட்சம் பாக்களைக் கொண்டு இருந்தது என்பது மிகையாகத் தோன்றகிறது. ஏழு லட்சம் என்பது ஏழு லட்சணம் அல்லது ஏழு வண்ணங்கள் எனக் கருதலாம். நிறங்களை அறிதல் வாதத்தில் பொருள்களை ஒன்றுடன் ஒன்றை இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால் ஏழுலட்சணம், ஏழு லட்சம் என்றார் எனலாம்.

யூகி முனிவர், தன் முன்னோர்களான அகத்தியர், புலத்தியர், தேரையர் வழி முறை மரபில் தோன்றியவர் என்பதாகக் கூறினார், அவர்களிடம் கேட்டுத் தேறி நூலை இயற்றினேன் என்பது, மருத்துவம் வழிவழியாகக் குருமுறையில் பயிலப்பட்டு வந்திருக்கிறது. தன் முன்னோர்கள் பாடமாகக் கேட்டு அறிந்து பின்னர் பயிற்சி பெற்று அனுபவத்தை நூலாகச் செய்ததையே, மரபுக்குக் குற்றம் வாராதவாறு கூறுகிறார்.

அகத்தியருக் குச் சொல்ல ஆதி புலத்தியரும்
தகத்துடனே கேட்டுத் தான்மகிழ்ந்தார் சகத்தில்
தேரருக்குச் சொன்னார் தேரருமே யூகிமுனி
பாரி லதிகம் பரத்தினர் சீராய்
உலகம் பிழைக்க வோங்கு ரசவாதம்
கலகமில் லாமலே காட்டினார்.''17
யூகிமுனிவர், “பாரில் அதிகம் பரத்தினார்’ என்றுரைப்பதினால் முன்னவர்கள் மாணவர்களுக்குப் பாடமுறையில் மட்டுமே சொல்லி யுள்ளனர். யூகி முனிவரோ உலகத்தின் நலன்கருதி நூலாக்கி வெளியாக்கினார் என்றதனால், யூகிமுனிவரின் வைத்திய வாத உலா, பிடிவாதம் 1000, வாதகாவியம் 2000, வாதகாவியக் கும்மி 1000, வாதாங்க தீட்சை 300, வாதவைத்திய விளக்கம் 200, மதிவெண்பா, கரிசலை 36 , வைத்திய சிந்தாமணி 800, ஆனந்த களிப்பு 1000 என்னும் நூல்கள் முதனூல் வகையைச் சேர்ந்தனவாகக் கொள்ளலாம்.

மேற்கண்டவாறு, சித்த மருத்துவ நூல்கள் முதனூல்களாகவும், வழி நூல்களாகவும் அமைந்து காணப்படுகின்றன. இவை, நூல்களுக்கு இலக்கணம் கூறும் முறையினைக் கொண்டு இருப்பதாகக் கருதலாம்.

பாக்களின் வகைகள்

சித்த மருத்துவ நூல்களில் அமைந்திருக்கும் பாடல்கள் எந்தெந்த வகையானதாக இருக்கின்றன என்பது இந்தப் பகுதியில் ஆராயப் படுகிறது.
பா, வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். இவை செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று ஓசை அடிப்படையில் வகைப்படுத்தப் பட்டிருக்கின்றன.

பாக்கள் ஓசையால் மகிழ்ச்சியை ஏற்படுத்தி, அதன்பின் கூறப் படுகின்ற கருத்தின் பொருளை உணரச் செய்யப் பயன்படுகின்றன. அந்த வகையில் மருத்துவ நூல்கள், பலவகைப் பாக்களையும், பாவினங் களையும் கொண்டு இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் பெரும் பாலான பாடல்கள் ஓசைநயம் கருதியே இயற்றப் பெற்றதாகக் கருதலாம். பொருளைக் கூறும் போது எழுத்து, சொல் ஆகியவற்றின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு சில இடங்களில் யாப்பை மீறுவது, இதற்குக் காரணமாகக் கூறலாம்.

வெண்பாவின் தலைமை

பாக்களில் வெண்பா முதன்மையானது. பிற பாடல்களை இயற்றுவதைவிட வெண்பா இயற்றுவது கடினம் என்பதால் ‘வெண்பா புலி’ என்று கூறக் காணலாம். அத்தகைய வெண்பாவில், நயமிக்க மருத்துவக் கருத்துகளைக் கூறுவது மிகக் கடினம் எனத் தோன்றினாலும், வெண்பா மருத்துவ நூல்களில் அதிகம் இடம் பெற்றிருக்கக் காணலாம். முழுவதும், வெண்பாவாகக் கொண்ட நூல்கள் இருக்கின்றன. வெண்பாவில் அமைந்த நாலடியார் என்னும் கீழ்க் கணக்கு நூல் போல, மருத்துவ வெண்பாக்கள் உள்ளன.

வெண்பா

மேலிட்ட பித்த வெறிக்குங் குரங்கினெதிர்
கோலிட் டதுபோற் குறுக்கலாற் சாலப்
பொடியாக்கித் தேனுடனே போட்டுச் சமைத்த
துடியா லறும்பித்தச் சூர்''18
இது, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா. இரண்டு விகற்பத்தால் அமைந்தது.
ஏலத்தைப் பொடியாக்கித் தேனுடன் கூட்டி உண்டால், வெறிபிடித்த குரங்கின் முன் கோல் காட்டினால் அடங்கி விடுவதைப் போல, பித்த நோய் தீர்ந்து விடும் என்பது பொருளாகும்.

அண்டத்துக் குள்ளகில மத்தனையும் வைகுதல் போல்
குண்டத்துக் குள்ளே குழுக்கள் போல் உண்டாகப்
பூண்டிருக்கு முண்மைப் பொருளா மவிழ்த்த மெல்லாம்
காண்டிகையிற் பேழைவருக் கம்''19
இது, ஒரு விகற்பம் கொண்டமைந்து, இரண்டாம் அடியில் தனிச்சொல் பெற்று வந்த இன்னிசை வெண்பா.

பெரிய பேழைக்குள் சிறு சிறு அறைகளைக் கொண்டு அதனுள் மருந்துப் பொருள்களை வைத்திருக்கும் மருந்துப் பெட்டியானது, பேரண்டத்தினுள் சிற்றண்டம் தங்கி உலவுதல் போலவும், வளை, புற்று முதலியவற்றின் கீழே தங்கியிருக்கும் சிற்றுயிர்த் தொகுதி போலவும் அமைந்திருக்கிறது. இதனை, மருத்துப் பெட்டி என்றும், ஐந்தறைப் பெட்டி எனலும் பொருந்தும்.

யமக வெண்பா

யமகம் என்பது மடக்கு என்னும் பொருளில் அமையும். இது, செய்யுளில் சீர், சொல், அடி மடங்கி வந்து, வேறுவேறு பொருளைக் குறிப்பதாக அமையும், அணிவகையான அலங்காரமாகும். இவ் வகையான வெண்பாக்கள் பெரும்பாலும் பயிலப்படுவதில்லை. மருத்துவ நூலில் யமக அணி வெண்பாக்கள் இயற்றப் பெற்றிருப்பது சிறப்பிற்குரியது.

பத்தியத்தை நோயையனு பானத்தை லங்கணத்தைப்
பத்தியத்தை முன்மருகன் பண்ணிலிற்கேள் பத்தியத்தை
யேகமா யார்த்தாலு மேறாச் செவிபோல
யேகமா யார்த்தாலு மெய்''20
இந்த வெண்பாவில், பத்தியத்தை என்னுஞ் சொல் மூன்று இடங்களில் அமைந்திருக்கிறது. யேகமாயார்த்தாலும் என்னுஞ் சொல் இரண்டிடங் களில் அமைந்திருக்கிறது.

முதலாமடியில் வரும் பத்தியத்தைஎன்பது, பிணி நீங்கும் வரை கடைப்பிடிக்க வேண்டிய உணவுமுறையான பத்தியத்தையும், இரண்டாமடியில் வரும் பத்தியத்தை என்பது, பத்தி+இயம்+அத்தை எனப் பிரிந்து, பத்திய முறையைப் பற்றி அத்தையிடம் என்றும், தனிச் சொல்லில் வரும் பத்தியத்தை பத்து+இயம் +அத்து+ஐ எனப் பிரிந்து, பத்து விதமான இசைக் கருவிகள் சேர்த்து இசைக்கும் இசையை என்றும் பொருளமைகிறது.
ஏகமாயார்த்தாலும் என்பது, ஒரு முகமாக முழங்குகின்ற போது என்றும், ஏக+மாய் + ஆர்த்து எனப் பிரிந்து போய்விட, கெட்டு, ஆரவாரம் செய்து என்னும் பொருளில் மாறி மாறி நின்று பொருளமைக்கும்.

பிணி நீங்குகின்ற வரைக்கும் கடைப்பிடிக்க வேண்டிய பத்தியமும், பிணியினுடைய வகையும், துணை மருந்தான அனுபானத்தையும், நோய் நீங்கத் துணைபுரியும் பட்டினியைப் பற்றியும், மாமியார் முன்னே மருமகள் செய்யும் பணிவுடன் நோயாளிக்கும் செய்க. மருமகன் மாமியாருக்குச் செய்யும் மரியாதையை ஏற்றுக் கொள்ளும் மாமியாரைப் போல நோயாளி பத்திய முறைகளை ஏற்றக் கொள்ளவும். பலவிதமான சத்தத்துடன் கூடிய முழக்கத்தின் போது சொல்லுகின்ற சொல் காதில் நுழை யாததைப் போல இருந்தால், நோய்கள் ஆரவாரம் செய்து கொண்டு உடலைக் கெட்டுப்போய்விடச் செய்யும் என்பதால், பத்தியம் முக்கியம் என்பதை உணர்க என்னும் பொருளை உரைக்கிறது.

பஃறொடை வெண்பா

வெண்பாவுக்குரிய தளைகளைக் கொண்டு, இரண்டடிக் கொரு தனிச்சீர் பெற்று வருவது நேரிசைப் பஃறொடை வெண்பா என்றும், அடிதொறும் தனிச்சீர் பெற்று வருவது இன்னிசை பஃறொடை வெண்பா என்றும் கூறப்படும்.

ஓது கருங்காலி யெண்ணெய் தனையுலகில்
ஏதமற வைக்கு மியல்புகேள்தீதில்
செவியடைப்பு விக்கலிவை தீருமென முன்னோர்
உவகையுடன் சொன்னார் உகந்து''21

என்னும் நாற்பத்தேழு அடிகளைக் கொண்ட பஃறொடை வெண்பா, இரண்டடிக்கு ஒரு தனிச்சீர் பெற்று வந்திருப்பதனால், நேரிசைப் பஃறொடை வெண்பா எனக் கூறலாம்.

குறள் வெண்பா

பாக்களில் மிகவும் குறைந்த அடி அளவைக் கொண்டு அமைவது.

நிலம் ஐந்து நீர்நான்கு நீடுஅங்கி மூன்றே
உலவை இரண்டொன்று விண்''22

எழுபத்துஈ ராயிரம் நாடி அவற்றுள்
முழுபத்து நாடி முதல்''23

உந்தி முதலாகி ஓங்காரத்து உட்பொருளாய்
நின்றது நாடி நிலை''24

நாடி வழக்கம் அறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்பது அறிவு''25

என்னும் குறள்கள், மருத்துவத்தின் அங்கமாக விளங்கும் யோகத்தின் வழியையும் ஞானத்தின் பயனையும் கூற, உடலியலையும் உலகியலையும் உரைக்கின்றன.

ஆசிரியப்பா

ஆசிரியப்பா, நயனவிதி என்னும் கண்ணோய் மருத்துவ நூலில் அமைந்திருக்கிறது.

அக்கிர ரோகம் அவிகாய விரணம்
உக்கிர ரோகம் உடைத்தெழுந் திடுதல்
சாய்கண் குருடு தடிப்புத் தினவு
தூயவெண் குருடு சுக்கிர ரோகம்
எண்ணிய நோய்கள் தொண்ணூற் றாறும்
கண்ணினில் வினையெனக் கருத லாமே''26

என வரும் நிலைமண்டில ஆசிரியப்பா நாற்பத்தெட்டு அடிகளைக் கொண்டுள்ளது. இப்பாடல், கண்ணில் வரும் நோய்கள் தொண்ணூற்றாறினை நிரல்படத் தொகுத்துக் கூறுகிறது. இச் செய்யுள், எல்லா அடியும் அளவடியாகவும் ஈற்றடி சிந்தடியாகவும், ஈற்றசை ஏகாரத்திலும் முடிந்திருப்பதால் நேரிசையாசிரியப்பா வகையைச் சேர்ந்த தெனலாம்.

கலிப்பா

பா வகையில் மூன்றாவதாக அமைவது, கலிப்பா. பிற பா வகைகள் சீர்களைக் கொண்டு தளை செய்வது போலல்லாமல், எழுத்துகளை எண்ணி அடிகளை அமைக்கும் முறை கலிப்பாவில் உள்ளதால், இதனைக் கட்டளைக் கலிப்பா என்றும் கூறுவர். எழுத்தெண்ணிப் பாடுகின்ற இவ்வகை யாப்பு வேறு நூல்களில் காணப்படாதலினால், திருமந்திர யாப்பு என்னும் சிறப்புப் பெயரும் இதற்கு உண்டு. கட்டளைக் கலிப்பாவில் அமைந்த பரணி நூல்கள் தமிழ் இலக்கிய மாகத் திகழ்கின்றன. அவ்வகை யாப்பில் அமைந்த மருத்துவப் பாடல்கள் காணப்படுகின்றன.

அத்திப் பழழும் அறைக்கீரை நல்வித்தும்
கொத்தி உலைப்பெய்து கூழ் அட்டு வைத்தனர்
அத்திப் பழத்தை அரைக்கீரை வித்துண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே''27
என்று திருமூலர் திருமந்திரமும்,

அண்டங் கடுக்கா யாரு மறிந்திலர்
அண்டங் கடுக்கா யருமை யறிந்தவர்
அண்டங் கசடு அறுத்து அனைதனில்
அண்டத் தடுத்து அரூபியு மாவனே''28
என்று மச்சமுனி திருமந்திரமும்,

விண்ணடி வீழும் வெளிவிட்ட பேர்க்குத்
தன்னடி தானாய்த் தனக்குச் சரியாய்க்
கண்ணடி கண்ணாய்க் கற்றுணர்ந் தோர்க்குப்
பொன்னடி மூலம் பொருள் சொல்ல லாமே''29
என்று அகத்தியரும் கட்டளைக் கலிப்பா உரைக்கின்றார்,

நண்ணு சாறு பகண்டையி தற்கிணை
நாட்டி யாட்டி யிருகடி கைக்குளே
நல்ல வா நவ நீதங்க வசித்து
நாள ரைக்குள் முக் காலும்ப கண்டைப்பூ''30

என்று தேரையர் பாடலும் காணப்படுகிறது. திருமந்திர நூலுள் காணப் படும் கட்டளைக் கலிப்பாவும், தேரையர் நூலுள் காணப்படும் கட்டளைக் கலிப்பாவும் எழுத்துகளில் ஒற்றுமை காணப்படுகிறது. கூறும் முறையில் வேற்றுமை காணப்படுகிறது.

கொச்சகக் கலிப்பா

ஆதி அந்த நிர்க்குணமே அண்டபிண்ட மேவுதிருச்
சோதிநட னம்புரியும் சுழிவீட்டு வாசலிலே
நீதிக்கரு வூர்நிலை யாய்க்குடி யிருந்து
சாதிகுல மெல்லாம் தவிர்த்து சதிர் மேல் வளர்ந்தே''31
எனவரும் கொச்சகக் கலிப்பா ஞான வெட்டியானில் அமைந்து சிறப்பிக்கிறது.

கலிப்பாவின் இனம் கலிப்பாவின் இனமாக அமைவது தாழிசை, துறை, விருத்தம் என்பன.

மோகப்பரு வத்திர மூடிக்கொளு நோயை
மேகச்சி யாகச்சிலர் வேறிப்படி யொத்த
தேகத்தது போகப்பெறு தீதுற்றிடு நாபி
மோகத்தனு போகத்துளி மூசத்தற லாமே.''32
என்னும் தாழிசைப் பாடலும்,

'' கோடைப் பெருக்கன்ன வெம்பியிக் கீது குளத்திலுரை
ஆடத்த வாசிநற் பத்தியஞ் சிந்த மலமுறிப்பு
மாடத்தி னாலிரு நானாள் கழாய மரிசமொன்றே
ஆடத் தகுவரு ணாத்திர மாத்திரைக் காயுளரே.''33
என்னும் கலித்துறைப் பாடலும்,

காரண மெனவரு கடிய நோய்கட்கு
தாரண மெனவரு தரணி மீதினில்
பாரண வடகத்தைப் பற்றி நின்றதோர்
சூரண மகிமையும் சொல்லு வாமரோ''34
என்னும் கலி விருத்தமும் மருத்துவ நூல்களில் காணப்படுகின்றன.

வஞ்சிப்பா

பா வகையில் நான்காவதாக அமையும் வஞ்சிப்பா, மருத்துவப் பாடல்களாகக் காணப்படவில்லை. என்றாலும், வஞ்சிப்பா இனமான வஞ்சி விருத்தமும், வஞ்சித்தரு என்னும் இசைப் பாடல்களும் காணப்படுகின்றன.

இரசி தப்பொடி யொருதொ டிக்கிணை
யெய்து பாகமு னெய்த வேயிலை
மெள்ள வேயெடு விள்ள வேயுடை
வெண்மை யாகுமிஃ துண்மை யுண்மையே''35
என்னும் பதின்மூன்றடியாய் வரும் வஞ்சித் தருவும்,

இரத குளிகை யியல்பினை
வரத தறிவர் மனிதரார்
பரத முறைமை பகருவார்
சரத மிதுவே சரதமே.''36
என்னும் வஞ்சி விருத்தமும்,

சிதலை தருவடு செய்தி யெனவலை
மதலை யெனவுர மனிதர் நலிவுற
விதலை சிரமுற விளையும் வளிவினை
முதலை யிடுவது முடுகு தயிலமே.''37

என்னும் சந்த விருத்தமும் மருத்துவப் பாடல்களாகக் காணப் படுகின்றன. மருத்துவ நூல்களில் விருத்தப்பாக்களின் எண்ணிக்கையே இலட்சத்துக்கும் மேலாக இருக்கும். இதற்கு அடுத்ததாக வெண் பாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால், மருத்துவ நூல்களின் சிறப்பு சிறந்து விளங்குகிறது.

விருத்தப் பாக்கள்:

விருத்தப்பாக்கள் பாடுவதற்கு எளிமையாகவும் சொற்சிக்கன மில்லாமல், கூறப்படுகின்ற பொருளுக்கு ஏற்றவாறு செய்யுள் அளவு அமைந்து விடுவதனால், விருத்தப்பாவில் மருத்துவப்பா என அமைத்துக் கொண்டனர் எனலாம்.

தேரையர் நூல்கள் மட்டுமே பல்வகைப் பாக்களைக் கொண்டு அமைந்துள்ளன. பல நூல்கள் பல பாவகைகளைப் பயன் படுத்த வில்லை. ஒன்றிரண்டை மட்டுமே, அதுவும் விருத்த வகைகளில் மட்டுமே பாவகைகளைக் கொண்டு அமைந்திருக்கின்றன. விருத்த வகைகளில் குறிப்பிடத்தக்க வகைகள் சில வருமாறு:

குறள் விருத்தம்

மந்தத்தி ளீடுமல பந்தத்தி னாலழன்மை
தொந்தித்த போதுநளிர் சந்திக்கு மேலே
மலபாதை யோடுலவு சலபாதை யாவதுடல்
வலபாதை யாகிவனி யிலபாதை யாமே''38

சிந்து விருத்தம்

தவசின் சேதி தன்னையே
யவசி யங்கறி யளவுகொள்
நவநி தத்தொடு நாலுநாள்
சுவறி டுஞ்சனி தோடமே''39
(தவசு முருங்கை இலையை அரைத்து, மிளகளவு வெண்ணெய் சேர்த்து, நான்கு நாள் சாப்பிட வாத பித்த கப சன்னி முதலிய நோய் நீங்கும்)

வெளி விருத்தம்

ஆமல கக்கனி யாமல கக்குவ தாமென்னில்
போமல வெப்பது நீயுணி லெற்ப ணியிலோடி
நேம மிகச்சிலர் நாளும கத்துவ நீர்மேவு
பூமிசை யுற்புரி நூனெறி பற்றினர் போனாரே.''40

நாள்தோறும் நெல்லிக்கனியை வாயிலடக்கிக் கொண்டு அதன் சாற்றைச் சுவைத்துக் கொண்டு வந்தால், ஆசன வாயில் உண்டாகும் வெப்பம் குறையும் என்னும் பொருளைக் கூறுகிறது.

அறுசீர் ஆசிரிய விருத்தம்

வாரமே தணந்தெ டுத்து வைத்தநெய் யுளைக்கா லெல்லாம்
சேரமே லெங்கும் பூசித் தினந்தினம் பிடிக்கிற் பொல்லாக்
கோரமே புரியும் வாதக் குழாமறி ஞோர்க்கா மந்த
காரமே நாளு மிச்சாப் பத்தியங் கொண்டு கொள்ளே''41
வேறு
“ஆடா தோடை நன்னாரி அகிலும் சிறிய வழுதுணையும்
பாடா திலகும் பற்படகம் பங்கம் பாளை வேர்க் கொம்பு
சேடார் சீந்தில் சந்தனமும் செப்ப வரிய இவையனைத்தும்
கூடா நீரெட் டொன்றாக்கி குடித்தார் சுரத்தை விடுத்தாரே.''42
‘குடித்தார் சுரத்தை விடுத்தாரே’ என்று சுரத்துக்கு மருந்து கூறப்பட்டது.

எழுசீர் ஆசிரியவிருத்தம்

“ஒதுமிவ் வாறறி தகுமான வாசனை யூறுநன் னேய மென்னும்
மாதயி லாதியி லேகுண மேதெனில் வாத வியாதி முத
லேதமெ லாமறு மாமெனி லாகமே வேத மெலா றதனில்
வாதனை நீற்சனி நோய் வளியால் வருமா மஃதே யறியே”43

எண்சீர் ஆசிரியவிருத்தம்

உண்டிடவே பெருவயிறு சோகை தானும்
ஊது கா மாலைவிட பாண்டு ரோகம்
விண்டிடுகை கால்கடுப்பு வாத சூலை
மேகவெட்டை நீர்க்கடுப்பு சன்னி சீதம்
சண்டிடுமந் தாரசன்னி யண்ட வாதம்
சயரோகம் வலியிளைப்பு சலக்க ழிச்சல்
பண்டிதரே பருதிகண்ட பனிபோல் நீங்கும்
பாடினேன் மச்சமுனி யுற்றுப் பாரே.''44

இசைப்பாடல்கள்

யாப்பின் வகையில் சந்தங்களை அமைத்து இசைத்துப் பாடும் பாடல்கள், பாமரர்களிடத்திலும் பெண்களிடத்திலும் குறிப்பாகக் கிராமத்துப் பாட்டாளிகளிடத்தில் செல்வாக்குப் பெறுபவை. அத்தகைய இசைப்பாடல்கள் நாட்டுப் பாடல்களாக வழங்கி வருபவை. அவை நாடோடி இலக்கியத்தின்–பண்பாட்டு இலக்கியத்தின் மூலங்களாகக் கருதத் தக்கவை. அத்தகைய பாடல்கள் மனித நாகரிகத் துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்துபவை. அவ்வாறான இசைப்பாடல்களாக மருத்துவப் பாடல்களும் அமைந்து, பாமரரும் மருத்துவத்தை அறிந்திடச் செய்யும் வகையில் அமைந்து காணப் படுகின்றன. அத்தகைய பாடல்களாக இடம் பெறுபவை, சிந்து, கும்மி, தரு, திருப்புகழ் என்பனவாகும்.

நொண்டிச்சிந்து

வெண்குன்றி வேர்கொணர்ந்து கரு
வேலிப் பருத்தி பாலுலர்த்தி
எண்கீர லிற்சமமா அல்லி
யின்புனல் விட்டரைத் தொன்பது நாள்
பயறாக உண்டை செய்து ரவி
பாரா துலர்த்தி தன் பேரான
செயமான மாத்திரையை யெந்தத்
தீக்கடிக் குந்தின்னப் போக்கடிக்கும்''45
என்னும் நொண்டிச் சிந்து பாடல் தீமையைத் தருகின்ற நச்சுக் கடிகளுக்கு மருந்து உரைக்கக் காணலாம்.

கும்மி

பெண்களுக்குக் கல்விமுறை பழக்கத்தில் இல்லாத காலத்தில், பெண்களுக்கும் மருத்துவக் கல்வியைப் பயிற்றுவிக்க, பெண்களுக்கே உரிய கும்மிப் பாடலில் மருத்துவம் கூறப்பட்டிருப்பது, மருத்துவக் கல்வியின் வளத்தை மேம்படுத்துவதற்காகவே எனக்கொள்ள நேரிடுகிறது.

தேங்காய்ப் பாலுஞ் சிறுகுறிஞ் சாவேர்
தினமு மூன்று நாள் குடிக்க
வாங்கா மேகங் களிருப் பதொன்றும்
வாங்கிப் போமென் றடியுங்கடி''

ஆவின் வெண்ணையில் பூனைக்காலியிலை
அரைத்தே அடுப்பிற் தான்கிளறி
பாவனை யாகவே அருந்திடவே காசம்
பறக்கு மென்றே யடியுங்கடி''46
என்று அகத்தியரும்

வங்க மெழுகுபின் தங்கம தாகவே
மான வேதை தேர்ந்த கைபாகம்
தங்க மிறங்கி பாகங்களும் புடந்
தானே எரிக்கிற நேரங்களும்''

இங்கித மாகக் குறுக்கியே குப்பியில்
எரித்தெடுக்கிற பாகங்களும்
அங்கங்கே செந்தூர மெல்லாந் திரட்டியே
அன்புடன் சொல்கிறேன் கேளுங்கடி''47

என்று யூகிமுனிவரும் உரைக்கின்றனர். அகத்தியர், எளிமையான மருத்துவ முறையையும், யூகி, கடினமான வாத வைத்திய முறை யையும் கூறுவதற்காகக் கும்மியைத் தேர்ந்தெடுத்துள்ளது தெரிகிறது.

தரு

தரு என்பது இசையுடன் இசைத்துப் பாடப்படும் ஒரு வகை இசைப்பாடாலாகும். இந்தப் பாடல் மூலமாகச் சுட்டிகை என்னும் மருத்துவ முறையைக் கூறுவர். இது உடலில் ஆங்காங்கே மேடு பள்ளங்களைப் போலத் திட்டுத் திட்டாகப் பெருத்துக் கொண்டு வருகின்ற கட்டிகளைத் தீர்ப்பதற்காகக் கூறப்படுகின்ற மருத்துவ முறையாகும்.

கல்யாண தரு மோகனம்

சுட்டிகை யின்குண மெடுத்துநன்றாய்ச்
சொல்லுகிறேன் முறை தொடுத்து
கெட்டப தார்த்தத்தை நெருப்பில்வாட்டக்
கெண்ணிய மாகுமே பொருப்பில்
அப்படிப் போலேயிவ் வுடலைவாட்டி
யப்பா லறிவைபிணி விடலை
நல்ல சிட்டையிது போலேஇல்லை
ஞாலத்தி லேயினி மேலே''48

கெட்டுப் போன பொருள்களை நெருப்பில் வாட்டிப் பதப்படுத்து வதைப் போல, உடலைக் கெடுத்த நோயைச் சுட்டிகையினால் வாட்டி, உடலை வலிமை பெறச் செய்வதாகும். இதுவும் ஒருவகை மருத்துவ முறை என்பதை விளக்கிடும் மருத்துவ இசைப்பாணர்கள், இசைப் பாடலைப் பயன்படுத்தி மகிழ்வூட்டுவர்.

திருப்புகழ்

திருப்புகழ் என்றால் போற்றிப் புகழ்ந்து பாடப்படும் இசைப் பாவாகும். அருணகிரி நாதர் முருகன் மீது பாடிய புகழ்ப் பாடலான திருப்புகழ் இந்த இசைப்பா வகையைச் சாரும். அவ்வாறான இசைப்பா வடியில் மருத்துவத் திருப்புகழ் மருத்துவத்தை இசைக்கத் தோன்றிய வகைப் பாடலாகும். திருப்புகழ்ப் பாடலை இசைப்பதற்காகத் தாளத்தின் சந்தங்களைக் கூறிப் பாடலைக் குறிப்பிடும் முறையில் அமைக்கப் பெற்றுள்ளது இதன் தனிச் சிறப்பு.

நல்வாழ்வு மணப்பாகு

“தனதன தான தத்த தனதன தானதத்த தனதான
தனதன தானதத்த
இடருறு மேகவெட்டை படர்தரு மூரல் சட்டை
கொடியிடர் நோய் விரட்ட முறைகாணும்
இகமுறு சோம்பு கொத்த மலிநில வாரைசுக்கு
வினியநன் னாரி யொக்க வெடையோரைஞ்
சடரழன் மீதுகட்டி படிசல மாறுவிட்டு
விடரெரி வாக வெட்டி லொருகூறா
யடைவொடு நீரிறக்கி வடிவுற தேமணக்க
வறிமிசி ரீகரைத்து வடுப்பேற
வடிவுற வேகொதிக்க பதமுறு பாகுமிக்க
வலுவுறு நோயெடுக்க விவையேற
மலசல மேக கட்டுச் சடமுறு நீர்கடுப்பு
முலமுளை மூலரத்த விடுபோகும்
உடலெரி நாவறட்சி தடமறி யூரல் விட்டு
அதிகமு மூலிகெட்டி வலுவாமே
வெளிதரு யூனமிக்க வருளுற நோய் பலக்கும்
முனவலு வாயெடுக்க மனுவோர்க்கே”49
என்னும் இத்திருப்புகழ்ப் பாடலில், மேகவெட்டை, மேகச் சட்டை, மேகவூரல், மலஞ்சிறுநீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, நீர்க்கட்டு, முளைமூலம், மூலரத்தம், உடலெரிச்சல், நாவறட்சி முதலிய வெப்ப நோய் தொடர்பான அனைத்தையும் தீர்க்கும் மருந்து உரைக்கப்பட்டது.

கடுமையான நோய், உயர்வான மருந்து, அரிய முறை ஆனாலும் எளிமையான இசைப்பாடலாக உரைக்கப் பட்டிருப்பதை உணரலாம்.

தொடை

தொடை என்பது தொடுக்கப்படுவது. எழுத்துகளைக் கொண்ட சீர்களை அடிகளாகத் தொகுத்து அமைத்து, பா வகைகளாக இயற்றுவது தொடை எனப்படும். இவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை, செந்தொடை, இரட்டைத் தொடை, அந்தாதித் தொடை என்னும் எட்டு வகையாகும்.
இவை எட்டும், அடி, இணை, பொழிப்பு, ஒரூஉ, கூழை, மேற்கதுவாய், கீழ்க் கதுவாய், முற்று என இவற்றொடு பொருந்தி, ஒவ்வொன்றும் எட்டு வகை விகற்பங்களைக் கொண்டு அமையும். இவை அனைத்தும் மருத்துவ நூல்களில் காணப்படாவிடினும், பெரும்பாலான நூல்கள் அந்தாதியாகவே அமைந்திருக்கின்றன. எதுகையும் மோனையும், அனைத்து விகற்பங்களையும் கொண்டு அமைந்துள்ளன.

எதுகை

செய்யுளின் சீர், அடி ஆகிய இவற்றின் எழுத்துகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத் தொடுப்பது எதுகைத் தொடை எனப்படும்.

அடி எதுகையாக வரும் சொற்கள் ஓசை நயங்கருதியும், பொருளற்ற வெற்றுச் சொற்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

என்பார்கள், அன்பார்கள், வன்பார்கள், தன்பார்கள்''50

பண்ணப்பா, நிண்ணப்பா, கண்ணப்பா, நண்ணப்பா''51

உலுத்தராய், பிலுத்தராய், குலுத்திரம், வலுத்தம்''52

தேட்டான, நீட்டான, பூட்டான, ஆட்டான''53
எனவரும் எதுகைகள் ஓசைக்காகப் பயன்பட்டிருக்கும் வெற்றுச் சொற்கள் எனலாம்.

இணை எதுகை

“சித்திரவி சித்திரமா சிந்தில் வாழை நாகை கம்மொய்“ (யமக வெண்பா. 2ஆம் பாகம். பக்157) 1,2 சீர்களில் அமைந்த இணை எதுகை.

பொழிப்பு எதுகை

“பட்டமரம் போலாகும் வெட்டை மேகம்”ஏ 1,3 சீர்களில் அமைந்த பொழிப்பு எதுகை.

ஒரூஉ எதுகை

“துப்பு வெள்ளை முத்தீ துனிபனிபந் திப்புவல்லை”ஏ 1,4 சீர்களில் அமைந்த ஒரூஉ எதுகை.

கூழை எதுகை/மேற்கதுவாய் எதுகை

கானமழை மானமுது கன்னியறல் வன்னியறல்''
1,2,3 சீர்களில் அமைந்த கூழை எதுகையும், 1,3,4 சீர்களில் மேற்கதுவாய் எதுகையும் இணைந்து வந்துள்ளது.

கீழ்க்கதுவாய் எதுகை

முப்பிணி யொப்பிணி யெப்பிணி யப்பிணி''
1,2,3,4 சீர்களில் அமைந்த கீழ்க்கதுவாய் எதுகை
மேற்கண்டவாறு எதுகை அமைந்த பாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன.அவ்வாறு அமைந்த எதுகையினால் செய்யுள் ஓசையும் நயமும் சிறந்து விளங்குகிறது.

மோனைத் தொடை

முதலெழுத்து ஒன்றிவரத் தொடுக்கும் மோனைத் தொடையில் அமைந்த தனிநூலே மருத்துவ நூலாகத் திகழ்கிறது. ஒவ்வொரு பாடலும் ஓர் எழுத்தையே மோனையாகக் கொண்டு இயற்றப் பெற்ற இந்நூல் “கரிசல்“ என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் அமைந்துள்ள சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டும் முறையே 156, 298 அடிகளைக் கொண்ட எதுகைத் தொடை இலக்கியங்களாக அமைந்துள்ளன.

“காரார் வரைக்கொங்கை கண்ணார் கடலுடுக்கை''

சீரார் சுடர்ச் சட்டிச் செங்கலுழிப் பேராற்று''
என்று, சிறிய திருமடலும்,

மன்னிய பல்பொறிசேர் ஆயிரவாய் வாளரவின்
சென்னி மணிக்குடுமித் தெய்வச் சுடர் நடுவுள்''
என்று பெரிய திருமடலும், கலிவெண்பாவில் அமைந்திருக்கின்றன. இத்தகைய எதுகைத் தொடை இலக்கியம் வேறு எதுவும் இல்லை என்பதைப் போல, தமிழ் மருத்துவ நூல்களுள் மோனைத் தொடை இலக்கியமாகத் திகழும், வைத்திய “மகா கரிசல்’’ போல வேறு நூல்கள் இருப்பதாகத் தெறியவில்லை.

பரன் மகிமையுட் கொண்டு பேயகத் தேரன்
செயுமுறை தெரிகிலாத் தேரனா யடியேன்
உயுமுறை வைத்தியவுரைத் தமிழ்க் கரிசல்
தகுங்குறு மகவற் றாழிசை மோனை
வகை பெறு சந்த வருக்கத் துறைக்கே''54
என்று அவையடக்கம் கூறப்பட்டுள்ளது. இதனால், மகா கரிசல் என்னும் இந்நூல், தேரர் என்பவரால், மோனை யாசிரியக் குறுந்தொழிசையால் இயற்றப் பட்டுள்ளது தெரிய வரும்.

அகர முதலென வாகிய கரியாய்
அங்கங் களாயதி லாதார மாகி
அத்த மிகுந்த மருத்துவ மாய்ம
யக்கற நிற்குமிலக்கிய மாகி''55
எழுத்துகள் தோன்றுவதற்கு அகரம் சாட்சியாக விளங்குவதைப் போல, கரிசல் என்றால் சாட்சி என்னும் பொருளைக் கொண்டு, மருத்துவத்துக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய சாட்சிப் பொருளை உரைக்க இந்நூல் படைக்கப் பட்டிருப்பது தெரியலாம்.

இந்நூல் முழுவதும், உயிரெழுத்துகள் பன்னிரண்டில் ஐகாரம் தவிர ஏனைய எழுத்துகளிலும், க, ச, த, ந, ப, ம என்னும் உயிர்மெய் எழுத்துகளிலும், அதனொடு சேர்ந்த பிற உயிர்மெய் எழுத்துகளிலும் அறுபத்து மூன்று இனங்களில் மோனைத் தொடையமைந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு இனத்துக்கும் குறைந்த அளவு அடியாக மூன்றடி (ஒள)யும், அதிக அளவு அடியாக அறுபத்திரண்டு அடியும் (இ) கொண்டு மொத்தம் 1501 அடிகளைக் கொண்ட மருத்துவ இலக்கியமாகத் திகழ்கின்றது.

மருத்துவத்துறைக்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியத் துறைக்கும் இந்நூல் சிறந்த பங்களிப்பாகக் கருதுதற்குரியது.
கரிசல் என்னும் பெயரில் அகத்தியர் கரிசல், யூகி கரிசல் என்னும் வேறு நூல்கள் காணப்பட்டாலும் அவை, வேறுவகையான பாக்களையும் தொடைகளையும் கொண்டு அமைந்திருக்கின்றன.

இணைமோனை

செய்யுளின் அடிகளில் முதல் இருசீர்களில் மோனை வருவது.

செக்கச் சிவந்த பன்னீர்ப்பூப் புகலுறின்''56
இச்செய்யுளில் செக்கச் சிவந்த என இரண்டு சீர்களில் மோனை அமைந்தது.

பொழிப்புமோனை

செய்யுளில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை வருவது.

காசமறு மேனிக் கழலையறுங் குட்டமறுங்''
இதனுள் முதற்சீரிலும் மூன்றாம் சீரிலும் மோனை அமைந்தது.

ஒரூஉ மோனை

முதற் சீரிலும் நான்காம் சீரிலும் மோனை வருவது.
"" நாள்வளரு மெய்க்கு நலமுண்டா நாடாது''
ஒன்று, நான்காம் சீரில் மோனை அமைந்தது.

கூழை மோனை

1,2,3 ஆகிய சீர்களில் மோனை வருவது.

சித்திரவி சித்திரமா சீந்தில் வாழை நாகை கம்மொய்''ஏ
ஒன்று, இரண்டு, மூன்றாம் சீர்களில் மோனை அமைந்தது.

மேற்கதுவாய் மோனை

ஒன்று மூன்று நான்காம் சீர்களில் மோனை அமைவது
காவா யுலவுபரி காரிகளுக் காதரவாம்''

கீழ்க் கதுவாய் மோனை

ஒன்று இரண்டு நான்காம் சீர்களில் மோனை அமைவது

முற்று மோனை

ஒன்று இரண்டு மூன்று நான்கு சீர்களிலும் மோனை அமைப்பது.

மாட மடங்கேணி மண்டப மாடரங்கு''

வச்சிர வல்லியை மோர் வார்த்தூற வைத்துலர்த்தி''
என மோனை வகைகள் அனைத்தும் அமையப் பெற்று மருத்துவப் பாக்களாக அமைந்துள்ளன.

முரண் தொடை

செய்யுளின் அடி, வரிகளில் எதிர்மறையான பொருள்களைத் தரும் சொற்களைக் கொண்டு முரணாகத் தொகுக்கப்படுவது முரண்தொடை எனப்படும்.

காரமுடன் சார மதும் காலை தள்ளி மாலைதனில்''ஏ
காரம்சாரம்; காலைமாலை என இரண்டு முரண்கள் அமைந்துள்ளது.

திங்கள் மூன்றில் மதுவாரி நாதஞ் செழுங்கனல் போல்''ஏ
திங்கள், கனல் ஆகிய சொற்கள் குளுமை, வெம்மை ஆகிய பொருளைத் தந்து முரணாகின்றன.

எங்கள் குலவிந்தில் எறும்பு கடை யானை முதல்
செங்கமல வமிசத்தில் சேருமே''
இச்செய்யுள் எறும்புயானை; கடைமுதல் என்னும் இரண்டு முரண்களைக் கொண்டுள்ளது.

கன்னல் விழிமா மறைச்சி காதலருளும் பறைச்சி''ஏ
மறைச்சிபறைச்சி என்னும் சொற்கள் முரணாகின்றன.

ஆதி அந்த நிர்க்குணமே அண்ட பிண்ட மேவுதிருச்
சேதி நடனம் புரியும் சுழிவீட்டு வாசலிலே'
இச்செய்யுள், ஆதிஅந்தம்; அண்டம்பிண்டம் என்னும் இரண்டு முரண்களைப் பெற்றிருப்பதைப் போன்று பல செய்யுள்கள் தொடை விகற்பங்களைப் பெற்று சிறந்து விளங்குகின்றன.

அணிகள்

இலக்கியங்களில் அமையும் பொருள்களை விளக்கவும், பொருளோடு பொருளை ஒப்புமைக் காட்டி விவரிக்கவும், பொருளின் வண்ணம், வடிவம், தொழில், பயன் ஆகிய இயல்புகள் நன்கு புலப்பட உவமை பயன்படும்.

வினை பயன் மெய் உரு என்ற நான்கே
வசைபெற வந்த உவமைத் தோற்றம்''57
என்னும் நான்கு வகையான உவமைகளைத் தொல்காப்பியம் எடுத்துரைக்கிறது.

இந்நான்கு வகை உவமைகளைக் கொண்ட செய்யுள்கள் மருத்துவ இலக்கியங்களில் எவ்வாறு இடம் பெறுகின்றன என்பதை ஆராயலாம்.

வண்டுகள் தான்மதுவருந்து நேர்மை போல
வாதபித்த சிலேத்து மத்தின் மதுவை யுண்ணும்.''58
குருநாடி, வண்டுகள் வந்து மலர்களிடத்தோயுள்ள மதுவை உண்பதைப் போல என்று, எடுத்துக் காட்டு உவமையைக் கூறி, வாதம் பித்தம் ஐயம் என்னும் மதுவை உண்ணும் என்று வினை உவமை அமைந்து காணப் படுகிறது.

பெண்ணின் கற்பும், மருத்துவனின் சொல்லும்

கற்புடைய பெண்ணிடத்தில் கணவன் சொல்லும் சொல்லைப் போல, நோயாளியிடம் மருத்துவன் கூறும் சொல் மதிக்கத் தக்கது, என்று பயன் கூறப்பட்டது.

கற்புமுறை பெண்போற் கணவனெனும் பண்டிதன் சொல்''59
என்னும் செய்யுள் பயனுவமை அமைந்தது.

நீர்நிலையும் நெஞ்சும்

பெரிய நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்தி அதனுள் நீரை நிறைத்து வைப்பதால், உயிரினங்கள் பயனடைவதைப்போல, தூதுவளைக் கற்பத்தை உண்டு வந்தால், மாறுபட்ட குற்றமுடைய நெஞ்சினைத் தூய்மையுடையதாக மாற்றிவிடும் என்று தூதுவளையின் பயன் உவமித்துக் கூறப்பட்டதால் பயனுவமையாயிற்று.

திருக்குளத்தை நன்றாக்கித் தின்னுவை யேனல்ல
திருக்குளத்தைப் போலே திருத்தும்.''60

பட்ட மரமும் நோயும்

மேக நோயில் மிகவும் கொடியது வெட்டை மேகம். அந்நோய், நோயாளியைச் சிறிது சிறிதாக அழித்துக் கொண்டே வந்து இறுதியில் உயிரையே போக்கிவிடும் என்பதற்கு, மரம் பட்டுக் கொண்டே வந்து இறுதியில் முழுவதும் பட்டுப் போவது உவமையாக்கிக் கூறப்படு வதனால், வெட்டை மேகத்தின் தொழில் உவமித்த, தொழில் உவமை (வினையுவனை) யாயிற்று.

பட்டமரம் போலாக்கும் வெட்டை மேகம்
பக்கவலி கக்கிருமற் பதறி யோடும்.''61
வெட்டை மேகம் என்று கூறப்படும் இந்நோய் இக்காலத்தில் சிறப்பாகப் பேசப்படுகின்ற குறிப்பது ஆகும் என்னும் நோயின் தமிழ்ப் பெயரே வெட்டை மேகம் என்பது.

நெல்லுக்கிறைத்த நீர் போலாச்சுஇது
நேரான வாதமும் தானாகும்
புல்லுக் கிறைத்த நீர் போலாகும்பாரு
புத்தியில்லாத தோர் வாதிகளே.''62
நீர் பாய்ச்சுதல் வினையையும், புல்லுக்கு ப் பாய்தல் பயனையும் குறித்து உவமிக்கப் பட்டுள்ளதால் வினை, பயன் ஆகிய இரண்டு உவமை களையும் கொள்ளலாம். மேற்கண்ட இப்பாடலின் கருத்துடன்,

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்''63
என்னும் மூதுரைப் பாடல் பொருந்தக் காணலாம்.

வில்லும் அம்பும்

வில் எவ்வளவுக்கு எவ்வளவு வளைக்கப்படுகிறதோ அவ் வளவுக்கு அவ்வளவு தூரம் சென்று அம்பு தைக்கும் என்பது அறிந்ததே. ஆனால், வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தால், அம்பு, தானாகச் சென்று தைத்துவிடுமா? முயற்சி வேண்டும் என்றுணர்த்தும் கருத்துடன்,

வில்லப்பா வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரம்போல் நின்றாக்கால் தைக்குமோடா?''64
என்றும்,

வில்லுதான் வளைந்தாலோ அம்பு தைக்கும்
வெறும் மரத்தில் புதைசெய்யா வாறு தானே?''65
என்று வினையும் பயனும் கூறப்பட்டதால் வினையுவமையும் பயனுவமையும் அமைந்திருக்கிறது எனலாம்.

இளைஞரும் இளம்பெண்ணும்

இளம் பெண்ணைக் கண்ட வாலிபர்கள், அவளின் கொங்கையைக் கண்டு, பொற்குடமோ, மலையோ, மல்லிகைச் செண்டோ, இளநீரோ, மன்மதன் மகுடமோ என்று ஐயப்பட்டுக் கொண்டு, அவளிடமிருந்து மீள மாட்டாமல் பார்த்துக் கொண்டே இருப்பார்களாம்.

பாரு நீ பெண்ணைப் பார்த்துப்
பலபல இளைஞ ரெல்லாம்
வாருபொற் குடமோ கோடோ
மல்லிகைச் செண்டோ வென்பார்
தாருநீ இளநீர் என்பார்
தனி மதன் மகுடம் என்பார்
ஊரு நற் கொங்கை ரெண்டு
முறைப்பாகப் பார்ப்பார் காணே''66
என்னும் விருத்தம் ஐய உவமை கொண்டிருக்கக் காணலாம்.

இளைஞர்களின் பார்வை, பெண்ணின் கொங்கைக்குள் சிக்கிக் கொண்டு பிடுங்க முடியாமல் உழன்று கொண்டிருப்பார்களாம். அதைப் போல, முலைப்பாலில் அகப்பட்ட லிங்கம், சூதம் ஆகிய மருந்துகள் மீள முடியாமல் சிக்கி, கட்டிப்போகும் என்று, ‘இரசக்கட்டு, லிங்கக்கட்டு, ஆகிய இரண்டையும் பயன் உவமையாக்கிக் கூறக் காண்கிறோம்.

காணிந்தப் பார்வை ரெண்டும்
கடுங் கொங்கைக் குள்ளே சிக்கி
ஊணிந்த பார்வை புக்கி
உழலுவார் பிடுங்க மாட்டார்
தோணிந்த விதம்போ லிங்கம்
சூதமும் கட்டிப் போகும்''67
என்றுரைப்பது, மருத்துவப் புலவர்களின் இலக்கிய நயத்தைப் புலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

மேலும் பல்வேறு வகையான கருத்துகளை விளக்கிட, அவற்றுக்கு நேரான உவமைகளைக் கூறி விளங்க வைப்பது செய்யுளுக்கே உரிய அணியாக அமைவதால், உவமையின்றி ஒரு பொருளையும் விளக்கிட இயலாது என்பது அறிந்ததே. அந்த வகையில் மருத்துவப் பொருள் களைப் பலமுறைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கிட வேண்டி யுள்ளதால், பண்பாட்டில் நிலவி வரும் அனைத்து முறை களையும் எடுத்துக் கூறி விளக்கிட வேண்டிய நிலை மருத்துவ இலக்கியத்துக்கு இருக்கின்றது என்பதால், உவமைகள் நிறைந்தே காணப்படுவதுடன் சுவையானதாகவும் இருந்திடக் காணலாம். அவற்றுள்,

காடுமே போயொழியும் யீனர்போல
கண்ணெதிரே நில்லாது திரிகாலங்கள்''68

வாடுமே திரிகால ஞான மார்க்கம்
வாயிருக்க நாவில்லா வாறு போல''69

நூலில்லா ஊமை மொழி பேசல் போல''

பூவில்லா நார்முடிந்த வாறு போல''

பாவில்லா நூல் விளங்கும் நெசவு போல''

பரியேறிச் சேணமில்லா உவமை போல''

காவில்லா ஊரிருந்த சுகமே போல''70

கதவடைக்க கட்டுண்ட கள்ளன் போல''

சிறுவர்தெரு விளையாடும் சேர்க்கை போல''71

அத்தானும் மச்சானும் கூடிக் கூடி
அடிக்கடியே பரியாச மாகுமாபோல்''

சுழலிலகப் பட்டதோர் துரும்பு போல''

ஏர்விட்டு உழுதுபரம் படித்தார்ப் போல''

நில்லுமே என்றுசொல்லித் தடுத்தாப் போல''

தமரோடு வாழுகின்ற தன்மை போல''

காயிருந்து பழம்பழுத்த வாறு போல''

அமர்ந்துபோம் நரம்பின்வழி பிராண வாயு
அணிஅணியாய் அலியென்னும் அலையைப் போல''72
என்று உவமைகளால் நிறைவு பெற்ற பாடல்கள் பல காணப் படுகின்றன.

கிளிமூக்கு

ஒரே பாடலில் வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு உவமைகள் அமைந்த பாடலும் காணப்படுகின்றது.
கிளிமூக்கு மரத்தின் காய் கிளியைப் போல பசுமை நிறத்தில் இருக்கும். இலை அரச இலை போன்ற வடிவத்தில் இருக்கும். அதனுடைய பழத்தைத் தின்றால், சுறுசுறுப்பாய் ஓடலாம், நொடியிலே காயம் சித்தி அடையும் என்பர்.

போக்கான கிளிமூக்கு மரமொன் றுண்டு
புகழான கிளிபோலக் காயும் காய்க்கும்
வாக்கான இலையதுவும் அரசிலை போற்காணும்
மைந்தனே இதனுடைய பழத்தை உண்ணு
நோக்கான வழிநடக்கச் சுறுக்காய் ஓடும்
நொடியிலே காயசித்திக் கிடைக்கு மப்பா''73
என்று, நிறம் மெய் உவமையாகவும், அரசிலை உருவ உவமை யாகவும், சுறுக்காய் ஓடச் செய்வது பயன் உவமையாகவும், காய சித்தி வினை உவமையாகவும் உரைக்கப்பட்டிருக்கிறது.

மரத்தின் காய் கிளிமூக்குப் போல இருப்பதனால் மரத்துக்கும் அப்பெயரே ஆகி வந்ததனால், சினையாகு பெயராகக் கிளிமூக்கு மரமென்று உரைக்கப்பட்டது.

நெல்லும் தண்ணீரும்

நெல்லுக்கு இறைக்கின்ற நீர் வாய்க்காலின் வழியே ஓடிப் புல்லுக்கும் பயனாகிறது. அதுபோல, வாதத்தை நல்லவர்க்கு உரைக்கும் போது, தீயவர்களுக்கும் சென்று சேர்ந்தடைந்து விடுகிறது என்பதைக் கூறும் பாடல்,

நெல்லுப் பயிர்கள் விளையவே தான் தண்ணீர்
நிச்சயமாகவே பாய்ச்சுகிறீர்
புல்லுமே சேர்ந்து விளைந்தது போலவே
புத்தியுமான ரசவாதம்''
என்னும் உழவர்க்குரிய நெல்லுக்கு நீர்ப்பாய்ச்சும் தொழில் உவமை யாகக் கூறப்பட்டது.

எனப் பலவகையான உவமைகளின் களமாக மருத்துவ இலக்கியம் காணப்படுகிறது. இதில் காணப்பெறும் உவமைகளைத் திரட்டினாலே, தமிழர் பண்பாட்டுப் புதையலாகப் பல புதிய தகவல்கள் கிடைக்கக் கூடும். அத்தகைய தகவலின் களமாகக் காட்சியளிக்கிறது.

உருவகம்

மனித உடம்பு எத்தகையது என்பதை உருவகமாகக் கூறும் கொங்கணர், புழுக்கள் மலிந்த கூடு; குருதியில் ஊறுங்கட்டை; நரம்பாலும், மச்சையாலும் வனையப்பட்ட நீர் நிரப்பும் பாண்டம்; மலக்கூடு; நல்வினை தீவினைகள் வகுத்துள்ள காடு; ஆசைகளாலும் அவலங்களாலும் விளையும் நினைவுகள் கோடி; வாக்கில் தோன்றும் சொற்கள் உறுதி அற்றவை; நாயின் தோலைப் போலப் பயனற்றது மனித உடம்பு என்று உரைக்கின்றார்.

கேளப்பா புழுக்குடம்பை உதிரக் கட்டை
கெடியான நரம்பு மச்சை கீழ்நீர்ப் பாண்டம்
பாழப்பா மலக்குரம்பை பாங்காம் கூடு
பார்க்கையிலே ஒன்பதிடம் பாழாம் பீற்றல்
நாளப்பா நிலையுமில்லை நமன்கை யாட்டு
நல்வினைக்கும் தீவினைக்கும் நலத்த காடு
சூளப்பா சஞ்சலமும் நினைவும் கோடி
சொல்லுறுதி இல்லாத சுணங்கன் தோலே.''74
மூலம் என்னும் உறுதியான சினைப்பை வீட்டுக்குள்ளே வாலையின் அருளினால் இரவியும் மதியும் கூடியதால் மூங்கில் முளை போலத் துளிர்த்து, பிள்ளை என்னும் பிறவியை உண்டாக்கிக் கொண்டு, பத்துத் திங்களில் பிறக்கும் பிறப்பை உருவகிக்கின்றார், திருவள்ளுவர்.

மூலமெனும் வச்சிரப்பை வீட்டுக் குள்ளே
மூங்கில்முளை போலதுவும் கார சாரம்
வாலையரு ளாலமைந்த வாறு தன்னால்
மதிரவியும் கூடியது மிரண்டு ஆண்டில்
பாலனது போல் ஜெனித்துப் பிறவி யாகி
பத்துத்திங்கட் குள்ளுஞ்சிறு பாலனாகி
தூலமிந்த மூலமதில் உதித்த வன்மை''75
என்று உரைக்கின்றார்.

“கழுதை’’ என்று இகழ்ச்சியாகக் குறிப்பிடப் படும் விலங்கு, சிறந்த மனிதர்களைப் போல, உருவகப்படுத்தப் பட்டுள்ளது.

வயினே தரையில் அழுந்திடச் சுமையெ டுப்போன்
குயிலி நிறம்போல் கோலமிகு மேனி யுள்ளான்
பயினும் குழையும் பண்புடனே அருந்து கின்றோன்
வயினின் மொழியான் வான் இடி போல் இரைவான்.''76
மிகுதியான சுமைகளைச் சுமக்கக் கூடியவன்; குயிலைப் போல அழகுமிகு வண்ண மேனி உடையவன்; புல், தழை ஆகியவற்றை விரும்பி உண்பவன்; மென்மை இன்றி இடி போன்ற மொழிக்கு உடையவன் என்று, கழுதையின் பண்பு உருவகிக்கப் பட்டிருப்பது காணப்படுகிறது. ஒரே சொல்லால் கழுதை என்று சொன்னால், விளங்காது என்றில்லை. இலக்கியம் நயமாக, சுவையாக, மீண்டும் மீண்டும் கற்றிட வேண்டும் என்ற அவா மிகுதியை ஏற்படுத்திட, மனத்திற்குள் இன்பத்தை விளைத்திடக் கற்பனையும், நயமும் உருவகமாகி உருவாகின்றன.

உம்மைத் தொகை

மக்களுக்கு வாழ்க்கையில் நேரக்கூடிய நல்வினை, தீவினை ஆகிய இரண்டின் பயனாக இன்பமும், துன்பமும் பிறவியில் ஏற்படுவது இயல்பு. அவ்வாறு அமையப் பெற்ற அமைப்பு, கருவிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது என்பது உம்மைத் தொகையாக உரைக்கப் படுகிறது.

“பேறு இளமை இன்பம் பிணி மூப்பு சாக்காடு
ஆறும் கருவில் அமைப்பு''77
என்பது, பேறும், இளமையும், இன்பமும், பிணியும், மூப்பும், சாக் காடும் என உம்மைத் தொகையாவதைக் காண்க.

மடக்கணி

மடக்கணி என்பது செய்யுளில் வந்த சொற்களே மடங்கி வந்து பொருள் தருவது. இது சீர்களிலும் அடிகளிலும் அமையும்.

கட்டிக் கொள் வாரிளங் காளையென்றே
கிழங்கண்டு கல்லில்
முட்டிக் கொள்ளார் பின்னு மோதிக் கொள்ளார்
கண்ணை மூடிக் கொள்ளார்
குட்டிக் கொள்ளார் பல்களைக் கிட்டிக் கொள்ளார்
பொன்னைக் கோரிக் கொள்ளார்
திட்டிக் கொள்ளார் தம்மைத் தேற்றிக் கொள்ளார்
நற்சிறு பெண்களே''
இப்பாடலில் கொள்ளார் எனும் சொல் எட்டு இடங்களில் அமைந்து பொருளைத் தருவதுடன் ஓசை நயத்தைக் கூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

தீயாகி மதியாகி ரவியு மாகி
சிறந்து நின்ற வாசியுமா யெட்டு மாகி
தாயாகித் தந்தையுமாய்த் தார மாகி
சகல விருஷ முறவினமும் சலமு மாகிப்
பூவாகிக் காயாகிப் பிஞ்சு மாகிக்
கனியு முன்னே நின்றழிந்த கால னாகி
வாயாகிக் கையாகி மனது மாகி
வாக்கடங்கா வெளியெனவே வழுத்தி டாயே.''78
ஆகி என்னுஞ் சொல் பதினான்கு இடங்களில் மடங்கி வந்து பொருளாகி இருப்பது காண்க.

முப்பிணி யொப்பிணி யெப்பிணி யப்பிணி
முறைமை கெடத்தா னனுபானித்தே
யறிமினிடத்தே யறியா மக்காள்
முன்காதையு மிஃதே பின்காரண முளதோ
மொழியிணே யிழதை காள்.''79
பிணி என்னுஞ்சொல் நான்கு சீர்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.

செம்பின் பொடியுண்டு தேகமுர முண்டு
செம்பின் வடிவுண்டு செய்தவங் கையுண்டு
செம்பின் முடிவெலாஞ் தெய்வத மாகவோர்
செம்பின் குலந்திகர மாகுமே.''80
செம்பு என்னும் சொல் நான்கடியிலும், உண்டு எனும் சொல் நான்கு இடங்களிலும் மடங்கி அமைந்திருக்கிறது.

முறையாங் கெந்தி செம்பானால்
மூவே ழுலகந் தான் மயங்கும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூட்டும் வாதம் துறை கோடி
முறையாங் கெந்தி செம்பாலே
முடிக்குங் கவன மெய்யாகும்
முறையாங் கெந்தி செம்பாலே
மூளும் வாதம் மெய்யாமே.''81
இச்செய்யுளில், ‘முறையாங் கெந்தி செம்பாலே’ என்னுஞ் சொல் நான்கு அடிகளிலும் மடங்கி ஒலித்துப் பொருளாகிறது.

குணம்பெறு சுவையாம் வெந்நீர்
குறுகவெட் டொன்றாய்க் காயில்
குணம்பெறு மருந்து மாகும்
குறைவற வமுத ருந்திக்
குணம் பெறுக் காய்ந்த வெந்நீர்
கொண்டு நூறடி யுலாவிக்
குணம் பெற மாத ரோடே
கூடுவ தியல்பு தானே.''82
இந்த அறுசீர் விருத்தம் நான்கு அடிகளிலும் குணம் பெறு என்னும் சொல் மடங்கி வந்து பொருளை உணர்த்த அமைந்துள்ளது.

பழமொழி

பழமொழி என்பது முது மொழி (ணீணூணிதிஞுணூஞ) என்றும் முன்னோர் வகுத்த நெறி எனவும் பொருள்படும். பழமொழிகளைக் கூறிப் பொருளை விளக்குதலும், நீதியை உணர்த்துதலும் தமிழ் வழக்கு. அந்த வகையில், பழமொழி மருத்துவ இலக்கியங்களில் நிரம்பக் காணப்படா விட்டாலும், மருத்துவப் பழமொழியென அதிக அளவில் வழக்கில் இருந்து வரக் காணலாம்.

ஒரு தொழிலை நூல்வழிக் கற்பதைவிடவும் சிறந்தது, பயிற்சி முறையில் கற்பது என்பது மருத்துவத் துறைக்கு ஏற்றதாக இருக்கிறது. நுண்மையான செயல் பலவற்றைக் கொண்ட மருந்து செய்முறையில் குற்றம் நிகழாமலிருக்க, பயிற்று முறை தேவை என்பது பழமொழியின் மூலம் உணர்த்தப்பட்டுள்ளது.

கை காட்டாத் தொழில் முறைக்கு கரைதா னேது?''83
என்று, பயிற்றுவிக்காத தொழில் முறை எல்லையை அடையாமல் அலைந்து கொண்டிருக்கும் என்பதை விளக்குகிறது.

காமம் என்பது அளவுடன் இருக்க வேண்டும். அது அளவைக் கடந்தால் அதனால் மற்றவருக்கும் தொல்லை. அதனை மேற்கொள்ப வனின் அறிவும் மழுங்கும் என்பதைக் கூறும் பழமொழியாக,

தீராத காமிக்கு அறிவங் கேது?''84
என்பது உரைக்கப்படுகிறது.

கருங்காலி என்றொரு மரம். மிகவும் உறுதியானது. அந்த மரத்திலிருந்து கோடாலி என்னும் மரம் வெட்டும் கருவிக்குக் காம்பு செய்வர். கோடாலிக்குக் காம்பாக அமைந்த கருங்காலி, கருங்காலி மரத்தை வெட்டும் கோடாலிக்குக் காம்பாக அமைந்து விடுகிறது. இதனைக் குறிப்பிட்டு வழங்கி வரும் பழமொழி, ‘குலத்தை அழிக்க வந்த கோடாலிக் காம்பே’ என்பதாகும். அதே கருத்துடையதாக வேறு இடங்களிலும் அந்தப் பழமொழி வழங்கி வரும்.

குலந்தனக்குக் கோடாலிக் காம்பு மாச்சே''85
என்று, மருந்தே மருந்தைக் கெடுக்கும் குணத்தைக் குறிக்க வழங்குகிறது.

மருத்துவக் கலையின் அங்கமான வாதம் ஒரு விந்தையாகக் கருதப்படும். அது, பல வேலைகளைச் செய்வதனால் அவ்வாறு உரைக்கப்படும். வாதத்துக்குத் தங்கம் மூலப் பொருளாகும். தங்கம் இல்லாத வாதம் பங்கம் என்பர். அதே போல, வேதாந்தம், சிந்தாந்தம் என இரண்டு தத்துவம். வேதாந்தம், ஞானம் பெறும் வழி முறைகளை விவரிக்கும். வேதாந்தம் அறியாமல் ஞானத்தை அடைய முடியாது என்பது பழமொழியாகக் கூறப்படுகிறது.

வங்கம் முடிந்தால் தங்கம் இல்லாவிடில் பங்கம்''

வாதம் ஊதியறி, வேதம் ஓதியறி''86
என அமைந்துள்ளதைக் காணலாம்.

கடம்பு மரத்திலான கட்டிலில் படுத்துறங்கினால், உடல்வலி, குளிர் சுரம், மூட்டுப் பிடிப்பு, கண்ணோய், தொண்டைப்புண், வயிற்றுவலி, மனச்சோர்வு ஆகியன குணமாகும் என்பது மருத்துவக் குறிப்பானபடியால்,

உடம்பை முறித்துக் கடம்பில் போடு''87
என்னும் பழமொழி உருவாயிற்று.

இலுப்பை

சர்க்கரை செய்யும் ஆலை இல்லாத ஊரில், சர்க்கரைக்காக இலுப்பைப் பூவைப் பயன்படுத்திச் சர்க்கரை செய்வர். இச்சர்க்கரை, அழலை, தீச்சுரம், நீர்வேட்கை, இருமல், இளைப்பு, வீக்கம், வாயு, சேற்றுப்புண் போன்றவற்றை நீக்கக் கூடிய மருத்துவப் பண்பு நிறைந்தது. எனவே,

ஆலை இல்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.''87
சர்க்கரையை விட இலுப்பைப் பூச் சர்க்கரை சிறந்தது என்பதால் இந்தப் பழமொழி கூறப்பட்டது.

வல்லாரை

வல்லாரையை உண்டால் நினைவாற்றல் பெருகும் என்பது பொதுச் செய்தி. அதைவிட, வல்லாரையில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது என்பதைத் தேரன், வல்லாரைக் கற்பமுண வல்லாரை யார் நிகர்வார் என்கிறார். இது வாய்ப்புண், கழிச்சல், குருதிக் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, சுரம், இளைப்பு, தொண்டைக் கம்மல், வெறி, யானைக் கால், விரைவீக்கம், நெரிகட்டி, மேகப்புண், நரம்பு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாகும். அதனால் தான்,“வல்லாரை இருக்க எல்லாரும் சாவதேன்”88 என்னும் பழமொழி குறிக்கிறது.

முருங்கை

முருங்கையின் அனைத்து உறுப்புகளும் மருந்தாகிறது. என்பதற்கு,

முருங்கைக் காய்கறி முகிலிலை வேர்கொள
ஒருங்குள நோயெலாம் ஓடவும் துரத்துமே''89
என்று தேரர் தரும் குறிப்பு சான்றாகிறது. அதனால் தான்,

முருங்கை உண்ண நொறுங்குமாம் மேகம்''

முருங்கைக்காய் என்றதும் முறிந்ததாம் பத்தியம்''90
என்னும் பழமொழிகள் உருவாகி இருக்கின்றன.

ஆவாரை

ஆவாரை அனைத்துவகை மேக நோயையும் குணப்படுத்த வல்லது. குறிப்பாகச் சேர்க்கை நோய்க்குச் சிறந்த மருந்து. பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாட்டை நீக்கும். உடல் சூட்டைத் தணித்து, மேனியைப் பொன்னிறமாக மாற்றும் என்பது மருத்துவக் குறிப்பு. இதனை அறிந்தே,

ஆவாரை பூத்தால் சாவாரைக் கண்டதுண்டோ?''91
என்று, பழமொழி வினா தொடுக்கிறது.

வெங்காயம்

வெங்காயத்தின் பூ, தாள், கிழங்கு, விதை ஆகிய எல்லாமே உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. இது உடலில் வெப்பத்தை உண்டாக்கும்; சிறுநீர்ப் பெருக்கும்; கோழையை அகற்றும் என்பதால்,

வெங்காயம் உண்போர்க்குத் தங்காயம் பழுதில்லை''92
என்று பழமொழி குறிப்பிடுகிறது.

கழுதைப் பால்

குழந்தை பிறக்கும் போதே தோன்றக் கூடிய நோய்களில் செவ்வாப்பு என்னும் நோயும் ஒன்று. இதனை உள்ளங்கால், உள்ளங்கை பகுதிகளில் காணப்படும் நீல நிறத்தால் கண்டறியலாம். இது குழந்தையைப் பெரிதும் பாதிக்கக் கூடியது. இதற்குக் கழுதைப்பால் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கருத்திற் கொண்டே, குழந்தை பிறந்த உடனே கழுதைப்பால் ஊட்டிவிடும் பழக்கம் தோன்றி யிருக்கிறது. நோய்க்கான மருந்து நோயின்றியே பயன்படுத்தப் படுகிறது. இதனால் கழுதைப் பாலின் சிறப்பினை அறிந்து,

கழுதைப் பாலைக் குடித்ததாம்
அழுத பிள்ளை சிரித்ததாம்''93
என்னும் பழமொழி, வழக்கில் வந்தது.

இவ்வாறு, மருத்துவம் தருகின்ற குறிப்புகளைக் கொண்டும், அனுபவத்தின் மூலமாகவும் கண்டறிந்தவற்றைப் பிறரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக, பழமொழி அமைப்பில் கருத்துகள் வெளியிடப் படுகின்றன. பழமொழிகள் தேரையர் நூல்களில் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கீழ்க்கணக்கில் இடம் பெற்றுள்ள பழமொழி போல, மருந்தாகும் பொருளின் குணத்தைக் குறிப்பிடும் போது, அதற்கென ஒரு பழமொழியைக் கூறுகின்ற வழக்கம் அந்நூல்களில் காணப்படுகின்றன.

குறிப்பு மொழி

படைப்புக் கவிஞன், தான் சொல்லக் கருதிய பொருளை வெளிப்படுத்தக் கவிதை பயன்படுகிறது. கருத்துகளின் அளவுக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு கவிதை வடிவம் அமையும். அவற்றை, அகவடிவங்களாகவும் புறவடிவங்களாகவும் பிரிக்கலாம். கவிதை வடிவங்கள் புறவடிவமாகும், கவிதைக்குள் புதைந்திருக்கும் குறிப்பு மொழிகள், உவமங்கள், இறைச்சி, ஒலிநயம், நடை போல்வன அகவடிவங்கள் எனலாம். அகவடிவங்களை இலக்கியத்தின் உத்தி எனக் கூறலாம்.

கவிதைகளில் அமையும் சொற்கள், அவற்றுக்குரிய பொருளை வெளிப்படையாக உணர்த்துவது ஒருவகை. அவ்வாறு அமையாமல், பொருளைக் குறிக்கும் சொற்கள், பொருளைக் குறிப்பாகவும் நயமாகவும் உரைப்பது ஒருவகை. இத்தகைய குறிப்பு மொழி உத்தியை, இலக்கியத்தின் கூறுகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் கருதுகிறது.
கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறை, உவமப் போலி, இறைச்சி போன்று அமையாமல், பாட்டில் அமையும் சொற்களையும் உவமைகளையும் குறிப்பால் ஒரு சிலரே அறியத்தக்க குழுஉக்குறியால் செய்யுளை அமைத்து, இலக்கியத்துக்குப் புதிய உத்தியை வகுத்துக் காண்பது மருத்துவ இலக்கியமாகும்.

இலக்கியம் கண்டதற் கிலக்கணம் இயம்பலில்''94
என்றும்,

பழையன கழிதலும் புதியன புகுதலும்''95
என்றும்,

இலக்கணங்கூறும் பவணந்தியார், இலக்கியம் தோன்றிய பின்னரே, இலக்கணம் தோன்றிய தெனவும், பழமைகள் நிற்க, புதிய மரபுகள் உருவாவது குற்றமுடையதாகக் கொள்வதற்கில்லை, அவை காலத்தின் வகை என்றுரைப்பதனைக் கொண்டு, தமிழ் மருத்துவ இலக்கியங்கள், இலக்கண நூலோரின் கவனத்துக்கு வராமலேயே இருந்திருக்கக் காணலாம். அவ்வாறல்லாமல், கவனத்திற் கொள்ளப் பட்டிருந்தால், மருத்துவ இலக்கிய நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் புதிய வகை உத்தி முறைகளுக்கும், வேறு பல செய்யுள் அமைப்பிற்கும், இலக்கணம் வரையப் பட்டிருக்கும்.

மறைபொருள்

தமிழ் மருத்துவ நூல்களில் பயிலப்பட்டு வந்திருக்கும் சொற்கள், இடத்துக்கு இடம் மாறுபட்ட பொருளைத் தருகின்ற வட்டார வழக்கினைப் போல, சித்தர்கள் ஒருவர்க்கு ஒருவர், கல்வியால் நெருங்கிய தொடர்பினை உடையராய்ன்மையினால், ஒவ்வொரு வரும் பயன்படுத்தி வந்த சொற்களின் பொருள் மாறுபாடு உடையதாக இருக்கிறது. அச்செய்யுள்களில் அமைந்துள்ள உண்மைப் பொருள் அவரவர்களோடு நெருங்கிய சிலரால் மட்டுமே அறியப்பட்டு வந்துள்ளது. பொருளை அறியாத பிறர், அதற்கு மறைபொருள் என்றும், மறைமொழி என்றும் காரணப் பெயரைச் சூட்டினர்.

மலைவாழ் மக்கள், ஒரு மலையில் வாழ்வோர் ஒரு மொழியையும் வேறொரு மலையில் வாழ்வோர் வேறொரு மொழியையும் பேசுகின்றனர் என்பதனால், ஒருவருக்கு ஒருவர் சொல்லில், பொருளில் மாறுபாடுகள் இருப்பது இயல்பு. அதைப் போலவே, சித்தர் நூல்களில் அமைந்திருக்கும் மறைபொருள் என்பது குறிப்பு மொழி என்னும் உத்திகளாகும். அவ்வாறான உத்திகளில் சிலவற்றைக் காணலாம். வயிற்றுக் கடுப்புக்கு மருந்து கூறும் முறையில் கீழ்க்கண்டவாறு பாடல் அமைந்துள்ளது.

ஆனைக் கன்றில் ஒரு பிடியும் அசுரர் விரோதி இளம் பிஞ்சும்
கானக் குதிரை மேற்றோலும் காலில் செருப்பாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் தனிச் சாற்றில் தயங்கிக் காய்ச்சிக் குடிப்பீரேல்
மானே பொருதும் விழியாளே வடுகும் தமிழும் குணமாமே.''96
இச்செய்யுளில், ஆனைக்கன்று, அசுரர் விரோதி, கானக் குதிரை, காலில் செருப்பு, தாயைக் கொன்றான், வடுகும் தமிழும் என்னும் சொற்கள் குறிப்பு மொழியாய்க் கூறப்பட்டுள்ளன.

ஆனை என்பதற்கு, அத்தி என்றொரு பொருளும், அசுரர் விரோதி என்றால் முருகன் என்றும் பொருள் படுமாதலால் முருகன்முருக்கன் முருங்கை என்றும், குதிரை என்பதற்கு மா என்ற பொருளும், காலில் செருப்பு என்பதற்கு, செருப்பு காலின் அடியில் தட்டுப் படுவதால் செருப்படி என்றும், தாயைக் கொன்றான் என்பது வாழை என்றும், வடுகும் தமிழும் என்பது தமிழ்மொழி பேசும் தெலுங்கர்கள் மொழிக் குறிப்பு–வயிற்றுக் கடுப்பு நோயால் வாடும் போது எழுப்புகின்ற ஒலியைப் போல இருக்கும் என்று நகைச்சுவை உணர்வுடனும் பொருள் கொண்டு நோக்கினால், இப்பாடலின் பொருள் விளங்கக் காணலாம்.

ஆனைக் கன்றுஅத்திப் பிஞ்சு; அசுரர் விரோதி முருங்கைப் பிஞ்சு; கானக் குதிரைமாம்பட்டை; காலில் செருப்புசெருப்படி; தாயைக் கொன்றான் வாழைச்சாறு; வடுகும் தமிழும்வயிற்றுக் கடுப்பு எனப் பொருள்படுகிறது.
பாம்புக் கடி, வாதம், சன்னி, பேதி ஆகியவற்றுக்கும் மருந்து, குறிப்பு மொழியால் கூறப்பட்டுள்ளது.

சிரக்குமாண்குறி சிவன்விந்து வெற்றிசெறி பவனும்
அரன்பூசைக் கேற்றவனல் தீபமாகு மிவ்வைவரையும்
சரிபாகமே யளிக்கோளுங் கல்லிலாட்டித் தந்திடநல்
அரவார்கடி விஷம் பேதி யும்வாத மறுஞ்சன்னியே''97
ஆண்குறிலிங்கம்; சிவன் விந்துஇரசம்; வெற்றிவீரம்; செறிபவன் கந்தகம்; தீபம்கற்பூரம் ஆகிய இவற்றைச் சமபாகமாக எடுத்து அரைத்துக் கொடுத்தால் பாம்புக் கடி நஞ்சு, பேதி, வாதம், சன்னி, ஆகியவை நீங்கு மென்பர்.

கைத்தடியும் நாயும்

கொடிய நோய்க்கு எஃகு பற்பம் சிறந்தது. அதனைச் செய்து உண்டு வந்தால், நோயினால் வருகின்ற மரணம் தடுக்கப்படும் என்று, மருந்து செய்முறை கூறப்படுகிறது. மருந்து செய்வதற்குமுன், முன்னுரை போல கூறப்படும் கருத்தாக, இடைக்காடர் பாடல் அமைகிறது.

கோனாட்டுக் குட்டி தாயாரம் நாட்டுக் குள்ளே
கூடாவிட்டால் பாலைக் கூட்டக் கூடாதே
வானாட்டை வெள்ளாடு செம்மறி ஆட்டின்
மாற்கமறி நல்ல கம்பளி யாடே அளி
தேனாட்ட நீர்காட்டி மேலான மந்தை
சின்னக் குடிசையில் சிக்க வைப்பாயே
நானாட்ட வேணுமோ நீயாட்ட ஒணாதோ
நாமக்கோன் கைத்தடி நாயும் போகாதே.''98

கோனார்களின் உடமையான ஆட்டுக்குட்டி, அதன் தாயான ஆடுகளோடு சேராவிட்டால் பாலைக் கறக்க முடியாது! என்பதால் அவற்றோடு சேர்த்து, பால் அருந்தச் செய்க. தேவர்கள் நிறத்தைப் போல செம்மையான நிறத்தை உடைய வெள்ளாடு, கருத்த ஆடு ஆகிய வற்றுக்கு நீர் போன்றவற்றை அளிப்பாயாக! அவ்வாறு செய்த பின்பு, அவற்றைச் சின்ன குடிசைகளில் அடைத்துவை! இவற்றைச் செய்ய நான் வேண்டுமோ? நீ செய்யக் கூடாதோ? முறையாக ஆடு மேய்க்கத் தெரிந்த நமக்குக் கைத்தடியும், ஆடுகளை விரட்டிப் பிடிக்க நாயும் தேவையில்லையே! என்னும் பொருளை வெளிப்படையாகத் தருவதாக இருக்கிறது. இதனுள் மறைந்த வேறு ஒரு பொருள் மருந்தின் முறைகளை உரைப்பதாக இருக்கிறது.

எஃகு, பால் என்னும் கள் சேராவிட்டால் பற்பமாக ஆகாது! செம்மையான நிறத்தை உடைய செந்தூரமும், கறுமை நிறமுடைய மாத்திரையும், தேன், நீர் என்னும் அனுபானங்களைக் கொண்டு உண்ணவேண்டும். (செந்தூரம் தேனிலும், மாத்திரை நீரிலும்) அந்த வகைகளைச் சின்னக் குடிசையாகிய குப்பிகளில் அடைத்து வைக்க வேண்டும். இந்த மருந்துகளைச் செய்ய பெரியோர்களான நாங்கள் வேண்டுமா? முறைகளைக் கூறினால் நீங்களே செய்து கொள்ளக் கூடாதா? அம்மருந்தின் அருமைகளை அறிந்து செய்தீர்களேயானால், உயிரைப் பறித்துச் செல்ல கையில் தண்டத்தையும், நாயைப் போல இழுத்துச் செல்ல பாசக்கயிற்றையும் கொண்டு வருகின்ற எமனுக்கு வேலை யில்லை! என்னும் பொருள், உள்ளுரையாக அமைந்திருக்கிறது. சங்க இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் மருத்துவப் பாடல்களில் பொருள் புதைந்து இருப்பது காணப்படுகிறது.

பெண்ணின் உள்ளாடை

பெண்ணுக்கு உள்ளாடையாகப் பட்டோ–பருத்தியோ ஆடையாகக் கூறாமல், பித்தன், கருங்குரங்கு, காட்டானை, மலைப் பிரட்டன், பச்சோந்தி, கோட்டான், தேவாங்கு எனும் இவை கூறப்படுகின்றன. இவை, எப்படி ஆடையாக அமையும் என்பது, உள்ளுள் உறையும் பெருளாக இருக்கிறது.

கண்ணாடிப் பித்தன் கருங்குரங்கு காட்டானை
மண்ணாளும் வேந்தர் மலைபிரட்டன்விண்ணாடி
குழியாபச் சோந்தி கோட்டானும் தேவாங்கு
விழியாளின் உள்ளாடை யாம்''99
(இச்செய்யுள் வெண்பாவுக்குரிய தளையுடன் அமையவில்லை)

சிவனைச்சுட்டு கடையில் விற்றுவிடு

சிவனைச் சுட்டுக் கடையில் கொண்டு விற்றுக் காசாக மாற்றிக் கொண்டு உல்லாசமாக இருங்கள்! என்று எளிமையாக உரைப்பது போல் கடுமையான பொருளை உரைக்கப்படுகிறது. என்றாலும், பொருள் காணும் நுட்பத்தில் கடினம் தெரிகிறது.

ஆயக் கல்லை அள்ளி
அதிலே கொஞ்சம் உள்ளி
இயத்தைக் கொஞ்சம் கிள்ளி
வைத்து உருக்க வள்ளி
பொன்னாங் கண்ணி பொடுதலே
தம்பி கூனன் தலையிலே
சிவனை வைத்துச் சுடுங்கடி
கடையில் கொண்டு வில்லுங்கடி.''100

ஆயம் என்பது ஆயரைக் குறிக்கும். ஆயர்இடையர் கிருஷ்ணன் திருமால் அரிஅரிதாரம் என்றாகும். ஆயக்கல் அரிதாரம்; உள்ளி வெள்ளைப் பூண்டு; இயம்இரும்பு; வள்ளிவெள்ளி; தம்பிகூனன் அயப்பொடி; சிவன்இரசம் ஆகிய இவற்றைக் கொண்டு உருக்கினால், இரும்பு பொன்னாகும். அதனைக் கடையில் விற்றுவிடலாம் என்று கூறுகிறது.

சந்திரன் தேவி சதாசிவன் பெண்டாட்டி
அந்த முராரி அகத்துள் மனைவியும்
கெந்தகத் தோடே கிளறி வெதுப்பினால்
சந்திரரானை (சுடர்) குருவா மே''101
சந்திரன் தேவிபூ நீர்; சதாசிவன் பெண்டாட்டிகடல் உப்பு; அந்த முராரிஅரிதாரம்; அகத்துள் மனைவிகல்லுப்பு ஆகியவற்றுடன் கந்தகத்தைச் சேர்ந்து உருக்கினால் குரு மருந்தாகும் என்பது பொருளாகும்.

வசை

ஒருவனைத் திட்ட வேண்டுமென்று எண்ணிவிட்டால் எப்படி வேண்டுமானாலும் திட்டலாமோ? அப்படித்தான் தெரிகிறது. என்றாலும், உள்ளுக்குள் ஒரு பொருள் இருக்க வேண்டுமே! அது என்ன?

ஆண்டிப் பையா சங்கா ஆரயா கட்டினார் லிங்கா
குருக்க ளென்ற தாயோழி கும்பிட்டுக் கட்டினான் பேயாண்டி.''102
பிரம்ம தண்டிக்குக் குருக்கு என்றொரு பெயருண்டு. இது, லிங்கத்தைக் கட்டும் என்பதையே மேற்கண்ட பாடல் உரைக்கிறது.

சித்திராங்கி

சீரோடும் சிறப்போடும் திருமணம் செய்து வாழச் சென்ற பெண்ணை வாழவைக்காமல், செண்டால் அடித்து, ஆத்தாள் வீட்டுக்கே அனுப்பிட்டானே, மச்சான். அவ்வாறு ஓடிப்போன சித்திராங்கியைப் பற்றிக் கூறுகிறது.

பூப்பூ பூப்பூ புளியம்பூ பொன்னான கொண்டைக்குத் தாழம்பூ
அத்தை வீட்டு முக்கண் பூச்சி அந்திக்குச் சந்திக்குப் பால் காய்ச்சி
சுண்டச் சுண்ட யிறக்கி வைத்தேன் சூரியப் பன்தன் கோயிலிலே
எட்டுக் கடாவும் வெட்டிவைத்தேன் ஏழு பெண்ணுக்குத் தாலிகட்டி
மச்சான் என்ற வக்கா ளையோழி மல்லிகைச் செண்டா லடித்தானாம்
சுழன்று சுழுந்து விழுந்தாளாம் சொக்க மஞ்சள் குளித்தாளாம்
அன்று குளித்த தன்னோடே ஆத்தாள் வீட்டுக்குப் போனாளாம்
ஆத்தாள் வீட்டுச் சித்திராங்கி அமர்ந்து வாடி கோணங்கி.''103

குறிப்பு மொழியின் அடிப்படைகள்

மருத்துவ நூல்களில் காணப்படுகின்ற குறிப்பு மொழி, குழுக் குறி, மறைமொழி ஆகிய அனைத்தும் பொருள்களின் பெயர், குணம், வண்ணம், இதிகாசங்களில் அமையும் பாத்திரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன. இலக்கியங்களில் வழங்கிவரும் பழமையான சொற்களும் இடம் பெருகின்றன.

பெயர் அடிப்படை

சிவகாமி என்னும் புராணப் பெயருக்கு கௌரி என்னும் ஒரு பெயர் இருப்பதால், சிவகாமி என்று கௌரி பாடணம் குறிப்பிடப்படுகிறது. சுக்கிரன் என்னும் கோளின் பெயர் வெள்ளி என்று குறிப்பிடப்படுவதால், சுக்கிரன் என்று வெள்ளி என்னும் உலோகத்துக்குப் பெயரிடுவர். நட்சத்திரம் என்று குறிப்பிடும் பொதுப் பெயரில் பூரம் சுட்டுப் பெயராக இருப்பதால் பூரம் என்னும் பாடாணத்தை நட்சத்திரம் என்பர். தனுசு என்னும் பெயர் வில் என்றும், சிலை என்றும் பொருள் படுவதால், தனுசு மனோசிலையைக் குறிக்கும். சுக்கிலம் என்னும் பெயர் விந்தைக் குறிக்கும். பூமிக்கு விந்து இரசம் ஆனதால், சுக்கிலம் என்னும் பெயரால் இரசம் குறிக்கிறது. மால்திருமால்; தேவிதாரம் = மால்தேவி அரிதாரம் என்பர். அரி, திருமாலைக் குறிக்கும்.

குணத்தின் அடிப்படை

சுக்கு மிளகு திப்பிலி ஆகிய மூன்றும் மருந்துப் பொருள்கள். மருந்துக்கு நஞ்சு என்று பெயர். நஞ்சை விஷம் என்று வடமொழி கூறும். மூன்று மருந்து என்பது, திரிகடுகம் என்றாகி, திரிவிடம் என்று குறிக்கப்படுகிறது. முனி என்றால் முனிவர் என்றும் முனிவர் என்றால் அகத்தியர் என்றும் பொருள் கொண்டு முனி அகத்தி என்பர். காமம் கொண்டிருப்பவர்கள் நேரத்துக்கு நேரம் தனது குணத்தை மாற்றிக் கொள்வதாகக் கொண்டு, காமரூபி என்று பச்சோந்தி குறிப்பிடப்படும். சீரகம், உணவு செரிமானத்துக்கும் பசியைத் தூண்டும் குணமும் கொண்டிருப்பதால் போசன குடோரி என்றனர்.

வண்ணத்தின் அடிப்படை

சிவந்த நிறத்திலுள்ள மலர்களைச் சிவந்த மலர் என்னும் பொதுப்பெயரால் குறிப்பதைப் போல, செம்பருத்தியும், தாமிரமும் சிவந்த வண்ணத்தில் தோன்றுவதனால், சிவந்த மலர் என்று கூறப்படும். நரித்தோல் போன்ற வண்ணத்தில் இருக்கும் நாவற்பட்டை நரித்தோல் எனப்படும். மாயாபுரி தோன்றி மறையும். வண்ணத்தால் பித்தளை, தேய்த்து வைத்தவுடன் மாறிவிடும் என்பதால் பித்தளை மாயாபுரி ஆயிற்று.

பண்பின் அடிப்படை

கற்றாழை, என்றும் இளமையாக, பசுமையாக இருப்பதால், குமரி என்று குறிப்பிடப்பட்டது. திப்பிலிக்குக் காமத்தைத் தூண்டும் பண்பிருப்பதனால் காமமென்றே பெயராயிற்று. தேவ மகளிர் போல இனத்தால் என்றும் அழியாமல் இருப்பதனால், வாழை, அரமகள் எனப்பட்டது. காக்கைக்கு நரையும் திரையும் வருவதில்லை என்பதால் நரைதிரையில்லான் என்று காக்கை குறிப்பிடப்பட்டது.

எண்ணுப் பெயர் அடிப்படை

அபின் என்னும் பொருளைக் குறிக்க அ+பின் எனப் பிரித்து, அஎட்டு என்னும் எண்ணைக் குறிப்பதால் எட்டுக்குப் பின் என்று அபின் குறிப்பிடப்படுகிறது. திசை, திக்கு என்பது எட்டு கொண்டது என்பதால் எட்டு எண்ணும் எண், திக்கு எனக் கூறுவர். காது இரண்டு என்பதால், இரண்டு எண்ணும் எண், செவி என்று கூறப்படும்.

வினை அடிப்படை

வேர்க்குரு உடம்புக்கு வந்தால், அல்லது வராமல் இருக்க வெட்டிவேர் பயன்படுத்தப்படும். அதனால், வேர்க்குரு என்பது குருவேர் என்று வெட்டிவேரின் பெயராயிற்று. பன்றிக்குக் கோரைக்கிழங்கு விருப்பமான உணவு. கோரைக் கிழங்கைத் தோண்டித் தின்னும் என்பதால், பன்றி மீட்டான் என்று பெயராயிற்று. எனவே, சித்த மருத்துவ நூல்களில் காணப்படும் குறிப்பு மொழிகள், பல அடிப்படையைக் கொண்ட பெயர்ச் சொற்களாக அமைக்கப் பட்டிருக்கின்றன என்பது அறியத்தக்கது.

 

 
முதல் பக்கம் | என்னைப் பற்றி | நூல்கள் | கவிதைகள் | கட்டுரைகள் | குறிப்புகள் | பதிவிறக்கங்கள் | இணைப்புகள்
தொடர்பு கொள்ள
| பக்கங்கள் | தமிழில் மருத்துவ இலக்கியங்கள
Copyrights 2008 & Beyond - Thamizhkkuil.net. Powered by 4CreativeWeb Solutions